‘ஸ்டேடிக்’ மீட்டர்:

தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. அதில், விவசாயத்திற்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. வீடுகளை பொறுத்தவரை 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்படும். உயர் அழுத்த மின்சாரம் மாதந்தோறும் கணக்கீடு செய்யப்படும். தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்ய ‘ஸ்டேடிக்’ என்ற மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் மின்சாரம் துல்லியமாக பதிவு செய்யப்படும். 2 மாதங்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு செல்லும் மின்வாரிய ஊழியர்கள், அதனை கணக்கீடு செய்து நுகர்வோர்களுக்கு தெரிவிப்பார்கள். இவ்வாறு கணக்கெடுத்த பிறகு நுகர்வோர் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

மின்சாரம்

‘ஸ்மார்ட்’ மீட்டர்:

இந்நிலையில் முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், மின்வாரியத்திற்கு கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் ‘ஸ்மார்ட்’ மீட்டர் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் மீட்டரில் மின் பயன்பாடு தேதி மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்படும். பிறகு தொலைத்தொடர்பு வசதியுடன் அலுவலக ‘சர்வர்’ உடன் இணைக்கப்படும்.

இதனால் மின் பயன்பாட்டை தானாகவே ‘ஸ்மார்ட்’ மீட்டர் கணக்கெடுத்து விடும். அதற்கான கட்டணம் விபரம் எஸ்.எம்.எஸ் மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படும். ஒருவேளை கடைசி தேதிக்குள் மின்கட்டணத்தை நுகர்வோர் செலுத்தவில்லை என்றால், மின் விநியோகம் தானாகவே துண்டிக்கப்பட்டுவிடும். பிறகு நுகர்வோர் கட்டணம் செலுத்தியதும் மீண்டும் இணைப்பு வழங்கப்படும்.

மின்சாரம்

உயர்த்தப்பட்ட மின்கட்டணம்:

இதனால் ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கு எடுக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் துல்லியமாக மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும் என்று மின்சார வாரியம் கூறுகிறது. ஆனால் தற்போது ‘போஸ்ட்பெய்ட்’ திட்டமாக இது அறிமுகம் செய்யப்பட்டாலும், வரும் காலங்களில் ‘ப்ரீபெய்ட்’ டாக மாறக்கூடும் என பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். முன்னதாக தமிழக மின்சார வாரியம் கடனில் இருப்பதாக கூறி கடந்த செப்டம்பர் 10ம் தேதி முதல் அனைத்து துறைகளுக்கும் மின் கட்டணத்தை உயர்த்தியது.

வீட்டு மின் விநியோக பிரிவில் நுகர்வோருக்கான யூனிட் அடிப்படை விலை ரூ.2.5ல் இருந்து ரூ.4.50 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் 400 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் 500 யூனிட் வரையில் யூனிட் ஒன்றுக்கு ரூ.6 ஆக அதிகரித்தது. இவ்வாறு ஒவ்வொரு 100 யூனிட் முதல் 1000 யூனிட் வரையில் மின்சாரத்தின் விலை உயர்த்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ‘ஸ்மார்ட்’ மீட்டர் மூலம் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் திட்டம் வேகம் எடுத்திருக்கிறது. இது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

மின்கட்டணம்

தானாக இணைப்பு துண்டிப்பு:

இதுகுறித்து நம்மிடம் பேசிய பெயர் சொல்ல விரும்பாத மின்வாரிய அதிகாரி ஒருவர், “ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. வீடு, விவசாயம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் ‘ஸ்மார்ட்’ மீட்டர் பொருத்த சொல்லிவிட்டார்கள். இப்பணியை 2025-ம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், தற்போது மொபைலுக்கு எப்படி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி எஸ்.எம்.எஸ் வருகிறதோ அப்படி மின் கட்டணத்திற்கும் எஸ்.எம்.எஸ் வரும். அந்த குறிப்பிட்ட நாளில் செலுத்தவில்லை என்றால் இணைப்பு தானாக துண்டிக்கப்பட்டுவிடும். விடுமுறை தினங்கள், இரவு நேரங்களில் இணைப்பு துண்டிப்பு இருக்காது. தற்போது ‘போஸ்ட்பெய்ட்’ திட்டமாக தான் செயல்படுத்த சொல்கிறார்கள்” என்றார்.

மின்சாரம் (Representational Image)

கருத்துகேட்பு கூட்டம் நடத்த வேண்டும்:

இதுகுறித்து நம்மிடம் பேசிய மக்கள் விழிப்புணர்வு மையதின் செயலாளர் வி.ராமராவ், “தற்போது இந்த திட்டத்தை தி.நகரில் செயல்படுத்தியிருக்கிறார்கள். அதன் செயல்பாடு குறித்து பொதுமக்களுக்கு விளக்கவில்லை. இதன் மூலம் மின்வாரியத்திற்கு பணியாளர்கள் எண்ணிக்கை குறையும். ஆனால் பொதுமக்களுக்கு என்ன பயன் என்று தெரிவிக்க வேண்டும். இந்த மீட்டருக்கு ஆகும் செலவை பொதுமக்களிடம் இருந்து தான் மறைமுகமாக வசூல் செய்வார்கள். எனவே பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பிறகுதான் மற்ற இடங்களில் செயல்படுத்த வேண்டும். பொதுமக்களிடம் அவர்கள் கலந்து ஆலோசிக்கவில்லை.

தன்னிச்சையாக செயல்படுத்துவது சரியில்லை. தமிழகத்தில் இருக்கக்கூடிய ஏழை மக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டால், அவர்களால் பணம் உடனடியாக செலுத்த முடியாது. நமது பொருளாதாரம் திட்டமிட்டு வரக்கூடியது இல்லை. கொரோனா வந்த பிறகு நிலைமை மேலும் மோசமாக இருக்கிறது. இன்னும் பொருளாதாரம் நல்ல நிலைக்கு வரவில்லை. இந்த நிலையில் இது பொதுமக்களுக்கு மேலும் பிரச்னையாகத்தான் இருக்கும். எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு பொதுமக்கள் மத்தியில் கருத்துகேட்பு கூட்டம் நடத்திய பிறகு செயல்படுத்த வேண்டும்” என்றார்.

சுப்பிரமணி

பணியாளர்களின் எண்ணிக்கை குறையும்:

இதுகுறித்து நம்மிடம் பேசிய மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் பொதுச் செயலாளர் மு.சுப்பிரமணி, “தற்போது வீடுகளுக்கு நேரடியாக சென்றுதான், மின்சார பயன்பாட்டை ஊழியர்கள் கணக்கெடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது ‘ஸ்மார்ட்’ மீட்டர் முழுமையாக பொருத்தப்பட்டு விட்டால் தானியங்கி முறையில் மின்சார பயன்பாடு கணக்கெடுக்கப்பட்டுவிடும். இதனால் அப்பணியை செய்துவரும் பணியாளர்களுக்கு சிக்கல் ஏற்படும்.

மேலும் மின்வாரியம் ஏற்கெனவே கடனில் இருப்பதாக சொல்லித்தான் கட்டணத்தை உயர்த்தினார்கள். தற்போது இவ்வாறு ‘ஸ்மார்ட்’ மீட்டர் பொருத்தப்படுவதால், அதை வாங்குவதற்கு மின்வாரியத்திற்கு கூடுதல் செலவு ஏற்பட்டிருக்கிறது. எனவே இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். ஒரு புதிய திட்டத்தால் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். நாடு வளர்ச்சியடைய வேண்டும். எனவே இந்த திட்டத்தால் என்ன பயன் என்பதையும் விளக்க வேண்டும்” என்றார்.

ராஜேஷ் லக்கானி

ஏராளமான நன்மைகள் இருக்கின்றன:

இதுகுறித்து நம்மிடம் பேசிய மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, “தி.நகரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ‘ஸ்மார்ட்’ மீட்டர் பொருத்த போகிறோம். இது அரசின் கொள்கை முடிவு. இதன் மூலம் பொதுமக்களுக்கு ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. குறிப்பாக பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை தெளிவாக பார்க்க முடியும்.

கட்டணம் செலுத்துவதற்கு 15 நாட்கள் கால அவகாசம் தருகிறோம். அதன் பிறகு செலுத்தவில்லை என்றால் தான் இணைப்பு துண்டிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் தானியங்கி முறையில் மின் பயன்பாடு கணக்கெடுக்கப்படும். இதனால் கணக்கெடுப்பின் போது தவறு ஏற்படுவது குறையும். தற்போது ‘ப்ரீபெய்ட்’ மீட்டருக்கு திட்டமிடவில்லை” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.