‘பெற்றோரின்  ஈகோவால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும்’ என, வழக்கொன்றில் தன் வேதனையைத் தெரிவித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். 

அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர், ”நானும் என் மனைவியும் இந்தியாவில் பிறந்தவர்கள் என்றாலும் தற்போது அமெரிக்க குடிமக்களாக இருக்கிறோம். என் இரண்டு குழந்தைகளும்கூட அமெரிக்கன் சிட்டிசன்ஸ்தான்.  2020-ம் வருடம் என் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்து வந்த என் மனைவி அதன் பின் அவர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வரவே இல்லை.  என் குழந்தைகளை நான் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்” என்று, சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார்.

கணவன் – மனைவி / மாதிரிப்படம்

அந்த மனுவின் மீதான விசாரணையின்போது, ‘கடந்த 13 வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்து வந்த அந்தக் குழந்தைகள் அந்நாட்டின் மொழி, கலாசாரம், உணவுமுறை என வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இரு குழந்தைகளும் அமெரிக்காவில் இருக்கும் போது, ஒலிம்பியாடு அறிவியல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார்கள். ஒரு குழந்தை நீச்சலில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அளவுக்குத் தகுதி பெற்றிருக்கிறது. அக்குழந்தைகள் இங்கு ஆன்லைன் வகுப்பில் மட்டுமே கல்வி பயின்று வருகிறார்கள். பெற்றோரின் பிடிவாதத்திற்காக அக்குழந்தைகள் இதுநாள் வரை பழகி வந்த வாழ்க்கை முறையை மாற்றி விட முடியாது’ என்று கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கூடவே ‘பெற்றோரின் ஈகோவால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும்’ என்று தன் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறது. 

பெற்றோர்களின் ஈகோ, குழந்தைகளை எந்தளவுக்கு பாதிக்கும் என்று குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் கேட்டோம். 

”கூட்டுக்குடும்பங்களில் வீடு நிறைய மனிதர்கள்,  வேலைப்பளு, தாம்பத்திய உறவே எப்போதாவதுதான் என்கிற சூழலில், தம்பதியரிடையே பிரச்னை வந்தாலும் பெரியவர்கள்  தலையிட்டுத் தீர்த்து விடுவார்கள். இதில் ஈகோ தலையெடுக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை. அங்கொன்றும் இங்கொன்றும் தலைதூக்கினாலும் பரஸ்பரம் பேசாமல் இருப்பார்கள், அவ்வளவுதான். அதனால், பெற்றோர்களின்  ஈகோ குழந்தைகளை பாதிக்காமல் இருந்தது. 

குழந்தைகள் மனநல நிபுணர் ஜெயந்தினி

ஆனால், இன்றைய தனிக்குடித்தனங்களில்  ஈகோ  தலைதூக்குவதற்கான வெளி சுதந்திரமாக இருக்கிறது. பெற்றோரின் கோபம், சண்டை, அழுகை போன்றவை கட்டாயம் குழந்தைகளை பாதிக்கும். தவிர, சந்தேகம், குடும்ப வன்முறை, திருமணம் தாண்டிய உறவு போன்ற காரணங்களால் பெற்றோர் சண்டையிட்டுக் கொண்டே இருந்தால், குழந்தைகளுக்கு வீடே நரகமாகி விடும். என் அனுபவத்தில் இப்படிப்பட்ட குழந்தைகளைச் சந்தித்திருக்கிறேன். ‘சின்ன வயசுல இருந்து எங்கம்மாவும் அப்பாவும் சண்டை போடுறதும் கத்துறதும் என் மனசுக்குள்ள பதிஞ்சு போச்சு’ என்பார்கள்.

சண்டையின்போது அம்மாவோ, அப்பாவோ தற்கொலை செய்துகொள்வேன் என்று கோபத்தில் வார்த்தையை விடுவார்கள். அதை நம்புகிற குழந்தைகள் ‘அம்மா நம்மளை விட்டுட்டு செத்துப் போயிடுவாளோ’ என்று பயந்துகொண்டே இருக்கும். சில குழந்தைகள் ‘பெற்றோர் எதைத் தூக்கி நம் மீது எறிவார்களோ’ என்ற அச்சத்திலேயே இருப்பார்கள்.  இன்னும் சில குழந்தைகள், என்ன செய்வதென்று  தெரியாமல் பெற்றோர்களிடம் கோபம் காட்ட ஆரம்பிக்கலாம். 

கணவன் – மனைவி சண்டை

பெற்றோர்கள் கோபத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்வதை பார்க்கிற குழந்தைகளும் தற்கொலை செய்ய முயற்சி செய்யலாம். சில குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுக்கலாம் அல்லது போகாமல் பெற்றோரை ஏமாற்றலாம். மொத்தத்தில் பெற்றோர்களின்  ஈகோவால்  பாதிக்கப்பட்ட  குழந்தைகளின் Early Childhood Experience மிகுந்த எதிர்மறைத் தன்மையுடன் இருக்கும். தொடர்ந்து பெற்றோர்களின்  ஈகோ மோதலை பார்த்துக்கொண்டே இருக்கிற குழந்தைகளின் வாழ்வில் இதுவொரு வடுவாகவே தங்கி விடும். ஸோ, குழந்தைகள் முன்னாள் பெற்றோர்கள் ஈகோ மோதல்கள் இல்லாமல் இருப்பதுதான் நல்லது” என்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.