ஆஸ்துமா பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு தொற்று வருடம் முழுவதுமே இருந்தாலும், குளிர்காலத்தில் தொற்றின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். வெப்பநிலை குறைந்து, குளிர் அதிகரிக்கும் சமயத்தில் வெளியே செல்வது மூச்சு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். குளிர்காலத்திலும் வெளியே சென்று உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இருமல் மற்றும் வீசிங் போன்ற பிரச்னைகள் அதிகளவில் இருக்கும்.

ஆஸ்துமாவுக்கும் குளிருக்குமுள்ள தொடர்பு என்ன?

குறிப்பிட்ட சில வாழ்க்கைமுறை மற்றும் சுற்றுச்சூழலனாது மூச்சுக்குழாயில் அழற்சியை ஏற்படுத்துவதால் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் காற்று சீராக உள்ளே செல்லமுடியாத நிலை ஏற்படுவதால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். இதனை ஆஸ்துமா என்கின்றனர். குளிர்காலத்தில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதால் நிலைமை மோசமாகிறது என்கிறது Plos One ஆய்வு. பின்லாந்து போன்ற குளிர்நாடுகளில் கிட்டத்தட்ட 80% மக்கள் ஆஸ்துமாவால் அவதிப்படுவதாகக் கூறுகிறது அந்த ஆய்வு.

ஆஸ்துமாவை தூண்டும் குளிர் காரணி எது?

குளிர் காலநிலை ஆஸ்துமாவை தூண்டுவதற்கு பல காரணிகள் இருக்கின்றன. அவற்றில் சில:

குளிர்காற்று வறட்சியை ஏற்படுத்துகிறது

நாசியானது எப்போதும் மியூகஸ் என்று சொல்லக்கூடிய சளிபடலத்தால் மூடப்பட்டுள்ளது. இது அந்தப் பகுதியை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. ஆனால், குளிர்காலத்தில் வறட்சியான காற்றை சுவாசிக்கும்போது நாசி வழியிலுள்ள திரவமானது வேகமாக ஆவியாகிவிடும். இதனால் மூச்சுக்குழாயானது வீக்கமடைந்து அழற்சியாகிறது. இது ஆஸ்துமா அறிகுறிகளை மோசமாக்குகிறது. இதுதவிர குளிர் காற்றானது ஹிஸ்டமின் என்ற ரசாயனப்பொருளை உற்பத்தி செய்கிறது. இதுவும் அலர்ஜியை அதிகரித்து வீசிங் மற்றும் மூச்சுத்திணறலுக்கு வழிவகுக்கிறது.

image

குளிர் காற்றானது ஒட்டக்கூடிய சளியை அதிகரிக்கிறது

ஏற்கெனவே மூக்கில் மியூகஸ் படலம் இருந்தாலும், அதீத குளிர்நிலையால் இந்த திரவத்தை உடல் அதிகளவில் உற்பத்தி செய்கிறது. அது அடர்த்தியாகவும், ஒட்டக்கூடிய வழவழப்பானதாகவும் இருக்கும். இதனால் தொற்று எளிதில் ஒட்டிக்கொள்ளும்.

தொற்றின் தாக்கத்தை அதிகரிக்கும் குளிர்காற்று

காய்ச்சல், இருமல், சளி மற்றும் பல்வேறு மூச்சுக்குழாய் பிரச்னைகளுக்கு குளிரானது வழிவகுக்கிறது. வீட்டிற்குள் இருந்தாலும் தூசி துகள்கள், செல்லப்பிராணிகளின் பொடுகுகள், புகையிலை வாசனை, ஈரம், வெப்பம், தீ துகள்கள், அச்சுத்துகள்கள் போன்றவையும் அலர்ஜியை தூண்டும்.

ஆஸ்துமா அறிகுறிகள்

  • வீசிங், மூச்சுவிடும்போது விசில் அடிப்பதுபோன்ற சத்தம்
  • மூச்சுத்திணறல்
  • மார்பில் இறுக்கம்
  • தொடர் இருமல்
  • இதயதுடிப்பு அதிகரிப்பு
  • அரை தூக்கநிலை
  • சோர்வு
  • தலைசுற்றல்
  • உதடு அல்லது நகங்கள் நீலநிறமாதல்

image

ஆஸ்துமா காரணிகளை தவிர்ப்பது எப்படி?

ஆஸ்துமாவுக்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் அதனை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

அலர்ஜியை தூண்டுவதை தவிர்க்கவும்: ஆஸ்துமாவை தூண்டும் காரணிகள் எவையென்பதை கண்டறிந்து அவற்றை வீட்டில் வைப்பதையும், முடிந்தவரை சுற்றுப்புறத்தில் இல்லாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி: மூச்சுக்குழாய் பிரச்னைகளான சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை குளிர்காலத்தில் அதிகமாக ஏற்படுவது ஆஸ்துமாவை மோசமாக்கும். எனவே சளிக்காய்ச்சல் தடுப்பூசியை ஆண்டுதோறும் செலுத்தி நுரையீரலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கவும்.

ஆஸ்துமா மருந்துகள்: ஆஸ்துமா மருந்து, மாத்திரைகளை முறையாக எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல் மருத்துவரை அணுகி முறையான பரிசோதனை மேற்கொள்வதும் அவசியம்.

இன்ஹேலர் வைத்திருங்கள்: எப்போதும் ஆஸ்துமாவிலிருந்து உடனடி நிவாரணம் தரக்கூடிய இன்ஹேலர் போன்றவற்றை உடன் வைத்திருப்பது நல்லது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.