ஜனவரி மாதம் வந்தாலே புத்தக விரும்பிகளுக்குக் குதூகலம் தொடங்கிவிடும். காரணம் ஆண்டுதோறும் நடைபெறும் சென்னைப் புத்தகக் காட்சி. புதினம், அறிவியல், ஆரோக்கியம், சமூக சிந்தனை எனப் பல்வேறு துறை சார்ந்த லட்சக்கணக்கான புத்தகங்கள், 800+ அரங்குகள், தினமும் நடைபெறும் இலக்கிய மன்றங்கள், கண்காட்சிகள், சொற்பொழிவு என்று களைகட்டும் பபாசி புத்தகக் காட்சி, இம்முறை வரும் ஜனவரி 6 முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தாண்டு புத்தகக் காட்சியின் கூடுதல் சிறப்பாகக் கருதப்படுவது, ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெறவிருக்கும் சர்வதேச புத்தகக் காட்சி. 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச அரங்குகள் இதில் இடம்பெறவுள்ளன. புத்தகக் காட்சியின் தொடக்க விழா நிகழ்வில் 2023-ம் ஆண்டிற்கான முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதினையும், சிறந்த பதிப்பாளர்களுக்கான விருதையும், பபாசி விருதுகளையும் முதல்வர் வழங்க இருக்கிறார்.

புத்தகக் காட்சி

தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு மிகப்பெரும் ஊக்கமாக இருக்கும் புத்தகக் காட்சி மட்டுமல்லாது, சமீபத்தில் எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கியது, போற்றத்தகுந்த ஆளுமைகளுக்கான ‘தகைசால் தமிழர் விருது’, பல்வேறு இலக்கிய விருதுகள், நூலகங்களில் சிறப்புக் கவனம், அகழ்வாராய்ச்சிக்கு முக்கியத்துவம் என்று தமிழ் வளர்ச்சி தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்துவருகிறது.

இந்த நடவடிக்கைகள் குறித்து முன்னணி தமிழ் எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் இமையம் ஆகியோர் பேசுகின்றனர். சாகித்ய அகாடமி விருது வென்ற இவ்விரு எழுத்தாளர்களுக்கும் தமிழக அரசு வீடு வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“படைப்பாளிகளின் கனவு பூர்த்தியாகி வருகிறது!” – எஸ். ராமகிருஷ்ணன்

“எழுத்து, இலக்கியம், பண்பாடு சார்ந்து தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் முன்மாதிரியானவை. தமிழ் மொழி மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் மீதான அரசின் அக்கறையாகவே இதை நான் பார்க்கிறேன்.

நல்ல நல்ல எழுத்தாளர்களை அங்கீகரிக்கும் விதமாக அவர்களுக்கு வீடு, இலக்கியத் திருவிழாக்கள், சர்வதேசப் புத்தகக் காட்சி, சிறந்த வெளிநாட்டுப் படைப்புகள் தமிழில் வருவதை ஊக்குவிப்பது, மதுரையில் கட்டப்பட்டு வரும் மாபெரும் கலைஞர் நூலகம் போன்ற எண்ணற்ற நடவடிக்கைகள் இதற்கான சாட்சிகளாக விளங்குகின்றன. குறிப்பாகக் கரிசல் இலக்கியத்தின் பிதாமகரான கி.ராஜநாராயணன் அவர்களுக்கு மணி மண்டபம் எழுப்பியதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அரசு மரியாதையுடன் அவர் இறுதி அஞ்சலியும் நடத்தப்பட்டது.

எஸ்.ராமகிருஷ்ணன்

மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் எண்ணத்தை ஊக்குவிக்கிறார்கள். சமீபத்தில் சார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் காட்சிக்கு அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளார்கள். இதுமாதிரியான முன்மாதிரி நடவடிக்கைகள் இதுவே முதன்முறை!

மாவட்டந்தோறும் புத்தகக் காட்சி திட்டத்தை அரசு தற்போது முன்னெடுத்துள்ளது. எழுத்தாளர்களை அங்கு வரவேற்று அவர்களையும் வாசகர்களையும் இணைக்கும் பணியை அரசே செய்துவருகிறது. இலக்கிய மாமணி எனும் விருது உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் அறிஞர்களை இனம் கண்டு அவர்களுக்கு உரிய மரியாதை செய்யப்படுகிறது.

சென்னைப் புத்தகக் காட்சியில் சர்வதேச அரங்கு அமைக்கப்பட இருப்பது பாராட்டுக்குரியது. இதனால் பல சிறந்த தமிழ்ப் படைப்புகள் பிற மொழியினருக்கும் சென்றடையும். பிற மொழி படைப்புகளையும் நாம் பெற்றுப் பயனுற முடியும். இதற்கு அரசே நிதி உதவி வழங்குவதை வரவேற்கிறேன்.

சென்னைப் புத்தகக் காட்சி

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வழியாகத் தமிழின் சிறந்த நூல்களை ஆங்கிலம் மற்றும் பிற இந்திய, உலக மொழிகளில் மொழிபெயர்த்து வழங்கி வருகின்றனர். என்னுடைய படைப்புகள், கி.ரா. பூமணி, தி.ஜானகிராமன், உ.வே.சா போன்ற பல்வேறு படைப்பாளிகளின் புத்தகங்கள் தற்போது பிற மொழிகளில் கிடைக்கின்றன. இன்று மருத்துவ நூல்கள் கூட நேரடியாகத் தமிழில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பழைமை வாய்ந்த தமிழ் மொழியை இன்று புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அணுகும் வாய்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் பண்பாடு மற்றும் இலக்கியம் சார்ந்த பல்வேறு புதுமையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மிகச் சிறப்பாக எடுத்து வருவதை நினைத்து பூரிப்படைகிறேன்.

“கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய தமிழக அரசு!” – இமையம்

“தமிழக எழுத்தாளர்களுக்கும், தமிழ்மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் இந்த ஆட்சி செய்துவரும் காரியங்கள் மிகவும் பிரமிக்கத்தக்கவை; போற்றத்தக்கவை.

சாகித்ய அகாடமி, மாநில, தேசிய மற்றும் சர்வதேச இலக்கிய விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கனவு இல்லத் திட்டத்தின் மூலம், தமிழக அரசு 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகளை வழங்கி கௌரவித்துள்ளார்கள்.

தமிழக அரசு, தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் வாயிலாக நூறு எழுத்தாளர்களின் நூறு புத்தகங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம், பிற இந்திய, பன்னாட்டுப் பதிப்பகங்களோடு இணைந்து, நூறு புத்தகங்களை மொழிபெயர்த்து, பல மொழிகளுக்குக் கொண்டுபோகும் பெரும் முயற்சியைக் கையில் எடுத்துள்ளார்கள். அதற்காக 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 200 அல்லது 300 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த அச்சிடப்படாத மருத்துவ மற்றும் அறிவியல் நூல்கள் எல்லாம் மீண்டும் அச்சிடப்பட்டு மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டுவரப்பட உள்ளன.

எழுத்தாளர் இமையம்

மொழியையும் பண்பாட்டையும், தமிழையும் தமிழர்களையும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடியவை. அந்த வகையில், மாதந்தோறும் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு சர்வதேச சினிமா திரையிடும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த இருக்கிறது. இதைப் பொழுதுபோக்காகக் கருதாமல், கல்வியாகப் பார்க்க வேண்டும்.

யாரும் கேட்காமலே, எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லத் திட்டம், மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகள் என்று சிறப்பான திட்டங்களைத் தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. புத்தகக் காட்சிகளுக்கு எழுத்தாளர்களை அழைத்து, பேச மேடையளித்து கௌரவிப்பது போன்ற நற்காரியங்களைச் செய்து வருகிறார்கள்.

சர்வதேச புத்தகக் காட்சியில் சர்வதேச எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், இலக்கிய முகவர்கள் (Literary Agents) மற்றும் மொழிபெயர்ப்பாளர்களைப் பங்குபெற அழைத்திருக்கிறார்கள். இதன்மூலம், தமிழில் உள்ள சிறந்த நூல்கள் சர்வதேச மொழிகளில் பல நாடுகளைச் சென்றடையும்.

சென்னைப் புத்தகக் காட்சி

சமீபத்திய புத்தக வெளியீட்டு விழாக்களில் ஆசிரியர்களும், மொழிபெயர்ப்பாளர்களும் அழைத்துக் கௌரவப்படுத்தப்பட்டனர். இது இனி தொடர்ந்து புத்தக வெளியீட்டு விழாக்களில் நடைபெறவிருக்கிறது. இதேபோல சிறு பத்திரிகைகளுக்குப் பண உதவியும் வழங்கப்பட்டு வருவதைப் பெரிதும் வரவேற்கிறேன்.”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.