கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் அ.தி.மு.க கட்சி சார்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டம், கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அ.தி.மு.க முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு, காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. கரூரிலும் 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. அரசு மதுபான கடைகளில் இரண்டு வகையான மதுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசு கொள்முதல் செய்யும் மதுபானங்கள் தவிர, பார்களில் இருபது ரூபாய்க்கு வாங்கப்படும் மது வகைகள் 200 ரூபாய்க்கு தனியாக விற்பனை செய்யப்படுகிறது.

பொதுக்கூட்டத்தில் பேசும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் சொந்த மாவட்டமான கரூரில், திருவள்ளுவர் தினத்தில் மது விற்பனை நடைபெற்றது. இதுகுறித்து, செய்தித்தாள்களில் செய்தி வந்திருக்கிறது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி பெற்று தந்தது அ.திமுக அரசு. கரூர் அரவக்குறிச்சி பூலாம்வலசு பகுதியில் பாரம்பர்ய முறைப்படி நடத்தப்படும் பூலாம்வலசு சேவல் கட்டு போட்டி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. ஆனால் போட்டி நடைபெறவில்லை. நான் அமைச்சராக இருந்தபோது, மூன்று முறை அனுமதி பெற்று கொடுத்து, சேவல் கட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. நடப்பாண்டில் அனுமதி பெற்று கொடுத்து சேவல் சண்டை நடத்துவதுக்கு, கரூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சருக்கு நேரமில்லை.

கோவையில் தான் அவரை சந்திக்க முடியும். கட்டுமான தொழிலில் கம்பி, சிமெண்ட், மணல் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தங்க நாக்கரக சாலைகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. கரூர் வேலாயுதம்பாளையம், செம்படை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் உட்பட ஆறு மேம்பால பணிகளுக்கு அ.தி.மு.க ஆட்சி காலத்தில் நான் அமைச்சராக இருந்தபோது, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மூலம் கோரிக்கை மனு அளித்து, தற்போது இரண்டு இடங்களில் பாலப் பணிகள் நிறைவு பெற்று மற்ற இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.

பொதுக்கூட்டத்தில் பேசும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ஒரு லாரி மணல் ரூ. 1,500 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையெல்லாம் கேட்பதற்கு நாதி இல்லை. கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் நேரடியாக வெற்றி பெற முடியாது என தெரிந்து கொண்டு, குறுக்கு வழியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களை அச்சுறுத்தியும், அடியாட்களை வைத்து கடத்தியும் வெற்றி பெற்றிருக்கின்றனர். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பெரும்பான்மையாக வெற்றி பெற்ற அ.தி.மு.க உறுப்பினர்கள் தேர்வு செய்த மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பதவியை, தி.மு.க குறுக்குவழியில் கைப்பற்றியிருக்கிறது. இவற்றுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.