வாட்ஸ் அப் குரூப்பில் யாரேனும் ஒருவர் அவரது எண்ணை மாற்றியுள்ளார் என்கிற அறிவிப்பு வந்தால் உடனடியாக அவருக்கு அழைத்து உண்மையில் அவர் எண்ணை மாற்றியுள்ளாரா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஹேக்கர்கள் ஒரு அக்கவுண்டை ஹேக் செய்து வேறு எண்ணில் இருந்து பயன்படுத்தி அதில் உள்ள தகவல்களை எடுக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து விரிவாக விளக்குகிறார் மென்பொருள் வல்லுநர் ஆர்.சர்வேஷ்.

“வாட்ஸ்அப் அக்கவுண்டினை ஹேக் செய்து அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் தெரிந்து கொள்ள பலரும் பல வழிகளைக் கையாளுகின்றனர். தற்போது வாட்ஸ்அப் குரூப் மெசேஜ்கள், பிரைவேட் மெசேஜ்களில் ஸ்பேம் மெசேஜ், ஹேக் செய்வதற்கான லிங்க்குகளை அதிகளவில் பரப்பி வருகின்றனர். பெரும்பாலான சமயங்களில் நீங்கள் முயற்சிக்காமலேயே உங்களுடைய எண்ணிற்கு வாட்ஸ்அப் -ல் இருந்து அக்கவுண்ட் லாகின் செய்வதற்கான ஓ.டி.பி வருவதைப் பார்த்திருக்கலாம்.  இவை பெரும்பாலும் டேட்டாக்களைத் திருடி அதன் மூலம் மிரட்டும் கூட்டத்தினரின் செயலாகவே இருக்கிறது. 

சர்வேஷ்

உங்களின் அனுமதியின்றி உங்களுடைய மொபைலின் முழுக் கட்டுப்பாட்டினையும் அவர்கள் வைத்திருக்கும்பட்சத்தில் எளிதாக உங்களுடைய மொபைலில் உள்ள டேட்டாக்களைத் திருட முடியும்.

முதல் வேலையாக உங்களுடைய வாட்ஸ்அப் எண்ணினை அவர்களுடைய எண்ணிற்கு மாற்றிக் கொள்வார்கள். அப்படி மாற்றப்படுமேயானால் உடனடியாக அந்த எண் இணைத்துள்ள அனைத்து குரூப்களிலும் அந்த குறிப்பிட்ட எண் புதிய எண்ணிற்கு மாறியுள்ளது எனும் செய்தி சென்றுவிடும். 

இந்த மெசேஜ் காண்டாக்டில் உள்ள தனிநபர்களுக்குச் செல்லாது என்பதை கவனத்தில் கொள்ளவும். எந்தவொரு முன்னறிவுப்புமின்றி உங்கள் பர்சனல் குரூப், வேலை சம்பந்தப்பட்ட குரூப்களில் இப்படியான எண் மாற்றப்பட்ட செய்திகளைக் கண்டால் அந்த எண்களை நீக்கி விட்டு சம்பந்தப்பட்ட நபரிடம் உறுதி செய்து கொண்டு மீண்டும் இணைப்பதே உங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யும். 

இன்று வாட்ஸ்அப் வெறும் தனிநபர் செய்திகளை மட்டும் தாங்கிச் செல்லும் செயலியாக இல்லை. பல்வேறு நிறுவனங்களின் தனிப்பட்ட தகவல்கள், பாஸ்வேர்ட்ஸ், டாக்குமெண்ட்ஸ், பிசினஸ் அக்ரிமெண்ட்டுகளை எளிதாக ஷேர் செய்து கொள்ளும் செயலியாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

பெரும்பாலான நபர்களின் முக்கிய வேலையே ஸ்பேம் லிங்க்குகளின் மூலம் குரூப்பில் உள்ள தகவல்களோடு மற்றவர்களின் தனிப்பட்ட அக்கவுண்ட்டுகளையும் களவாடுவதுதான்.

முடிந்த வரையிலும் உங்களுடைய மொபைலின் லேட்டஸ்ட் செக்யூரிட்டி அப்டேட்டுகளைத் தவறாமல் அப்டேட்டட்டாக வைத்திருங்கள். அது போக, அப்ளிகேஷன்களின் லேட்டஸ்ட் வெர்சன்களையே பயன்படுத்துங்கள். அதிகம் பயன்படுத்தாத செயலிகளை ‘அன் இன்ஸ்டால்’ செய்துவிடுங்கள். முக்கியமாக, எந்தவொரு லிங்கினையும் தேவையின்றி க்ளிக் செய்து பார்க்காதீர்கள்.

வாட்ஸ் அப்

இங்கு தொழில்நுட்ப ரீதியாக ஒவ்வொரு முறை செக்யூரிட்டி லூப்ஹோல்களை சரிசெய்து சீராக வைத்துக் கொள்ள முயன்றாலும் புதிய வழிகளைக் கண்டுபிடித்து அதன் மூலம் உங்கள் டேட்டாக்களைத் திருடுவதற்கான வாய்ப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கும். 

எந்த லிங்கினை க்ளிக் செய்ய வேண்டும், எந்த அப்ளிகேஷனை உபயோகிக்க வேண்டும் என்பது எல்லாம் நம்முடைய தேர்விலேயே இருக்கிறது‌. ஆகையால், புதிய எண்களில் இருந்து வரும் எந்தவொரு விளம்பர லிங்க்குகளையும் க்ளிக் செய்வதை கவனமாக தவிர்த்திடுங்கள்” என்று எச்சரிக்கிறார் சர்வேஷ்.

இந்த டிஜிட்டல் யுகத்தில் எல்லா விஷயங்களிலும் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.