நம் நாட்டின் பணமதிப்பு டாலருடன் ஒப்பிடுகையில், கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 10.15 சதவிகிதத்திற்குமேல் சரிந்துள்ளதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
கடந்த 2021-ல் 74.33-ஆக இருந்த ரூபாயின் மதிப்பு, தற்போது 2022-ல் 82.74-ஆகச் சரிந்துள்ளது.
கடந்த ஆண்டில் டர்க்கிஷ் லிரா -28%, பங்களாதேஷ டக்கா 16%, சுவீடிஷ் குரோனா 13%, ஜாப்பனிஷ் யென் 12.70%, பிரிட்டீஷ் பவுண்ட் 10.94% இறக்கம் கண்டன. வியட்நாம் டாங்க் மட்டுமே மிகக் குறைந்த அளவாக -3.20% இறக்கம் கண்டன.
இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு நிகராக சரியக் காரணம் என்ன, 2023-ல் இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி இருக்கும் என்பதைக் குறித்து கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தரிடம் பேசினோம்.

“ஆசியப் பிராந்தியத்தில் டாலருக்கு நிகராக அதிக இறக்கம் கண்ட நாணயம் இந்திய ரூபாய்தான். 2022–ம் ஆண்டில் 11% வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கான காரணம், சர்வதேச அளவில் அதிகரித்துக்கொண்டே செல்லும் பணவீக்கம், ரஷ்ய – உக்ரைன் போர், வளர்ந்த நாடுகளின் பொருளாதார மந்தநிலை. இவையனைத்தும் டாலரின் மதிப்பை வெகுவாக அதிகரிக்கச் செய்திருக்கின்றன.
சர்வதேச நிதி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகப் பொருளாதார வளர்ச்சியானது 2023-ம் ஆண்டில் 2.7 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.
2022-ல் இந்த வளர்ச்சியானது சென்ற ஆண்டைக் காட்டிலும், அரை சதவிகிதம் குறைவு. பிரிட்டன் பொருளாதாரம், பொருளாதாரத் தேக்கநிலைக்குத் தள்ளப்படும் எனவும் கணித்துள்ளது.

இதனால், ஐரோப்பிய யூனியன் கரன்சியான யூரோ, பிரிட்டனின் கரன்சியான பவுண்டு ஆகியவை, அமெரிக்க டாலருக்கு நிகராக மிகவும் சரிந்து வர்த்தகமாகிறது.
மேலைநாடுகளில், பொருளாதாரச் சுணக்கம் ஏற்படுமாயின், இந்தியாவின் ஏற்றுமதி பாதிப்படையும். இறக்குமதிச் செலவுகளும் அதிகரிக்கும். அதாவது, நமது கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஆகும் செலவினங்கள் அதிகரிக்கும். அரசுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும். வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கச் செய்யும். இதனால், ரூபாயின் மதிப்பு இறக்கம் அடைகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை, பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாலும், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 70 டாலர்கள் அளவில் வர்த்தகமாவதாலும் ஓரளவிற்குப் பொருளாதார வளர்ச்சி 6 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் என்பது ஆறுதலான செய்தி.
பங்குச் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளைத் தொடர்ச்சியாக விற்பதால், டாலருக்குத் தேவை ஏற்படுகிறது. சென்ற வாரத்தில் ரிசர்வ் வங்கி தலையிட்டு தற்காலிகமாக டாலர் தேவையைப் பூர்த்தி செய்தது.
வளர்ந்த நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ச்சியாக வட்டி விகிதங்களை அதிகரித்துக்கொண்டே இருப்பதால், இந்திய ரூபாயின் மீது அழுத்தம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்தக் காரணங்களினால்தான் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக குறைகிறது.

அமெரிக்க ஃபெடரல் 2023-ம் ஆண்டில் வட்டி விகிதங்களை எவ்வாறு கையாளப் போகிறது என்பதைப் பொருத்து, இந்திய ரூபாய் மதிப்பின் போக்கு இருக்கும்.
அமெரிக்காவின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்படுகிற ஆயுதம், வட்டி விகிதங்களை உயர்த்துவது. அங்கு வட்டி விகிதங்களில் நிதானமான போக்கைக் கடைப்பிடித்தால், டாலரின் மதிப்பு அதிகரிப்பது நிற்கக்கூடும்.
அந்நாட்டில், வரக்கூடிய நாள்களில் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட புள்ளிவிவரங்கள் டாலரின் போக்கை நிர்ணயம் செய்ய இருக்கின்றன.
ஒருவேளை, வட்டி விகித உயர்வினால் அமெரிக்கப் பொருளாதாரம் மந்த நிலைக்குச் செல்லுமேயானால், டாலர் வலுவிழக்க வாய்ப்பிருக்கிறது. இந்திய ரூபாயின் வீழ்ச்சி என்பது தடுக்கப்படலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த 2023-ல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயரட்டும் அல்லது பெரிய அளவில் சரியாமல் இருக்கட்டும்!