திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேக விழா 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விமர்சையாக நடைபெற்று வருகிறது.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலை கோயிலில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறக்கூடிய இந்த குடமுழுக்கு விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். குடமுழுக்கு விழாவிற்காக கடந்த 23 ஆம் தேதி மலை மீது 90 யாகசாலை அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க எட்டு கால பூஜை நடைபெற்றது.

200 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, நூற்றுக்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தன் அலங்காரம் என முருக கடவுளை போற்றிபாட தமிழில் குடமுழுக்கு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக கங்கை, காவிரி, சண்முகநதி என பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. சிவாச்சாரியார்கள் புண்ணிய தீர்த்தத்தை ராஜகோபுரம் மற்றும் தங்க கோபுரம் பரிவார தெய்வங்கள் சன்னதிகள் மேல் கொண்டு சென்று கலசங்களில் ஊற்றி குடமுழுக்கு நடத்தி வைத்தனர்.

image

அதிகாலை 5 மணி முதல் சிவாச்சாரியார்கள் ஓதுவார்கள் வேத மந்திரங்கள் ஓத காலை 8:00மணி முதல் 9:30 மணிக்குள்ளாக குடமுழுக்கு விழா நடைபெற்று வருகிறது. குடமுழுக்கு விழாவை ஒட்டி ராஜகோபுரம் மற்றும் தங்க கோபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவப்பட்டது. அதனை தொடர்ந்து குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் படும் வகையில் தண்ணீர் பீச்சும் கருவிகள் மூலமாக புனித நீர் தெளிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ளும் இரண்டு லட்சம் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்படுகிறது. குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். குடமுழுக்கு விழா முடிந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய மலை அடிவாரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து வருகின்றனர்.

 மலை மேல் உள்ள ராஜகோபுரம், தங்க விமானம் மற்றும் மேல் தளத்தில் உள்ள பிரகார தெய்வங்களுக்கு குடமுழக்கு நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழாவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி தீபாரதனை நடைபெற்ற பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவ கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஹெலிகாப்டர் பெங்களூரில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.

image

பக்தர்களை மலை மீது அனுப்பி விரைவாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் தென் மண்டல ஐஜி அஸ்லாக்கார்க் தலைமையில் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் கூட்ட நெரிசலை கண்காணிக்கும் வகையில் ஹெலிகேம் பறக்க விடப்பட்டு கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். குடமுழுக்கு விழாவிற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புறவழிச் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு புளியம்பட்டி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் நிற்கக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகும் நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள ஆர்வமாக முருக பக்தர்கள் பலரும் பழனியில் குவிந்துள்ளனர்.

image

பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவிற்காக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 15 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு மலை மீதும், படிப்பாதையில் உள்ள கோபுரங்கள், மண்டபங்களிலும் புனரமைப்பு பணி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு பகலாக வேலை செய்து மலர் அலங்காரம் செய்துள்ளனர். குறிப்பாக மலை மீது உள்ள ராஜகோபுரம், தங்க கோபுரம், படிப்பாதையில் உள்ள சன்னதிகள் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் வராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவிற்காக மலை மீது 90 யாக குண்டம் அமைக்கப்பட்டுள்ளது.

image

விழாவில் கலந்து கொள்ள 51 ஆயிரம் பக்தர்கள் இணைய வழியில் பதிவு செய்த நிலையில், 2,000 பக்தர்கள் மட்டும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அலைபேசி எண்ணுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் அன்றைய தினம் அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை படிப்பாதை வழியாக மலை மீது செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் குடமுழுக்கு விழாவை அனைவரும் காணும் வகையில் மலை அடிவாரத்தில் 16 இடங்களில் பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் 2 லட்சம் பேருக்கு பிரசாதம் வழங்க கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

image

தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு பழனி பேருந்து நிலையத்திற்கு பக்தர்கள் வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகளில் பக்தர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை சார்பில் மலை அடிவாரம் மற்றும் படிப்பாதைகளில் மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டு மருத்துவ உதவி தேவைப்படுவதற்கு உடனடி சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பழனி குடமுழுக்க விழாவை நேரலையில் காண:

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.