நம்மில் பலருக்கும் பயணம் செய்வது பிடிக்கும். குழுவாகவோ, நண்பர்களுடன் இணைந்தோ, குடும்பத்தினருடனோ நாம் செல்வதுதான் வழக்கம் என்றாலும், சில இடங்களுக்கு தனியாகச் செல்ல வேண்டும் என்று தோன்றும். தனி பயண அனுபவம், பல சூழ்நிலைகளை நாம் எளிதாகக் கடக்க உதவும் எனலாம்.

தனியாகப் பயணம் செய்ய ஆசை இருந்தாலும், பலருக்கும் அது குறித்த சந்தேகங்களும், அச்ச உணர்வும் இருக்கும். “சில விஷயங்களை மட்டும் பின்பற்றுங்கள். தயக்கம், அச்சமின்றி உங்களால் பயணத்தை தனியாக மேற்கொள்ள முடியும்’’ என்கிறார், கடந்த 6 வருடங்களில் 16 மாநிலங்களுக்குத் தனிப் பயணம் மேற்கொண்டுள்ள, ராமநாதபுரத்தை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயர் லீலா ராஜேந்திரன். அவர் தரும் டிப்ஸ்…

லீலா ராஜேந்திரன்

1. குழு பயணம்

தனிப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு உங்களுக்கு பயணங்கள் பற்றிய அடிப்படை அனுபவம் தேவை. அதற்கு நீங்கள் குழுவாகவோ, நண்பர்களுடனோ பயணம் மேற்கொள்ளுதல் அவசியம்.

இதன்மூலம் பயணங்கள் பற்றி பல விஷயங்கள், ஒவ்வோர் இடம் மற்றும் அங்கு வாழும் மனிதர்களின் இயல்பு, பயணத்தில் ஏற்பட வாய்ப்புள்ள அசௌகர்யங்கள், சவால்கள் எனப் பலவற்றையும் தெரிந்துகொள்ள இயலும்.

2. பயண தூரம்

ஆரம்பத்தில் தனியாகப் பயணம் செய்யத் தொடங்கும்போது, அருகில் உள்ள இடங்களுக்கு முதலில் பயணம் செய்யுங்கள். அது பார்த்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த அனுபவம்தான், நீங்கள் தூரப் பயணம் செய்ய தேவைப்படும் தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.

3. திட்டமிடுதல்

போகும் ஊர், செல்லும் வாகனம், தங்குமிடம், பார்க்கும் இடம் என அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிடுங்கள். குறிப்பாக பெண்களாக இருந்தால் இவற்றை எல்லாம் முன்னரே அறிந்து குறிப்புகளுடனும், திட்டத்துடனும் செல்லுங்கள். பொதுவாக ரயில், பஸ் போன்று பொது போக்குவரத்தை பயன்படுத்துதல் நல்லது.

4. தங்குமிடம்

தனிப்பயணம் மேற்கொள்ளுபவர்களுக்கு என ஹாஸ்டல் போன்ற தங்குமிடங்கள் உண்டு. அவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. அவற்றின் மீதான ரெவ்யூ உள்ளிட்டவற்றை சரிபார்த்துக் கொள்ளவும். நண்பர்கள் வீடு அல்லது உறவினர்கள் வீடு என இருந்தாலும் நல்லது.

5. உடமைகள்

தேவையான உடைகள், ஷூக்கள், வாட்டர் பாட்டில், மற்றும் உங்களுக்குத் தேவையான சில முக்கியமான பொருட்களை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்தான். என்றாலும், உங்களால் தூக்க முடிந்த அளவிற்கு மட்டும் பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

கூடவே வரைபடங்களை எடுத்துக் கொள்வது அவசியம். சில இடங்களில், மொபைல்போன் நெட்ஒர்க் இருக்காது. அதுபோன்ற இடங்களுக்குச் செல்லும் முன் அந்த இடத்தை கூகுள் மேப்பில் டவுன்லோடு செய்து கொள்ளவும்.

6. பாதுகாப்பு

செல்லும் ஊரில் தெரிந்த ஒருவரின் தொலைபேசி எண் மற்றும் ஹெல்ப்லைன் எண்கள் சேமித்துக் கொள்ளவும். தேவையான அளவுக்கு மட்டுமே பணத்தை எடுத்துக் கொள்ளவும். சாத்தியமுள்ள இடங்களில் கூகுள் பே உள்ளிட்ட ஆன்லைன் பேமென்ட் முறையை பின்பற்றுவது, அவ்வப்போது ஏ.டி.எம்களில் பணக் எடுத்துக்கொள்வது என்று பின்பற்றவும்.

தெளிவான, பாதுகாப்பான திட்டமிடல், சூழலை சந்திக்கும் தைரியம் மற்றும் சமயோசிதம் இவற்றுடன் சென்றால்… ஹேப்பி ட்ரிப் காத்திருக்கிறது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.