சென்னையில் 46வது புத்தகத் திருவிழா தொடங்கித் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதையொட்டி தினமும் ஓர் ஆளுமையின் புத்தகப் பரிந்துரைகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று பத்திரிகையாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான கவிதா முரளிதரன் அவர்களின் புத்தகப் பரிந்துரைகளைப் பார்க்கவிருக்கிறோம். இதோ அவர் பரிந்துரைத்த 5 புத்தகங்கள்…

1. பெண் ஏன் அடிமையானாள்? – தந்தை பெரியார் 

“இந்த வருடம் புத்தகக்காட்சி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இப்போது நிகழ்வு முடியும் இறுதித் தறுவாயில் பன்னாட்டு சர்வதேச புத்தகக் காட்சியாக நடைபெறுவது கூடுதல் சிறப்பு. இந்நிலையில் வாசகர்களுக்கு நான் 5 புத்தகங்களைப் பரிந்துரை செய்ய வேண்டுமென எண்ணுகிறேன். முதலில் நான் பரிந்துரை செய்வது தந்தை பெரியார் அவர்கள் எழுதிய ’பெண் ஏன் அடிமையானாள்’. இதைth தந்தை பெரியார் அவர்கள் 1934-ல் எழுதினார். இன்றளவும் அந்தப் புத்தகத்தின் தேவை நம் சமூகத்திற்கு இருக்கிறது என எண்ணுகிறேன். சந்திக்கும் கல்லூரி மாணவியரிடம் நான் பரிந்துரைக்கும் முக்கியமான நூலாக இது இருக்கும். ஏனெனில் இன்றைக்குக்கூட நாம் பேசச் தயங்கும் பல விடயங்களை அன்றே உடைத்துப் பேசியுள்ளார் பெரியார்.

பெண் ஏன் அடிமையானாள் – தந்தை பெரியார்

குறிப்பாக கற்பு என்பது இருந்தால் அது இரு பாலினருக்கும் பொதுவான ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு பாலினத்தவர்களுக்கு மட்டும், குறிப்பாகப் பெண்களுக்கு மட்டும் இருக்கிறது, அவர்கள் மட்டும் பின்பற்ற வேண்டும் என்பதைச் சாடியுள்ளார். மேலும் சொத்துரிமை என்பதும் இருபாலினத்தினருக்கும் சமமாக இருக்க வேண்டும் எனப் பேசியுள்ளார். அவர் பேசிப் பல வருடங்கள் கழித்துதான் சட்டமே இயற்றப்பட்டது. அது இன்றைக்கும் சமூக அளவில் நடைமுறைப்படுத்தபட்டதா என்பதும் கேள்விக்குறிதான்.

அதே போல அன்றைக்கே மறுமணம் பற்றியும் பேசியுள்ளார். பாலியல் தொழிலாளர்கள் என்று வரும் போது, பல பெண்ணியவாதிகளுக்கு முன்பே பெரியார் இதைப் பற்றிப் பேசியுள்ளார். நீதி மற்றும் சமத்துவம் எவ்வாறு வீட்டிலும் செயல்படுத்த வேண்டும் என்பதை இப்புத்தகத்தில் பேசியுள்ளார். ஆகவே இப்புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டுமெனப் பரிந்துரை செய்கிறேன்.

2. ஜாதியற்றவளின் குரல் – ஜெயராணி – எதிர் வெளியீடு 

இந்திய இதழியலில் மிக முக்கியமான குறியீடாக ஜெயராணி எழுதிய ‘ஜாதியற்றவளின் குரல்’ என்னும் நூலினைச் சொல்வேன். வெகுஜன ஊடகத்தில் இருந்துகொண்டே மக்களின் பிரச்னைகளைத் தொடர்ந்து பேசிக்கொண்டும் எழுதுக்கொண்டும் இருந்தவர் ஜெயராணி. அப்போது அவர் எழுதிய கட்டுரைகள் பல இதழ்களில் வெளிவந்தன. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அக்கட்டுரைகள் அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் மாண்பை மீட்கக் கூடியதாகவே இருக்கின்றன.

ஜாதியற்றவளின் குரல் – ஜெயராணி

குறிப்பாகச் சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்படுகிற புதிரை வண்ணார் சமூகம் குறித்துப் பேசியுள்ளன. இப்புத்தகம் இன்னும் திறக்கப்படாத பல கதவுகளை, பல ஜன்னல்களை திறக்கக்கூடியது. ஆகவே வாசகர்கள் இந்நூலினை வாசிக்க வேண்டுமென வேண்டுகிறேன்.

3. தெய்வமே சாட்சி – ச.தமிழ்ச்செல்வன் – பாரதி புத்தகாலயம்  

தெய்வமே சாட்சி எனும் நூல் தோழர் ச.தமிழ்ச்செல்வன் பல ஆண்டுகள் பல இடங்களுக்குச் சென்று எழுதித் தொகுத்த  நூலாகும். வரலாறு என்பது ஆண்களின் வரலாறாகவே உள்ளது. பெண்களின் வரலாறு என்பது குறைவாகவே உள்ளது. இந்தப் புத்தகமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இருந்தும் அக்காலத்தில் இருந்த பெண்களின் கதைகள் இன்று நம் முன் சிலைகளாக உள்ளன.

தெய்வமே சாட்சி – ச.தமிழ்ச்செல்வன்

உதாரணத்துக்கு குழந்தை வரம் வேண்டி நடந்து வந்த பெண், இறந்து சிலையான மலட்டம்மன் கதை, சாதி மாறித் திருமணம் செய்ததால் கொல்லப்பட்டு பின் தெய்வமாக்கப்பட்ட பெண்களின் கதை எனப் பல கதைகள் உள்ளன. இவை அனைத்தையும் சேகரித்துக் கள ஆய்வு செய்து பெண்களின் மீது தொன்மத்தில் வன்முறை எப்படிச் செயல்பட்டிருக்கிறது என்பதை விரிவாகக் கூறியுள்ளார். ஆகவே வாசகர்கள் சமூகத்தின் இன்னொரு நிலையைப் புரிந்துகொள்ள இந்நூல் உதவும் என்பதால் இந்நூலினை நான் பரிந்துரை செய்கிறேன்.

4.மார்க்சிய அம்பேத்கரிய பெரியாரிய அரசியல் சூழலியல் – மு.வெற்றிச்செல்வன் – பூவுலகு

சூழலியல் பிரச்னைகள் என்பது மேட்டுக்குடி மக்களின் பிரச்னையாகவே பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 25 ஆண்டுக்காலத்தில் அது மாறி அடித்தள மத்திய வர்க்க மக்களின் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாகக் கூடங்குளம் போன்ற அணு உலை குறித்த சூழலியல் பிரச்னைகளில் நேரிடையாகப் பாதிக்கப்படுவது அடித்தள மீனவ மக்களே ஆகும்.

மார்க்சிய அம்பேத்கரிய பெரியாரிய அரசியல் சூழலியல் – மு.வெற்றிச்செல்வன்

இந்தச் சூழலியல் பிரச்னைகளைப் பற்றி அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த தலைவர்கள் பேசவில்லை என்றாலும் அவர்களின் தத்துவத்தின் அடிப்படையில், இதை நாம் எவ்வாறு அணுகலாம், அரசியல் தீர்வை நோக்கி எவ்வாறு நகரலாம் என்பதை இந்நூல் பேசுகிறது. ஆகவே வாசகர்கள் அனைவரும் இந்நூலினை வாங்கிப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

5. பாய்ச்சலூர் பதிகம் – உத்திரநல்லூர் நங்கை

இப்போது நான் சொல்லப்போகின்ற நூலினை யாரேனும் பதிப்பில் கொண்டு வர வேண்டும் என்பதே என் வேண்டுகோள். அந்த நூல் 15-ம் நூற்றாண்டில் உத்திரநல்லூர் நங்கை அவர்களால் எழுதப்பட்ட ‘பாய்ச்சலூர் பதிகம்’. ‘கர்ணன்’ திரைப்படத்தின் உரையாடலின் போது கவிஞர் யுகபாரதி அறிமுகம் செய்த நூல் இது. அத்திரைப்படத்தில் ‘மஞ்சனத்தி புராணம்’ பாடல் எழுதுவதற்கு இந்நூல் உதவியதாகக் கூறியிருப்பார். பதிகம் என்றால் பத்துப் பாடல்கள் அடங்கிய தொகுப்பு என்று பொருள், கூடுதலாக ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலும் இருக்கும். ஆனால் இந்த நூலினில் அது இல்லை. இந்தப் புத்தகத்தில் நங்கை சாதியை எதிர்த்துப் பாடல் இயற்றியுள்ளார். அதாவது நங்கை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் வேதம் கற்றுக்கொள்ள வேண்டுமென ஓர் அந்தணரிடம் வேண்டினார். அவ்வாறு வேதம் கற்றுக்கொண்ட பின்னர் அந்த அந்தணரையே மணந்துள்ளார்.

மஞ்சனத்தி பாடல்

இதற்கு பாய்ச்சலூர் கிராமத்து மக்கள் நங்கையைத் தீயில் போட வேண்டுமென்று முடிவு செய்தனர். எதற்காக என்றால், அக்காலத்தில் பிராமணர்களைத் தவிர வேறு யாரும் வேதம் கற்றுக்கொள்ளக்கூடாது என்ற விதியினை மீறியதாலும், சாதி மீறிக் கலப்புத் திருமணம் செய்துகொண்டதாலும் ஆகும். இவ்விரண்டும் அக்காலத்தில் பெரும் குற்றமாகப் பார்க்கப்பட்டன. நங்கை இதைத் தனக்கு ஏற்பட்ட அநீதியாகக் கருதி பாய்ச்சலூர் மக்களுக்கெதிராகப் பாடல் இயற்றினார்.

அதை உங்களிடம் வாசித்துக் கட்டலாம் என்று எண்ணுகிறேன்…

சந்தனம் அகிலும் வேம்பும்

தனித் தனி வாசம் வீசம்

அந்தணர் தீயில் வீழ்ந்தால்

அதன்மணம் வேற தாமோ

செந்தலைப் புலையன் வீழ்ந்தால்

தீமணம் வேற தாமோ

பந்தமும் தீயும் வேறோ

பாய்ச்சலூர்க் கிராமத்தாரே

நங்கை

இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால், “சந்தனம், வேம்பு முதலிய பொருள்களைத் தீயில் போட்டால் வேறு வேறு வாசம் வீசும். ஆனால் புலையரையும் அந்தணரையும் வீசினால் அதே வண்ணம் வேறு வேறு வாசம் வீசுமா, இருவரும் மனிதர்கள்தானே?” என்னும் கேள்வியைப் பாய்ச்சலூர் மக்களிடம் கேட்குமாறு பாடல் இருக்கிறது. இது 15-ம் நூற்றாண்டில் வந்த முதல் சாதி எதிர்ப்புப் பாடலாக இருக்கும் என்று கருதுகிறேன். இந்தப் பாடல் இணையத்தில் இருக்கிறது. வாசகர்கள் அந்தப் பத்துப் பாடல்களையும் வாசிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.