சபரிமலை ஐயப்பன் குளித்துச் சென்றதாகக் கூறப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பழமையான உரல் குழி அருவியில், பாதயாத்திரையாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் புனித நீராடி பரவசமடைந்து வருகின்றனர்.

சபரிமலை சன்னிதானம் பின்புறம் உள்ள பாண்டிதாவளம் அருகே அமைந்துள்ளது உரல்குழி அருவி. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து விழும் அருவி நீரால் குழி உருவாகியுள்ளது. அது பாரம்பரிய ‘உரல்’ போன்ற வடிவில் உள்ளதால் அதற்கு உரல் குழி என்ற பெயர் வந்துள்ளது.

image

பம்பையின் ஆறுகளில் ஒன்றான கும்பலத்துத்தோடில் அமைந்துள்ள இந்த அருவிக்கும் ஐயப்பனுக்கும் முக்கிய பங்கு உண்டு என வரலாறுகள் கூறுகின்றன. ஐயப்பன் மகிஷியைக் கொன்றுவிட்டுத் திரும்பும் போது, இந்த நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு, பண்டிதாவளத்தில் ஒரு இடத்திற்கு அருகில் இருந்து ‘பிராமிண தட்சிணை’ பெற்றார் என்பது ஐதீகமாக உள்ளது.

அருவி குறுகலாகவும், தண்ணீர் குறைவாகவும் விழுகிறது என்றலும் ஐயப்பன் குளித்த அருவி என்பதால் அது பக்தர்களை வெகுவாக ஈர்க்கிறது. வண்டிப் பெரியாறு அருகே சத்திரம் – புல்லுமேடு வழியாக பாரம்பரிய வனப் பாதையில் பாதயாத்திரையாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் இந்த உரல் குழி அருவியில் நீராடி ஆனந்தமடைகின்றனர்.

image

பிற வழித்தடங்கள் வழியாக சபரிமலை வரும் பக்தர்களும் தரிசனம் முடித்து சபரிமலையிலிருந்து கீழ் இறங்கும் முன், உரல் குழி அருவியில் குளித்து மெய் சிலிர்த்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.