காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்குப் பதக்கம் வென்று கொடுத்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட். இவர், தேசிய பயிற்சியாளர்களால் பல ஆண்டுகளாகப் பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நேற்று முன்தினம் (18.1.2023) குற்றம் சாட்டியிருந்தார். 

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் மற்ற நிர்வாகிகளும் மல்யுத்த வீராங்கனைகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும் வினேஷ் போகட் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக 30 மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI), அதன் தலைவர் பிரிஜ்பூஷண் சரண் சிங்கைப் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்திய வினேஷ் போகட், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அதிகாரிகள் கொலை மிரட்டல்கள் விடுத்ததாகவும் கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அடுத்த 72 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும், இல்லையெனில் தேசிய விளையாட்டு மேம்பாட்டுக் குறியீடு 2011-ன் விதிகளின்படி, கூட்டமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளையாட்டு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா, இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், “இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் என்ற முறையில், மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டு குறித்து உறுப்பினர்களுடன் பேசி வருகிறேன்.

விளையாட்டு வீரர்களின் நலன் மற்றும் நல்வாழ்வு ஆகியவையே இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னுரிமையாகும். விளையாட்டு வீரர்கள் முன் வந்து தங்கள் குறைகளை எங்களிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நீதியை நிலைநாட்ட முழுமையான விசாரணையை உறுதி செய்வோம். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இதுபோன்ற பிரச்னைகளைச் சமாளிக்கச் சிறப்புக் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.