சென்னையில் 46வது புத்தகத் திருவிழா தொடங்கித் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதையொட்டி தினமும் ஓர் ஆளுமையின் புத்தகப் பரிந்துரைகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று வழக்கறிஞர் மற்றும் சமூக செயற்பாட்டாளரான அருள்மொழி அவர்களின் புத்தகப் பரிந்துரைகள் இதோ…

1. இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் – ப.திருமாவேலன்

“வாசகர்கள் அனைவரும் அனைத்து கருத்துகளுடைய புத்தகங்களையும் வாங்கி படிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். எதிர் கருத்து கொண்ட புத்தகங்கள் படிப்பதன் மூலமாகத்தான் நமது கருத்தில் ஆழமான புரிதல் உண்டாகும். எனவே, வாசகர்கள் எந்தச் சார்ப்பு நிலையும் இல்லாமல் எல்லா புத்தகங்களையும் வாங்கும்படி பரிந்துரை செய்கிறேன். நான் மிகவும் விரும்பி படிக்கக் கூடியது பெரியாரின் புத்தகங்களைத்தான். அதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய புத்தகமாக ப.திருமாவேலன் எழுதிய ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்’ என்று இரண்டு பாகமாக வெளிவந்த நூலினைக் கூறிப்பிடுவேன்.

1. இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் – ப.திருமாவேலன்

இது கிட்டத்தட்ட பெரியாரின் வரலாறு மட்டுமல்ல பெரியாருக்கு முன்னாலும் பெரியாருடைய சமகாலத்திலும் வாழ்ந்த பல தலைவர்களுடைய வாழ்க்கை வரலாற்றுப்போக்கு எப்படியெல்லாம் இருந்தது பின் எப்படியெல்லாம் மாறியது என்று சொல்கிறது. மேலும் அப்படிப்பட்ட காலகட்டங்களில் ஒவ்வொரு பிரச்னையிலும் பெரியாரின் நிலைப்பாடு என்ன, அதை இன்றைக்கு நாம் எப்படி பார்க்கிறோம் என்கிற ஓர் ஆழமான அலசலைத் தருகிறது. ஆகவே வாசகர்கள் இதை வாங்கி படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

2. சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் – முனைவர் வளர்மதி – கருப்பு பிரதிகள் / கருஞ்சட்டைப் பெண்கள் – ஓவியா – கருஞ்சட்டை பதிப்பகம்

போராட்ட பெண்கள் வரலாறு என்று வரும்போது சுதந்திரப் போராட்ட பெண்கள் பற்றிப் படித்திருப்போம். காங்கிரஸ் தியாகிகள் பற்றிப் படித்திருப்போம். ஆனால் எவ்வளவோ உழைப்பைக் கொட்டி இந்த சமூக மாற்றத்துக்கு வித்திட்ட திராவிட இயக்க பெண்கள் பற்றிப் படித்திருக்கிறோமா என்றால் கேள்விக்குறிதான். அவர்களில் ஒரு சில நபர்களையே நமக்குத் தெரியும். ஆனால் நமக்குத் தெரியாதவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

2. சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் – முனைவர் வளர்மதி – கருப்பு பிரதிகள் / கருஞ்சட்டைப் பெண்கள் – ஓவியா – கருஞ்சட்டை பதிப்பகம்

அவர்களுடைய போராட்ட வாழ்க்கை வரலாற்றை எல்லாம் தொகுத்து தோழர் ஓவியா ‘கருஞ்சட்டைப் பெண்கள்’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார். இதேபோன்ற மற்றொரு நூலை ‘சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்’ என்று கருப்பு பிரதிகளும் வெளியிட்டுள்ளது. இவ்விரு நூல்களையும் வாங்கி படிக்குமாறு பரிந்துரை செய்கிறேன்.

3. போராட்டங்களின் கதை – அ.முத்துக்கிருஷ்ணன் – விகடன் பிரசுரம்

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டை மையப்படுத்தி நம்முடைய தலைவர்களால், மக்களால் நடத்தப்பட்ட மிகப்பெரிய போராட்டங்கள் என்னென்ன, அந்த போராட்டங்களுடைய வரலாறுகள் என்னென்ன… என்று விகடனில் தொடராக தோழர் முத்துகிருஷ்ணன் எழுதியுள்ளார். அதனைத் தொகுத்து விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது.

3. போராட்டங்களின் கதை – அ.முத்துக்கிருஷ்ணன் – விகடன் பிரசுரம்

அதில் கிட்டத்தட்ட 44 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்களின் செய்திகள் உள்ளன. அவை அனைத்தும் அந்தக் காலகட்டத்துக்கே கூட்டிச் செல்கிற செய்திகளோடும், உயிர்ப்போடும் உள்ளன. ஆகவே வாசகர்கள் இப்புத்தகத்தை வாங்கி படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

4. நிலமற்றவனை நனைக்கும் மழை – பாரத் தமிழ்

என்ன இவர்… போராட்டங்கள், வரலாறு என்று இறுக்கமாகவே சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்று நினைத்துவிட வேண்டாம். சமீப காலமாக நான் புனைவு இலக்கியங்களையும், கவிதைகளையும் வாசித்துக் கொண்டு இருக்கிறேன். அதில் முக்கியமாகத் தோழர் பாரத் தமிழ் எழுதிய ‘நிலமற்றவனை நனைக்கும் மழை’ என்னைக் கவர்ந்த ஒரு கவிதைத் தொகுப்பாகும். அதில் வரும் ஒரு கவிதையை உங்களுக்குச் சொல்கிறேன்.

4. நிலமற்றவனை நனைக்கும் மழை – பாரத் தமிழ்

“எல்லோரையும் நனைக்குமாம் மழை

அதிக நிலம் வைத்து இருப்பவனை அதிகமாகவும்

குறைவாக வைத்து இருப்பவனை குறைவாகவும்

நிலமற்றவனை வெறும் நனைத்து மட்டும் செல்கிறது “

இவ்வாறு நிலமற்றவர்களின் வலியை ஆழமாகப் புரியச் செய்கிறது இக்கவிதைத் தொகுப்பு. ஆகவே வாசகர்கள் இதனை வாங்கிப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

5. கலைஞர் மு.கருணாநிதி வரலாறு – ஏ.எஸ்.பன்னிர்செல்வம் – தமிழில் சந்தியா நடராஜன் – வா.உ.சி.நூலகம்

சமீபத்தில் இந்தியாவில் பாதுகாப்பான நகரங்கள் எனும் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நகரங்கள் முதலிடங்களில் உள்ளன. அதில் பின்தங்கிய நகரங்களாக வடக்கில் உள்ள மாநிலங்களின் நகரங்கள் உள்ளன. இதற்கான காரணம் அரை நூற்றாண்டுகளாக பேரறிஞர் அண்ணா தொடங்கி இன்று ஸ்டாலின் வரையிலான இம்மண்ணை ஆண்ட திராவிட அரசுகளே காரணம். குறிப்பாக அதில் கலைஞரின் பணியைச் சொல்லலாம். ஒரு அரசியல்வாதியாக, கலைஞராக, கவிஞராக, முதல்வராக, எழுத்தாளராக பன்முகத்தன்மையோடு பல திட்டங்களையும் சாதனைகளையும் புரிந்த அவரது பணி அளப்பரியது.

5. கலைஞர் மு.கருணாநிதி வரலாறு – ஏ.எஸ்.பன்னிர்செல்வம் – தமிழில் சந்தியா நடராஜன் – வா.உ.சி.நூலகம்

அத்தகைய அவரின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் ஏ.எஸ்.பன்னிர்செல்வம் “Karunanidhi: A Life” என்று புத்தகமாக எழுதியிருந்தார். இப்போது அது “கலைஞர் மு.கருணாநிதி வரலாறு” என்று தமிழில் சந்தியா நடராஜனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . ஆகவே வாசகர்கள் இந்த நூலினை வாசிக்க பரிந்துரை செய்கிறேன்.

6. ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்கு ஒரு அச்சுறுத்தல் – ஏ.ஜி.நூரானி – ஆர்.விஜயசங்கர்

அடுத்துக் கூடுதலாக ஒரு புத்தகத்தைச் சொல்ல நினைக்கிறேன். இன்று இந்திய ஒன்றியம் அடுப்பின் மேல் எரிந்து கொண்டு இருக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மதவாத சக்திகள் நாட்டைச் சீரழித்துக் கொண்டு இருக்கிறது என்றே சொல்லலாம். அத்தகைய சூழலில் இதற்கு ஆரம்பப் புள்ளியாக இருந்த, இன்றைக்கு நூறு ஆண்டுகளைக் கடந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் பற்றியும், அவர்களின் கடந்த கால திட்டங்களைப் பற்றியும், அடுத்து அவர்கள் செய்ய இருக்கின்ற வருங்கால திட்டங்கள் பற்றியும் விரிவாகப் பேச வேண்டிய தேவை இருக்கிறது.

6. ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்கு ஒரு அச்சுறுத்தல் – ஏ.ஜி.நூரானி – ஆர்.விஜயசங்கர்

அதைத் தெளிவாகச் செய்த நூலாக ‘ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்கு ஒரு அச்சுறுத்தல்’ என்று ஏ.ஜி.நூரானி ஆங்கிலத்தில் எழுதிய நூலைச் சொல்லலாம். இப்போது அந்நூல் தமிழில் ஆர்.விஜயசங்கர் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு பாரதி புத்தகாலயம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே வாசகர்கள் இந்திய ஒன்றியத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் இந்நூலினை வாசிக்க வேண்டுகிறேன்.”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.