மதுரை, திருச்சி, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களின் அரசு மருத்துவமனைகளில், வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்கக் கோரிய வழக்கில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சகா என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “கடந்த 2021-ம் ஆண்டு, முத்துகுமார் என்பவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் கட்டடப்பணியில் ஈடுபட்டிருந்தபோது காலில் காயம் ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டதால் காலில் அதிக வலி ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் அவரை காப்பாற்ற இயலவில்லை.

மதுரை அரசு மருத்துவமனை

தனியார் மருத்துவமனைகளில் புற்றுநோய், ஹெச். ஐ. வி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக வலியினால் இறப்பதைத் தடுக்க, வலி நிவாரண சிறப்பு மையங்கள், வலி நிவாரண மருந்துகள் போன்ற வசதிகள் இருக்கும். இதுபோன்ற வலி நிவாரண மையங்கள், வலி நிவாரண மருந்துகளுக்கான இருப்பு போன்றவற்றை அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த வேண்டும் என்று மனு அளித்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனை, பாலரங்கபுரம் அரசு மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் புற்றுநோய், ஹெச்.ஐ. வி, நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று வலிநிவாரண மையம் அமைக்க உத்தரவிட வேண்டும்” என இந்த மனுவில் கூறியிருந்தார்.

நீதிமன்றம்

இந்த மனு, நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் கொண்ட அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இவ்வழக்கு குறித்து சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலர், மருத்துவக் கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.