மகாராஷ்டிராவில் விதர்பா மற்றும் மராத்வாடா பகுதி மிகவும் வறட்சியான பிராந்தியங்களாகும். இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மழை குறைவாக பெய்யும். அல்லது பருவம் தவறி மழை பெய்து விவசாயிகளுக்கு கடுமையான இழப்பை ஏற்படுத்தும். இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் அதனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. மகாராஷ்டிராவில் அதிகமான தனியார் கடன் வழங்கும் சொசைட்டிகள் இருக்கிறது. இந்த சொசைட்டிகள் விவசாயிகளுக்கு தாராளமாக கடன் வழங்குகின்றன.

இக்கடனை கொடுக்க முடியாத விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் 2942 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டில் 2743 ஆக இருந்தது. ஒவ்வொரு அரசும் பதவிக்கு வந்த பிறகும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் விவசாயிகளின் தற்கொலை மட்டும் குறைந்தபாடில்லை. கடந்த ஆண்டில் அமராவதில் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 1171 பேர் தற்கொலை செய்துள்ளனர். ஒளரங்காபாத்தில் 1023 பேரும், நாக்பூரில் 339 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி கொடுக்கிறது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மகாத்மா ஜோதிராவ் புலே கடன் தள்ளுபடி திட்டத்தை மாநில அரசு உருவாக்கி இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 20487 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 32.15 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ஆனால் இன்னும் 22 ஆயிரம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படாமல் இருக்கிறது. இன்னும் 150 கோடி ரூபாய் அரசு ஒதுக்கினால் அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்துவிட முடியும் என்று வேளாண்மைத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விவசாயிகள் சங்கத்தலைவர் கிஷோரி திவாரி

இது குறித்து விவசாயிகள் சங்கத்தலைவர் கிஷோரி திவாரி கூறுகையில், ”மாநில அரசு விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காணத்தவறிவிட்டது. மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளின் பிரச்னையை புரிந்து கொள்ள அரசு தவறிவிட்டது. கிராம பொருளாதாரத்தை உருவாக்கவும் தவறிவிட்டது.

விவசாயிகளின் தற்கொலைக்கு சரியான விளைச்சல் இல்லாமல் போனது மற்றும் குடும்ப பிரச்னைதான் காரணமாகும். எனவே தற்கொலை செய்து கொண்ட ஒவ்வொரு விவசாயி குடும்பத்திற்கும் அரசு ஊழியர்கள் சென்று இது குறித்து ஆய்வு செய்யவேண்டும். உறவினர்களிடம் பேசி காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அரசு இப்போது இழப்பீட்டை கொடுத்துவிட்டு அப்படியே பிரச்னையை முடித்துவிடுகிறது என்று குற்றம் சாட்டினார்.

விவசாயிகளின் நலனுக்காக பாடுபடும் தொண்டு நிறுவனங்கள் இது தொடர்பாக கூறுகையில், விவசாயிகள் தற்கொலைக்கு விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்காதது, மன அழுத்தம், குடும்ப பொறுப்புகள், சரியான நீர்ப்பாசன வசதி இல்லாதது, மழை வெள்ளத்தால் விவசாயம் பாதிக்கப்படுவது போன்றவை காரணங்களாகும்” என்று தெரிவித்துள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே

முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் தற்கொலை இல்லாத மாநிலமாக மகாராஷ்டிராவை மாற்றுவேன் என்று தெரிவித்தார். ஆனால் கடந்த ஆண்டில்தான் அதிகப்படியான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகள் அதிக அளவில் வெளியில் நிதி நிறுவனங்களிடமிருந்தும் கடன் வாங்குகின்றனர். அவை கடுமையாக வட்டி வசூலிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.