46-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 22 வரையிலான நாட்களில் நடைபெற இருக்கிறது. 800-க்கும் அதிகமான அரங்குகள் அமையவுள்ள இவ்வருட புத்தகக் காட்சி கூடுதல் சிறப்பம்சத்தைக் கொண்டிருக்கிறது. வழக்கமாக நடைபெறும் புத்தக விற்பனை, புதிய நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா ஆகியவற்றோடு சேர்த்து சர்வதேச புத்தகத் திருவிழா சென்னையில் முதன்முறையாக நடைபெற இருக்கிறது. 

CIBF 2023

ஜனவரி 16,17,18 என மூன்று நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இந்த சர்வதேச புத்தக திருவிழாவுக்கான ஆரம்ப புள்ளி எங்கிருந்து தொடங்கியது, இந்த ஏற்பாட்டின் நோக்கம் மற்றும் நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் குறித்து தமிழக பாடநூல் கழகத்தின் இணை இயக்குநர் Dr.சங்கர சரவணனிடம் பேசினோம்.

“ இந்த பன்னாட்டு புத்தக திருவிழாவுக்கான திட்டமிடல் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டுவிட்டது. இதற்காக ஐந்து பேர் கொண்டு குழு ஜெர்மனி நகரமான ஃபிராங்க்பர்ட்டில் நடைபெறும் சர்வதேச புத்தக திருவிழாவுக்கு சென்றிருந்தோம். 500 வருடங்களுக்கு மேலாக நடைபெறும் உலகின் மிகப்பெரிய புத்தகக் காட்சிகளில் அதுவும் ஒன்று. ஒவ்வொரு நாடுகளுக்கும் தனி தனியே வீதி என 100-க்கும் அதிகமான நாடுகள் 1000-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் அங்கு வருடந்தோறும் கலந்து கொள்கிறார்கள். அதை மாதிரியாகக் கொண்டு திட்டமிடப்பட்டிருக்கும் சென்னை சர்வதேச புத்தக திருவிழாவுக்கு தற்போது வரை நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. 

வழக்கமாக நடைபெறும் புத்தக காட்சிகளில் Business to Customers எனப்படும் வாடிக்கையாளர்களுக்கான புத்தக விற்பனையே நடைபெறும். இந்த நிகழ்வை பொறுத்தவரையில் B-B எனப்படும் பதிப்புரிமை வாங்குவது விற்பதற்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். நம் புத்தகங்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்வது, சிறந்த பிற மொழிப் புத்தகங்களை தமிழுக்குக் கொண்டுவருவது தான் இந்நிகழ்வின் முதன்மை நோக்கம். அதற்கான பரிவர்த்தனைகள் ஒப்பந்தங்கள் அனைத்தும் இந்த நாட்களில் நடைபெறும். அதிக எண்ணிக்கையில் மொழிபெயர்ப்புகள் நடைபெறுவது இலக்கிய வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று. அதேபோல நம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை பிற நாடுகளுக்கு கொண்டு செல்லவேண்டியதும் நம் தலையாய கடமை. இந்த இரண்டையும் துரிதப்படுத்தும் முக்கிய நிகழ்வாக இது அமையும்.

புதுமைப்பித்தன் பாரதியார் நம் மொழியின் மிக முக்கிய படைப்பாளிகளின் படைப்புகளுக்கே போதியளவு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்காத நிலையில் சமகால எழுத்தாளர்களின் நிலையைப் பற்றி சொல்லத் தேவையில்லை. அதேபோல பிறமொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அளவுக்கு சிலப்பதிகாரம் போன்ற பிற சங்க நூல்களை மொழிபெயர்பதற்கான பணிகள் அதிக அளவில் நடைபெறவில்லை. இவை அனைத்தும் இந்த நிகழ்வின் முக்கிய பணியாக இருக்கும்.

வெவ்வேறு நாடுகளின் அரங்குகள் உடைய பன்னாட்டு அரங்கு அமைக்கப்பட உள்ளது. கூடவே பல நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் நேரடியாகவும் இணைய வழியாகவும் கலந்துகொண்டு பேசியிருக்கும் பன்னாட்டு கருத்தரங்கு அமையவுள்ளது. இலக்கிய வளர்ச்சிக்காக அரசின் தொடக்க முயற்சியே இது. பதிப்பாளர்கள் இந்நிகழ்வை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார் அவர். 

இந்த சர்வதேச புத்தக திருவிழாவின் முதலிரண்டு நாட்களுக்கு பொதுமக்கள் மாலை 5-8 மணிக்கு அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். முன்றாம் நாளின் நிறைவு விழாவுக்கு பிறகு மொத்தமாக பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.      

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.