நாடு முழுவதும் இன்று 74-ஆவது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.‌ சென்னையில் இன்று காலை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் தேசிய கொடியை ஏற்றிவைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, ஏ.வ.வேலு, ஐ.பெரியசாமி, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

image

ஆளுநர் வழங்கிய தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தி.மு.க.‌ கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் நேற்றே தெரிவித்தது. இதற்கு காரணமாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒருமனதாக இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட உயிர் குடிக்கும் ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம், நீட் விலக்கு, பல்கலைக்கழக சட்டங்கள், மேலும் தமிழக மக்கள் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

image

இதேபோன்று தி.மு.க.கூட்டணிகள் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள் கட்சிகள், தமிழக வாழ்வுரிமைக்கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன.‌ தி.மு.க.வின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணித்துள்ள நிலையில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அதே நேரத்தில் அ.தி.மு.க. எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில், முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமசந்திரன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டனர்.‌ மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் கிருஷ்ணசாமி, தமிழருவி மணியன், மகாத்மா காந்தியின் பேரனும், முன்னாள் கோபால் கிருஷ்ண காந்தி மற்றும் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

image

அண்மையில் ஆளுநர் தமிழ்நாடு என்பதற்கு தமிழகம் என்று குறிப்பிட்டு சர்ச்சையான நிலையில் அந்த காரணத்தை முன் வைத்தும் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை இன்று புறக்கணித்தன. நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்த ஆளுநர் மாளிகையை பார்வையிட்டார்.

தொடர்ந்து கலாஷேத்ரா பவுண்டேஷன் சார்பில் “பாரதி கண்ட பாரதம் என்ற தலைப்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.‌ இதனை ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைவரும் உற்சாகமாக கண்டு களித்தனர்‌. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.வை தவிர்த்து அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சியை புறக்கணித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.