விழுப்புரம் மாவட்டம், வானூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் நைனார் பாளையம். இந்த கிராமத்தில் சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். போகிப்பண்டிகை அன்று, ‘வெள்ளந்தாங்கி வீரனார்’ அய்யனுக்கு ஆண்கள் மட்டுமே பொங்கலிடும் வழக்கம் இந்த கிராமத்தில் இருந்து வருகிறது. வழி வழியாகப் பின்பற்றப்பட்டு வரும் இம்முறைப்படி அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து, நேற்றைய தினம் பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொண்டுள்ளனர்.

இந்த அதிசயப் பொங்கலிடும் முறை குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவரிடம் பேசினோம். “மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், கொள்ளிடம் அருகே தற்போது முதலைமேடு எனும் ஊர் இருக்கிறது. அந்தப் பகுதிக்கு முற்காலத்தில் `வெள்ளந்தாங்கி இருப்பு’ எனும் பெயர் இருந்தது. அதுதான் எங்களுடைய பூர்வீகம்.

படையல்

ஒரு காலத்தில் சோழர்களின் உண்மை விசுவாசியாக இருந்த பாளையக்காரர்களின் வழி வந்தவர்கள் நாங்கள். சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் போது தங்களது குலத்தொழிலான விவசாயம் பார்க்கத் தொடங்கியுள்ளார்கள். ஆனால், அந்தப் பகுதியில் வருடா வருடம் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்படைந்திருக்கிறது. எனவே, இனி இங்கு இருக்கக் கூடாது என்று அங்கிருந்து ஆறு தலைக்கட்டுக்காரர்கள் மட்டும் சுமார் 200 வருடத்திற்கு முன்பு இங்கு வந்திருக்கிறார்கள். நைனார் பாளையம் வருவதற்கு முன், முத்தம்பாளையத்தில் சில வருடம் தங்கி இருந்துள்ளனர். ஆனால், அந்த இடமும் அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் போயுள்ளது.

அப்போது வானூர் பகுதியை சேர்ந்த ஒரு நபருடன் அவர்களுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த நபரிடம், ‘எங்களுக்குத் தண்ணீரால் பாதிப்பு இல்லாத இடம் வேண்டும்’ எனக் கூறியுள்ளனர். அந்த நபரும், வானூர் பகுதிக்கு அழைத்து வந்து காண்பித்திருக்கிறார். அப்போது கனமழை பொழிந்துள்ளது.

ஆனால், தண்ணீர் ஏதும் தேங்காமல், பாதிப்பு இல்லாமல் வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் இருந்த ஓடைகளின் வழியே நீரானது வழிந்தோடியுள்ளது. அதனால் அவர்களுக்கு இந்த இடம் மிகவும் பிடித்துவிட்டது. தண்ணீரால் எப்போதும் பாதிப்பு ஏற்படாத வளமான மருத நிலமாக இந்த இடம் இருந்திருக்கிறது.

பொங்கல் வைக்கும் ஆண்கள்

மேலும் இங்கு ‘நைனார் சித்தர்’ ஒருவரும் இருந்திருக்கிறார். பாளையக்காரர்கள் வழிவந்த எங்கள் மூதாதையர்கள், இங்கு குடி பெயர்ந்து வந்ததால் ‘நைனார் பாளையம்’ எனப் பெயர் ஏற்பட்டுள்ளது.

எங்களது குலதெய்வம் ‘ஸ்ரீ சைவ வீரன்’. நாங்கள் உயிர் பலி ஏதும் தெய்வத்திற்குத் தருவது கிடையாது. தட்சிணாயனத்தின் இறுதி நாள் போகிப்பண்டிகை. இந்த தினத்தன்று, எங்கள் ஊரின் ஆண்கள் மட்டும் குலதெய்வ வழிபாடு செய்வது வழக்கம். அன்றைய தினம் உணவு ஏதும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருப்போம்.

எங்கள் ஊரின் பழைய குளக்கரையின் தென்பகுதியில் உள்ள பனை மரத்தின் அடியில் வீரன், அம்மன், மின்னடையான் எனும் மூன்று தெய்வங்கள் இருக்கும். அந்த தெய்வங்களுக்கு போகிப் பண்டிகையின் பிற்பகலில் ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரத்தில் அனைத்துக் குடும்பத்து ஆண்கள் மட்டும் பொங்கல் கூடையுடன் சென்று பொங்கல் வைப்போம். ஒரு குடும்பத்தின் சார்பில், 9 படி நெல் மட்டும் எடுத்து உரலில் போட்டுக் குத்தியெடுப்போம். அதில் ஒரு கைப்பிடி அரிசியைத் தனியாகவும், சிறிது அரிசியைத் தனியாக எடுத்து மாவிளக்கும் செய்துக்கொள்வோம். குளக்கரையில் வடக்கு – தெற்காக லேசான பள்ளம் தோண்டி, அடுப்பு மூட்டிக்கொண்டு பானை அல்லது பித்தளை பாத்திரத்தில் பொங்கல் வைப்போம்.

பாடல் பாடும் பெரியவர்.

பொங்கல் பொங்கி வரும் நேரத்தில், ‘பொங்கலோ பொங்கல்’ என கூறி மகிழ்ந்து கொலவை போடுவோம். இரவு 7 மணிக்கு மேல் சாமி சிலையை வடிப்போம். பின்னர், எங்களது குளத்தில் பெரிய தலைக்கட்டுக்காரர்களில் ஒருவரான சுந்தரம் என்பவர் தனது வாயைக் கட்டிக்கொண்டு, வரிசையாக வைக்கப்படும் பொங்கல் பானையில் இருந்து கொஞ்சம் பொங்கலை எடுத்து ஆலமரத்தின் இலையில் வரிசையாக வைப்பார். அதேபோல், தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்த கைப்பிடி அரிசியையும் தனித்தனி ஆலமர இலையில் வரிசையாக படையல் வைத்து தெய்வத்திற்கு சூடம் ஏற்றுவோம்.

அப்போது குருமணி என்னும் பெரியவர், எங்களது குல சாமியின் வரலாறு மற்றும் படையல் முறைகள் குறித்து பாடலாகப் பாடுவார். அது முடிந்ததும் தீபாராதனையும் நிறைவு பெறும். அதன் பின்னர், படையலிட்ட பொங்கலையும், அரிசியையும் தனித்தனியாக ஒன்றாகச் சேர்த்து விடுவார்கள். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பொங்கலை எடுத்து ஒவ்வொரு பானையிலும், அரிசியை அதன் மீதுள்ள சட்டியிலும் போடுவார்கள். அதனைத் தொடர்ந்து, ‘கோவிந்தா… கோவிந்தா!’ என கோஷம் போட்டுக்கொண்டு வீட்டுக்குப் புறப்படுவோம்.

வழிபாடு

அந்த சத்தம் கேட்டதும், எங்கள் வீடுகளில் இருக்கும் குடும்பத்தார்கள் கதவினைத் திறந்து வைத்து, வீடுகளின் வாசலிலும் பூஜை அறையிலும் விளக்குகளை ஏற்றி வைத்துவிட்டுத் தனி அறையில் இருப்பார்கள். யாரும் எதிரே வர மாட்டார்கள். இது எங்களுடைய மூதாதயர் காலம் தொட்டு மரபாக இருந்து வருகிறது. பொங்கல் கூடையை சாமி அறைக்கு எடுத்துச்சென்று வைத்ததும், குடும்பத்தாரை அழிப்போம். அதன் பின்னர் வீட்டுமுறை சாப்பாட்டுப் படையலையும் உடன் வைத்து தெய்வத்தை அனைவரும் வழிபட்டு விரதத்தை முடிப்போம். கடவுள் மறுப்பு கொண்டோர் கூட இந்தப் பொங்கலை வைக்க ஊருக்கு வந்து விடுவார்கள்” என்றார் ஆனந்தமாக.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.