தனது இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் களமிறங்கிய சானியா மிர்சா தோல்வியுடன் வெளியேறினார்.

இந்தியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவில் 3, கலப்பு இரட்டையர் பிரிவில் 3 என 6 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் ஆவார். `கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை; இரட்டையர் பிரிவில் உலகளவில் நம்பர் 1 வீராங்கனை’ எனப்பல சாதனைகளை வசப்படுத்தி வைத்திருபவர் இவர்.

தற்போது 36 வயதாகும் சானியா, விரைவில் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் வரும் பிப்ரவரி 19ம் தேதி துபாயில் தொடங்க உள்ள WTA 1000 டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடருடன் டென்னிஸில் வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக சானியா அறிவித்துள்ளார்.

image

இந்த நிலையில் தற்போது மெல்போர்னில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் சானியா மிர்சா பங்கேற்றுள்ளார். அவர் பங்கேற்கும் கடைசி  கிராண்ட்ஸ்லாம் தொடர் இதுவாகும். இந்த தொடரில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் முன்னனி வீராங்கனை சானியா மிர்ஸாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்த இணை கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்தில் டெசிரே க்ராவ்சிக் மற்றும் நீல் ஸ்குப்ஸ்கி இணையை வீழ்த்தி கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிபோட்டி இன்று நடைபெற்றது. கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா – போபண்ணா இணை, பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரபேல் மாடோஸ் இணையை எதிர்கொண்டது. கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி என்பதால் வெற்றியுடன் விடைபெறும் கனவில் ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து களமிறங்கினார் சானியா. ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  

image

எதிர்முனையில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய லூயிசா ஸ்டெபானி – ரபேல் மாடோஸ் இணை 6-7 (2), 2-6 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வெற்றியுடன்  விடைபெற வேண்டும் என்றிருந்த சானியா மிர்சாவின் கனவு தகர்ந்தது. இதனால், கண்ணீருடன் சர்வதேச டென்னிஸ் கிராண்டஸ்லாம் போட்டிகளுக்கு விடை கொடுத்தார்.

தனது கடைசிப் போட்டிக்கு பின் சானியா மிர்சா உரையாற்றுகையில், நா தழுதழுத்தபடியே உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அவரது கண்களில் கண்ணீர் வடிந்தது. அவருக்கு அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாகமாக விடைகொடுத்தனர். மட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கும் டென்னிஸ் ரசிகர்களும் சானியா மிர்சாவுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.