பற்கள் குறித்த அறிவியல்ரீதியான தெளிவை ஏற்படுத்தி, பொதுவாக எழும் கேள்விகளுக்கு விடை காண்பதே இத்தொடரின் நோக்கம். பல் மருத்துவத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, தனியார் பல் மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியரான பா.நிவேதிதா, இத்தொடரின் முதல் அத்தியாயத்தில் பற்கள், அவற்றில் ஏற்படும் சொத்தை, அதன் அறிவியல் காரணிகள், அறிகுறிகள் குறித்து விவரித்தார். இந்த அத்தியாயத்தில் பல் சொத்தையின் வகைகள் என்ன, அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகளை பார்க்கலாம்…

பா.நிவேதிதா | பல் மருத்துவத்துறை இணை பேராசிரியர்

பல் சொத்தை ஏற்படுவது எப்படி?

வாய்க்கு ருசியாக இருக்கிறதே என்று மனம் விரும்பியதைச் சாப்பிடுகிறோம். இதன் விளைவாக பல் சொத்தை வந்துவிடும் ஆபத்து உள்ளது. பல் சொத்தை என்பது ஒரு விநோதமான நோய். உலகம் உருண்டை, பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் எப்படி நாம் உணருவதில்லையோ, அப்படித்தான் பல் சொத்தையையும் நாம் உணருவதில்லை. எனாமல் (Enamel) என்ற லேயரில் இருந்து தொடங்கும் பல் சொத்தை, பற்களின் ஆழத்திற்குப் பரவ, சுமார் ஆறு மாதங்களில் இருந்து ஐந்து வருடங்கள்கூட ஆகலாம், அது நம் உணவுப் பழக்கத்தைப் பொறுத்தது.

சென்ற வாரம் நான் கூறியது போல், எனாமல் என்பது நரம்பு முடிச்சுகளற்ற, உயிரற்ற திசு. பல்லின் ஓரிடத்தில் சொத்தை இருக்குமானால் அதற்கான எந்த அறிகுறியும் பெரும்பாலும் இருக்காது. சில நேரங்களில் உணவுத்துகள் மாட்டிக் கொள்ளும், அவ்வளவே. அடுத்த லேயரான ‘டென்ட்டின்’-க்கு (Dentin) போகும்போது பல் கூச்சம், சிறு வலி தொடங்கும். ஏனென்றால் இந்த லேயரில் இருந்து பற்களின் உயிர் தொடங்குகிறது. இனிப்பு வகைகள், ஜில்லென்ற ஐஸ்கிரீம், பேரிச்சம் பழம் என சாப்பிடும்போது கனநேரம் கூச்சம் ஏற்படும். பிறகு அந்த உணர்வு நின்றுவிடும். இப்போதாவது நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும். சொல்லப் போனால் இதுவே தாமதம்தான்.

பல் சொத்தை நிலைகள்

பல் வலி உண்டாவது இப்படித்தான்

இதற்கடுத்த லேயரான pulp-க்கு சொத்தை பரவும்போது தான் வலி என்ற ஒன்றை நாம் முதலில் அனுபவிக்கிறோம். இந்த வலியானது பல் இடுக்கில் உணவு மாட்டும்போது ஏற்பட்டு பின்னர் மறைந்துவிடும். சில நேரங்களில் இனிப்பாகவோ, ஜில்லென்றோ, சூடாகவோ உணவுண்டு முடித்த பிறகு சில நிமிடங்களுக்கு வலி நீடிக்கலாம். இந்த நிலைக்கு வந்த பிறகு நீங்களே பல் மருத்துவரைத் தேடிச் சென்றுவிடுவீர்கள்.

இந்த நிலையையும் தாண்டி பற்களின் வேரினைச் சுற்றி சொத்தை பரவத் தொடங்கும்போது தான் வலி ஏற்படுகிறது. வேரைச்சுற்றி சீழ் சேர்ந்துவிடும். இரவில் படுத்துறங்கும் போது வலி அதிகமாகும். பெரும்பாலானவர்கள் வலியைத்தான் தொடக்கநிலை என்றே கருதுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை வலி என்பது இதுதான் முதல்முறையாகும்.

பல் சொத்தை என்பது பல்லின் மேல் பகுதியில் இருந்தும் தொடங்கும். சிலநேரங்களில் இரண்டு பற்களின் இடுக்கில் இருந்தும் தொடங்கும். இந்த நேரத்தில் சொத்தை எந்தளவு பரவி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள, IOPA என்ற X ray தேவைப்படலாம். ஏனென்றால் சிகிச்சை முறை எந்த லேயரில் சொத்தை இருக்கிறது என்பதைப் பொறுத்து வேறுபடும்.

பல் சொத்தையை காண்பிக்கும் IOPA X Ray

பல் வலி ஏற்பட மற்ற காரணிகள்

பல் சொத்தையைத் தவிர பற்களின் அழற்சியினாலும், அதாவது பற்களின் தேய்மானத்தினாலும் பல் வலி ஏற்படலாம். பற்களை நறநறவென்று தூக்கத்தில் கடித்தல், தவறான பல் தேய்க்கும் முறை ( horizontal brushing), சுண்ணாம்பு, செங்கல், ஆலங்குச்சி, வேலங்குச்சி, கரி, ஏன் சிலவகை பற்பொடிகூட பற்களின் எனாமல் போக காரணமாக இருக்கலாம். பல் சொத்தையினால் ஏற்படும் அனைத்துவிதமான கூச்சமும் வலியும், பல் தேய்மானத்திலும் ஏற்படலாம்.

சிகிச்சை முறைகள்:

பல் சொத்தையை, அது எனாமலில் இருக்கும்போதே கவனித்து விட்டால், மிக எளிதாக Resins மற்றும் Pit and fissure sealants மூலம் சொத்தையை எடுத்துவிட்டு அடைத்து விடலாம். இதுவே டென்ட்டினில் சொத்தை பரவி விட்டால், அது மேலோட்டமாக இருந்தால், வெள்ளி மற்றும் பற்கள் நிறத்திலேயே உள்ள சில பொருள்களை வைத்து பல்லை அடைத்து விடலாம்.

ஆனால், இதுவே பல் சொத்தை கொஞ்சம் ஆழமாக இருந்தால், மருந்து பொருளை ( calcium hydroxide) வைத்து, அதன் மேல் தற்காலிகமாக அடைத்து விடுவோம். அதற்கு பிறகு வலி எதுவும் வரவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு, பின்னர் வேறொருநாளில் நிரந்தரமாக அடைத்துவிடுவோம். இதுவே சொத்தை pulp என்ற ஆழமான இடத்திற்குப் பரவி விட்டால், பெரும்பாலும் வேர் சிகிசிச்சை ( Root canal treatment) தான் செய்யப்படும். இந்தச் சிகிச்சையில் தொற்றுக்கு ஆளான திசுக்களை முற்றிலுமாக எடுத்துவிட்டு அந்த இடத்தை அடைத்து விடுகிறோம். இந்த முறையில், வலி வந்த பற்களைப் பிடுங்காமல் காப்பாற்ற முடிகிறது. என்ன இருந்தாலும் நம் சொந்தப் பல்லுக்கு அது ஈடாகுமா?

வேர் சிகிச்சை முறை

மாத்திரைகள் தீர்வல்ல…

பல் சொத்தையைப் பொறுத்தவரை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது, இது மாத்திரைகளால் சரிசெய்யக்கூடிய நோய் அல்ல. பாதிப்புக்கு ஏற்ப முழுக்க பற்களில்தான் சிகிச்சை செய்ய வேண்டும். மாத்திரை என்பது தற்காலிகமான வலி நிவாரணியே.

நிறைவாக, இந்த வாரத்தின் Take Home Message…. பற்களைத் தேய்ப்பதற்கு சிறந்த கருவி fluoridated பற்பசை மற்றும் டூத் பிரஷ். இது எந்த பிராண்ட் என்றாலும் சரி. வேறு எதையும் பயன்படுத்த வேண்டாம்.

அன்றாடம் ‘டென்ட்டல் ஃப்ளாஸ்’ (Dental floss) உபயோகிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது பற்களின் இடுக்கில் இருக்கும் உணவுப் பொருள்களை அகற்ற உதவும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை கட்டாயமாக பல் மருத்துவரைச் சந்திக்கவும்.

அடுத்த வாரம்… வாய்க் குழியில் (Oral Cavity) ஏற்படும் புற்றுநோய் குறித்து விரிவாகப் பார்க்கலாம்!

பராமரிப்போம்…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.