தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் `திராவிடப் பேச்சாளர்’ நாஞ்சில் சம்பத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க-வினர் நாற்காலியைத் தூக்கி வீச, அதற்கு நாஞ்சில் சம்பத் வருத்தம் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்..

“சேர் தூக்கி அடிக்கும் அளவுக்கு அப்படி என்ன பேசினீர்கள்?!”

“இனம், மொழி அரசியல் பேசுவது வாக்குக்காகவா, உரிமைக்காகவா என்கிற விவாத நிகழ்ச்சியில் பங்கெடுத்த போது, திராவிட இயக்கத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசி சென்றவர்களுக்கு பதிலடி கொடுக்க எங்கள் தரப்பில் பேசினோம். ஆனால், பொது வெளியில் எங்கள் கருத்துக்களை நாங்கள் சொல்வதற்கே முடியாத அளவுக்கு ஒரு நெருக்கடியை தர முடியும் என்று பா.ஜ.க-வினர் நம்புகிறார்கள். இந்த ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்க எங்கேயாவது ஒரு கலவரத்தை தூண்ட வேண்டும் என்று அதைத் திட்டமிட்டு அரசியல் செய்கிறார்கள். பாசிஸ்டுகள் இப்படித்தான் இருப்பார்கள்”

“நீங்களும்தானே கடுமையான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி இருந்திருக்கிறீர்கள்?”

“சென்னை மண்ணடியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் என்று சொல்லி பணம் அபகரித்த சம்பவத்தை வைத்து, ‘பொறுக்கி திண்ணுகிற பயல்கள் ஒரு இஸ்லாமியர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் என்று சொல்லி அடித்துவிட்டார்கள்…’ என்று பேச வந்தேன். அப்போது மட்டுமல்ல அதற்கு முன்பும், ‘எங்களை பேசுவதற்கே விடவில்லை என்றால், நாளை இவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் இந்த சம்பவம் ஒரு சாட்சி…’ என்று சொல்கிறேன். அப்போதும் கத்துகிறார்கள். இதுதான் நடந்தது. அதேநேரத்தில் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுவிட்டேன், மன்னிப்பு கேட்க வைத்துவிட்டார் பேரா. இராம ஸ்ரீனிவாசன் என்று அவர்கள் வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. என்னால் விவாதம் நின்றுவிடக் கூடாது என்பதற்காக ‘பொறுக்கி…’ என்ற வார்த்தை யாருக்காவது வருத்தத்தை தந்திருந்தால் அந்த சொல்லை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்றுதான் சொன்னேன்.

மன்னிப்பு எல்லாம் கேட்கவில்லை. எனக்குப்பின் அதற்கு பதில் அளிக்க வந்த பேரா.ஸ்ரீனிவாசன் திராவிட இயக்கத்தின் நீதிக்கட்சி தலைவர்களை ‘நாய்கள்…’ என்றார். இப்படி பதிலுக்கு பதில் லாவடி பாடுவது தான் பா.ஜ.க அரசியலா…? மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று நம்புங்கள். ஒரு நாணயமான அரசியலை தமிழ்நாட்டில் செய்வதற்கு முன் வாருங்கள். உங்களின் கட்சி அரசியலை தாண்டி தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டிய கட்சியாக உங்களை மடைய மாற்றிக் கொள்ளுங்கள்”

“பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தொடர் குற்றச்சாட்டுக்களை தி.மு.க-வினர் மீது அடுக்குகிறாரே?”

“அண்ணாமலைக்கு தமிழ்நாட்டில் அரசியல் செய்வதற்கு இருக்கும் உரிமை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர் வைக்கும் குற்றசாட்டுகள், அவரின் பயணம் இந்த பா.ஜ.க கட்சியை தாண்டி ஏற்றுக் கொள்வதாக இருக்க வேண்டும். அதை விடுத்து ஊடகங்கங்களிடம் பேசி விளம்பரம் தேடி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்”

அண்ணாமலை

“வாரிசு அரசியலை ஆதரிக்கிறீர்களா…?”

விழா மேடையில் உதயநிதி ஸ்டாலின்

“வாரிசு அரசியல் என்று யாரை நீங்கள் கேட்கிறீர்கள்…?”

“இதை நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய வேண்டுமா…?”

“தம்பி உதயநிதி ஸ்டாலின் தொடர் உழைப்பை பார்த்து, அண்ணன் ஸ்டாலின் அவர்களுடைய சுமையை பகிர்ந்து கொள்ள தி.மு.க-வின் தோழர்கள் இன்றைக்கு அந்த பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள். கட்சி எடுத்த முடிவுக்கு பிறகு பல விமர்சனங்கள் வருகின்றன. அதற்கு, ‘நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். என் நடவடிக்கை மூலம் இந்த வாரிசு என்கிற வசவுகளை போக்குவேன்…’ என்று தம்பி உதயநிதி அறிவித்திருக்கிறார். அது நிச்சயம் நடக்கும்”

பன்னீர், எடப்பாடி, மோடி

“சமீபத்தில் ஓ.பி.எஸ் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறாரே?”

“சட்டப்படி அந்த கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் இன்றும் அவர்தான். அதிலிருந்து இன்னும் அவர் நிராகரிக்கப்பட வில்லை. அதைத் தாண்டி அந்த கட்சிக்கு உரிமை கொண்டாடுவதற்கான அதிக தகுதியும் அவருக்குத்தான் இருக்கிறது. அந்த கட்சியில் இவ்வளவு களேபரத்துக்கும், கலவரத்துக்கும் டெல்லிதான் காரணம் என்றாலும், டெல்லியினுடைய கருணை, கடாட்சம் இப்போது ஓ.பி.எஸுக்கு கிட்டி இருப்பதாகவே கருதுகிறேன். அதன் காரணத்தினால் இன்றைக்கு இப்படி ஒரு துணிச்சலான நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஒரு சூழல் அவருக்கு வந்திருக்கிறது. அவர் அந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்தி கரை சேரப்போகிறார் என்பது போகப் போகத் தெரியும்”

“`அ.தி.மு.க என்ற கட்சியின் சுயமரியாதைக்காக இ.பி.எஸ் எதற்கும் துணிந்து விட்டார், ஆனால் ஓ.பி.எஸ் இன்னும் பா.ஜ.க-வை நம்பித்தான் இருக்கிறார்’ என்கிற கருத்துக்களும் இருக்கத்தானே செய்கிறது…?”

“பா.ஜ.க-வை எதிர்ப்பதற்கான முழுமையான ஆற்றலும், துணிச்சலும் எடப்பாடிக்கு இன்னும் வரவில்லை. அது வரவும் வராது… ஏனென்றால் அவருக்கும், அவரோடு இருப்பவர்களுக்கும் அவ்வளவு வழக்குகள், அவ்வளவு சிக்கல்கள். ஆகவே இந்த வழக்கு இல்லாத சி.வி.சண்முகம் போன்றவர்கள் ஆரவாரம் செய்யலாமே தவிர வழக்கு இருக்கிறவர்கள் யாரும் பா.ஜ.க-வை எதிர்த்து வாய் திறந்து பேச மாட்டார்கள்”

அதிமுக – ஓபிஎஸ் – இபிஎஸ் – சசிகலா

“அ.தி.மு.க-வை காப்பாற்றக் கூடிய சக்தி சசிகலாவை தவிர வேறு யாருக்குமில்லை என்று சொல்லி இருந்தீர்கள். இப்போதும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறீர்களா…?”

“ஆம்… அவருக்கு மட்டும்தான் அந்த சக்தி இருக்கிறது. அதை அன்றும் சொல்கிறேன்… இன்றும் சொல்கிறேன்”

“ஆனால், அதற்கான எந்த முன்னெடுப்பும் அவர் எடுக்கத போது இன்னும் எப்படி அவரை நம்புகிறீர்கள்?”

“மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நினைவு நாளில் ‘நான் இருவரையும் சேர்த்து வைப்பேன்’ என்று சொல்லி இருக்கிறார். இந்த பண்பாட்டிற்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது. முதலமைச்சராக்கி, முடி சூட்டி கைதாகிற நெருக்கடி வரும்போது கண்ணீரோடும், கவலையோடும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சென்றார் சசிகலா. அந்த துன்பமான நேரத்தில் துணை நிற்காமல் காட்டி கொடுத்தார், கயமைத்தனம் செய்தார் இ.பி.எஸ். அ.தி.மு.க-வுக்கும் சசிகலாவுக்கும் சம்பந்தமில்லை என்று கட்சியை விட்டும் நீக்கி அறிவித்தார். ஜெயக்குமார் போன்ற தவக்களைகள் மூலம் அறிக்கை விட்டு, நாளும் இன்று காயப்படுத்தி கொண்டிருக்கிறார். அதை எல்லாம் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாமல் தனக்கு பச்சை துரோகத்தை பட்டப் பகலில் செய்த பாதகனை கூட மன்னித்து இருவரையும் இணைப்பேன் என்று சொல்கிறார் என்றால் அவரது தீர்க்கதரிசனமான அந்த அரசியலை தமிழ்நாடு ஆச்சரியத்துடன் பார்க்கிறது”

நாஞ்சில் சம்பத்

“இதுதான் காரணமா… இல்லை இ.பி.எஸிடம் சரணடையும் முடிவுக்கு வந்துவிட்டார்களா?”

“அது எப்படி சரணடைகிறார்கள் என்று சொல்ல முடியும்… அந்த கட்சியின் பெரிய ஆளுமையான பண்ருட்டி ராமச்சந்திரன், சிறுபான்மை மக்களின் ஏக பிரதிநிதியாக இருந்த அன்வர் ராஜா, பொதுவாக அரசியல் கட்சிகள் தகவல் தொழில்நுட்ப பிரிவை தொடங்கி இன்று ஊடகங்களை எதிர்கொள்கிற அந்த பயணத்திற்கு அ.தி.மு.க-வில் பாதை போட்டு தந்த ஆஸ்பயர் சுவாமிநாதன் போன்றவர்கள் இன்று இந்த கட்சியில் இல்லை. இது போன்ற ஆளுமைகள் எடப்பாடி பக்கம் இல்லாமல் ஓ.பி.எஸ் பக்கம் நிற்கிறார்கள். எடப்பாடி ஒன்றே ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் என்பது சம்பவங்களின் விளையாட்டு. நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.