தமிழ்நாட்டிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்பு பரிசுடன் செங்கரும்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஒரு கரும்பு 33 ரூபாய் என மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் வழங்கும் பணி துவங்கியுள்ளது.

கடந்த வருடம் பொங்கல் தொகுப்பு வழங்கும்போது இடைத்தரகர்கள், அரசியல்வாதிகளின் தலையீடுகள் போன்றவையால் பல சர்ச்சைகள் எழுந்தது. ஆகவே, இம்முறை 6 அடி உயரமுள்ள கரும்புகள் கொள்முதல் செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாமிலுள்ள இலங்கை தமிழர்கள் என மொத்தம் 6,15,454 பேருக்கு பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்குவதற்காக வேளாண்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் அடங்கிய 13 கொள்முதல் குழுக்கள் வட்டார அளவில் அமைக்கப்பட்டது. 

கரும்பு

மேலும், கடந்த 6-ம் தேதியன்று கரும்பு கொள்முதல் செய்யும் பணியை நேரில் ஆய்வு செய்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், “6 அடி உயரம் குறையாத கரும்பை தான் முலமைச்சர் கொடுக்கச் சொல்லி இருக்கிறார். இன்று நாங்கள் குறைவான உயரத்தில் கரும்பை எடுத்துவிட்டால், நாளை தொகுப்பு பொருள் வழங்கும்போது 6 அடி உயர கரும்பு எங்கே என்று பிரச்னை வரும். அப்போது வடிவேலு போல, “இது வேற வாய், அது நாறவாய்” என்பீர்கள். அதனால் அரசாணைப்படி தான் கரும்பு எடுக்கப்படும்” என்று திட்டவட்டமாக விவசாயிகளிடம் கூறியிருந்தார். எனவே, பருவநிலை மாற்றத்தால் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, 6 அடிக்கும் சற்று உயரம் குறைவாக இருந்த கரும்பு தோட்டத்தின் விவசாயிகளிடையே அது அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்றைய தினம் முதலமைச்சரால் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டதும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளிலும் தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது. 6 அடி உயர கரும்புகள் வழங்கப்பட்ட போதிலும், அதில் ஆறடிக்கும் குறைவான உயரம் கொண்ட கரும்புகளையும் காண முடிந்தது. இது விழுப்புரம் பகுதியில் சற்று அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனிடையே, ‘தங்களது நிலத்தில் விளைந்த கரும்புகளை கொஞ்சமாவது கொள்முதல் செய்ய வேண்டும்’ எனக்கூறி அதிகாரிகளிடம் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எனவே, முறையாக கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா? செங்கரும்பு விவசாயிகளின் ஆதாங்கத்திற்கு காரணம் என்ன? என்பது குறித்து விழுப்புரம் ஒட்டியுள்ள பிடாகம், குச்சிபாளையம், மரகதபுரம் பகுதி கரும்பு விவசாயிகளிடையே விசாரித்தோம்.

செங்கரும்பு

“எங்கள் பகுதியில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு பயிரிடுவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் கால் காணி, அரை காணி மற்றும் ஏக்கர்கள் பரப்பளவிலும் அவரவர் சக்திக்கு ஏற்ற மாதிரி செங்கரும்பு விவசாயம் செய்திருந்தோம். பொங்கல் தொகுப்புக்காக அரசு சார்பில் கரும்பு எடுக்க வந்த அதிகாரிகள், 6 அடி கரும்பை தான் எடுப்போம் என்றார்கள். இதை மேல்மட்டத்தில் இருக்கிற அதிகாரிகள் கட்டன் ரைட்டாக சொல்லிவிட்டார்கள். ஆனால், அவர்களுக்கு கீழே இயங்கக்கூடிய அதிகாரிகளோ… அவர்களுக்கு சாதகமான நபர்களைப் பார்த்து பார்த்து கரும்பை எடுத்துக் கொண்டார்கள். இன்னும் ஆளுங்கட்சி சேர்ந்தவர்கள் என்றால், அளவுக்கு அதிகமாகவே அதிகாரிகள் கரும்பை எடுத்துக்கொண்டார்கள். அதாவது 200 முதல் 500 கத்தை வரை கூட அவர்களிடம் எடுத்திருக்கிறார்கள்.

எங்களிடம் 6 அடி உயர கரும்பு வேண்டுமென்று கேட்ட அதிகாரிகள், அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு நான்கு, ஐந்து அடி வரையில் இருக்கும் கரும்பையும் வெட்டி ஏத்திக்கொண்டு போகிறார்கள். ஆனால், இங்கு திடீரென பெய்த மழையாலும், பருவநிலை மாற்றத்தாலும் வளர்ச்சி பாதிப்புற்று எங்களின் பலரது தோட்டங்களில் 5 அடி, ஐந்தரை அடி கரும்புகள் இருந்தும் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது என்னவோ எந்த பின்புலமும் இல்லாத விவசாயிகள் தான். எனவே, 8-ம் தேதியன்று கரும்புகள் கொள்முதல் செய்யப்படாத தோட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கூட்டுறவுத்துறை இணை பதிவாளரை முற்றுகையிட்டு கேட்டபோது, ஒவ்வொருவரிடமிருந்தும் 58 கத்தைகள் வீதம் கரும்பை எடுத்துக் கொள்வதாக கூறிவிட்டு சென்றார்கள்.

லாரியில் ஏற்றப்படும் கரும்பு

ஆனால், இன்றைய தினம் (09.01.2023) தோட்டத்திற்கு 20 கத்தைகள் என்ற வீதத்தில்தான் எடுத்தார்கள். அந்த 20 கத்தை கரும்பை அரசு எடுப்பதற்கே, அத்தனை அதிகாரிகளில் காலில் விழுந்தோம். இன்னும் பலரது தோட்டங்களில் ஒரு கரும்பை கூட எடுக்கவில்லை. அவர்களெல்லாம் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறார்கள். கொஞ்சமாவது எங்களுடைய கழனிகளிலிருந்து கரும்பை எடுத்திருக்கலாம் இல்லையா..? இன்றைக்கு ஒரு உரமூட்டை 1500 ரூபாய் வரை விற்கிறது. அதில்லாமல், மருந்தடிக்க வேண்டும். சுமார் ஏழு முறைக்கு மேல் கரும்பு வளர வளர சோகை உரிக்க வேண்டும். ஒருமுறை ஒரு ஏக்கருக்கு கரும்பு சோகை உரிக்க 24 ஆட்கள் தேவைப்படும். ஒரு ஆளுக்கு கூலி 150 ரூபாய். இந்த கரும்புக்காக இம்புட்டு செலவு செய்துவிட்டு இன்று நடுத்தெருவில் நிற்பதை போல நிற்கிறோம்.

இது மட்டுமின்றி, கொள்முதல் செய்யப்பட்ட கரும்பு கத்தை ஒன்றுக்கு ரூ.450 வரை விலை சொல்லி இருக்கிறார்கள். சராசரியாக ஒரு  கரும்புக்கு 21 ரூபாய். இந்த கரும்புகளையும் நாங்கள் தான் தனியாக ஆள் வைத்து வெட்டி அவர்களுக்கு தர வேண்டும். ஒரு கத்தை கரும்பை வெட்டுவதற்கான ஆள் கூலி ரூ.35 – ரூ.40 வரை ஆகும். மேலும், இதற்கு பின்னர் கரும்பை எடுக்க மாட்டோம். இன்று தான் கடைசி என்று அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள். நாங்கள் என்ன செய்வது” என்றனர் ஆதங்கமாக.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்

இது குறித்து விளக்கம் கேட்க விழுப்புரம் கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் யசோதா தேவியிடம் பேசினோம். “விழுப்புரம் மாவட்டத்தில் 1254 ரேஷன் கடைகள் இருக்கிறது. அதில் 6,15,340 குடும்ப அட்டைதாரர்களுக்கான கரும்புகள் தான் எங்களுக்கு தேவையாக இருக்கிறது. ஆனால் அந்த மூன்று பகுதிகளில் மட்டும் 18 லட்சம் எண்ணிக்கை கரும்பு போட்டிருக்கிறார்கள். எல்லோரிடமும் எங்களால் வாங்க முடியாததற்கு இதுதான் காரணம். 6 அடிக்கும் குறைவாக நாங்கள் கரும்பை கொள்முதல் செய்யவில்லை. தற்போது ஒரு கரும்பின் விலை 21 ரூபாய் என கூறி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளோம். இன்னும் முழுமையாக விலை நிர்ணயம் செய்யவில்லை. அவர்களுடைய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தும் போது அதைவிட கூடுதலாக வழங்கப்படும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.