பட்டியலின மாணவர் கோகுல்ராஜ் படுகொலையில் மிக முக்கிய சாட்சியான சுவாதி, பிறழ் சாட்சியாக மாறியதால் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. மேலும், சுவாதிக்கு இரண்டு முறை அவகாசம் கொடுத்தது. ஆனாலும் கோகுல்ராஜ் படுகொலைக்கு முன்பு கோயிலில் சந்தித்துக்கொண்டது குறித்து சுவாதி, முன்னுக்குப் பின் முரணான தகவலை நீதிமன்றத்தில் அளித்ததால், கோகுல்ராஜும் சுவாதியும் சந்தித்துக்கொண்ட சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நாளை ஆய்வு செய்யப்போவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்திருப்பதால் மீண்டும் இந்த வழக்கு வேகமெடுத்திருக்கிறது. இதுகுறித்து, சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகனிடம் பேசினோம்.

ப.பா.மோகன்

“கோகுல்ராஜும் சுவாதியும் ஒரே காலேஜில் படித்திருக்கிறார்கள். நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். கோகுல்ராஜ் படுகொலை செய்யப்படுவதற்கு முன், இரண்டு பேரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சந்தித்துக்கொண்ட ஆதாரங்கள் உள்ளன. கோகுல்ராஜின் செல்போன் ரிப்பேர் ஆகியுள்ளது. அதைச் சரிசெய்ய 1,000 ரூபாய் பணம் கொடுத்து உதவுவதாக சுவாதி கூறியுள்ளார். அந்த அடிப்படையில்தான் கோகுல்ராஜும் சுவாதியும் கோயிலில் சந்தித்திருக்கிறார்கள். அப்போது, அங்கு வந்த யுவராஜும் அவரது கூட்டாளிகளும் சாதியைக் குறித்து விசாரித்திருக்கிறார்கள். இருவரும் தங்களது சாதியைச் சொன்னதும் சுவாதியை அனுப்பிவிட்டு, கோகுல்ராஜைக் கடத்தி படுகொலை செய்திருக்கிறார்கள்.

சுவாதியும் கோகுல்ராஜும் சந்தித்துக்கொண்ட சி.சி.டி.வி ஆதாரங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் உள்ளன. மிக முக்கியமாக கோகுல்ராஜைக் காணவில்லை என்று அவரது பெற்றோர் தேடியபோது, கோகுல்ராஜ் கடத்தப்பட்ட தகவலை சுவாதிதான் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, கோகுல்ராஜின் பெற்றோருடன் சென்று புகார் கொடுத்ததும் சுவாதிதான். அதோடு, மாஜிஸ்திரேட்டிடமும் கோகுல்ராஜ் கடத்தப்பட்டது தொடர்பாக ‘சத்தியமா சொல்றேன்’ என்று சொல்லி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். யுவராஜுக்கு எதிராகச் சாட்சி சொல்லக்கூடாது எனச் சாதியவாதிகள் மிரட்டியபோது, அதுகுறித்து புகாரும் கொடுத்தவர் சுவாதி. அப்படியிருந்த சுவாதிதான் தற்போது பிறழ் சாட்சியாக மாற்றப்பட்டுள்ளார். அவர் மட்டும் மாறவில்லை என்றால், நீதிபதிகள் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் செல்லவேண்டியதில்லை. சுவாதியின் சாட்சியமே முக்கியமானது.

யுவராஜ்

கடந்த 2019 ஜூன் மாதம் சுவாதியை நான் நேரில் சந்தித்து விசாரித்தேன். திருமணமாகி எட்டு மாத கர்ப்பிணியாக அவர் வந்தார். முக்கியமான தகவல்களை அவரிடம் கேட்டறிந்தேன். அவர், பிறழ் சாட்சியாக மாறியதால் அதிகம் பேசவில்லை. பாவம்… அவர் என்ன செய்வார்? அவர், இரண்டு முறை பிறழ் சாட்சியாக மாறியதற்குச் சாதிய கட்டமைப்புதான் காரணம். சாதியவாதிகளின் மிக பயங்கரமான மிரட்டல்கள் அவருக்கு உள்ளது. இப்போது, இரண்டாவது முறையாக சுவாதி கர்ப்பம் தரித்துள்ளார். அவரது கணவரை மீறி சுவாதியால் என்ன செய்ய முடியும்? என்ன விஞ்ஞானம் வந்தாலும் சொந்த சாதியில் திருமணம் செய்வது உடைந்தால்தான் சாதி ஒழியும். அம்பேத்கர் சொன்னதுபோல அகமணம் முறை உடைக்கப்படவேண்டும்.

இப்படிச் சாதியவாதிகளின் நெருக்கடி ஒருபுறம் இருந்தாலும் சமூகநீதி அரசு என்று சொல்லிக்கொள்ளும் தி.மு.க அரசு கோகுல்ராஜ் படுகொலை வழக்கைச் சரியாகக் கண்டுகொள்ளவில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் சாட்சிகளாக இருப்பவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவேண்டும், நம்பிக்கையூட்டவேண்டும். அதுவும், திருச்செங்கோடு, நாமக்கல் போன்ற பகுதிகள் பலமான சாதிய கட்டமைப்பு கொண்ட பகுதிகள். அதனால்தான், சாதிய படுகொலையில் ஈடுபட்ட யுவராஜைப் பிடிக்கமுடியாமல் திணறியது போலீஸ். யுவராஜ் ஹீரோவைபோல் சுற்றிக்கொண்டிருந்த கொடுமையெல்லாம் நடந்தது.

காவல்துறையிலும் சாதியவாதிகள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட, சாதிய கட்டமைப்புக்குள் இருக்கும் சுவாதிக்கு தி.மு.க அரசுதான் நம்பிக்கையை உருவாக்கவேண்டும். ஆனால், ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதுபோல் பட்டியலின மற்றும் சிறுபான்மை மக்களின் நலன்களில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. அவர்களுக்காக அமைக்கப்பட்ட நலவாரியங்கள்கூட சரியாகச் செயல்படவில்லை.

வழக்கறிஞர் ப.பா.மோகன்

தீண்டாமை விஷயத்தில் சமீபத்தில் அஸ்ரா கார்க் எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. தி.மு.க அரசு பட்டியலின மக்களைக் கண்டுகொள்ளவில்லை என்பதற்கு புதுக்கோட்டை வேங்கைவயல் அவலமே சாட்சி. இந்நேரம் தமிழக முதல்வர் அங்குச் சென்றிருக்கவேண்டாமா? அதனால்தான் சொல்கிறேன். அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் ஒன்றுதான். நீதித்துறை மீதுதான் எனக்கு இன்னும் நம்பிக்கையுள்ளது” என்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.