கொங்கு மண்டலத்தில் பண்டைய காலத்தில் இருந்தே வள்ளி கும்மியாட்டம் இருந்து வந்துள்ளது. தமிழ்க் கடவுளான முருகனை, நாடோடி இனத்தில் பிறந்த வள்ளி திருமணம் செய்த கதையை பாரம்பர்ய நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடன அசைவுகளுடன் நடனம் ஆடுவதே வள்ளி கும்மியாட்டம் எனப்படுகிறது.

முன்பெல்லாம் கோயில் திருவிழாக்களில் விடிய, விடிய வள்ளி கும்மியாட்டம் நடத்தப்பட்டது. காலப்போக்கில் இந்த பாரம்பர்ய வள்ளி கும்மியாட்டக்கலை அழியத் தொடங்கியது.

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம்.

இந்தக் கலையை மீட்டெடுக்கும் வகையில் கொங்கு மண்டலத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் கும்மியாட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக வள்ளிக் கும்மியாட்டத்தை இளைய தலைமுறையினருக்கு பயிற்சி அளித்து வருவதன் மூலம் இந்த நாட்டுப்புறக்கலை மீட்டெடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், மங்கை வள்ளி கும்மியாட்டக் குழு சார்பில், சாகர் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் ஒரே இடத்தில் 1,000 பெண்கள் பங்கேற்ற வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடந்தது. உலக சாதனை முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் தலைமை வகித்து பேசினார். பெருந்துறை பாலு, வெள்ளோடு நடராஜ் கவுண்டர், வழக்கறிஞர் மணியன், நிர்வாக இயக்குநர் ரேகா கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சக்தி மசாலா நிர்வாக இயக்குநர் சாந்தி துரைசாமி, சரஸ்வதி ஆகியோர் குத்து விளக்கேற்றினர். சாகர் இன்டர்நேஷனல் பள்ளித் தாளாளர் சௌந்தரராசன் வரவேற்றார்.

வண்ண உடைகளுடன் வள்ளி கும்மியாட்டம்.

இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், முன்னாள் கேரள ஆளுநருமான ப. சதாசிவம், “கொங்கு மண்டலத்தில் வள்ளி கும்மியாட்டக் கலை புத்துயிர் பெற்று வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. பண்டைய காலத்தில் கும்மியாட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வந்துள்ளது. காலமாற்றத்தால் கும்மியாட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. வைகாசியில் கொண்டாடப்படும் மாரியம்மன் திருவிழாவின்போது முளைப்பாரி எடுத்து வரும் பெண்கள் கும்மியடிக்கின்றனர்.

நாட்டுப்புறப் பாடல்களுடன் பாரதியார், பாரதிதாசன் பாடல்களையும் கும்மியடிக்கும்போது பாடுவதுண்டு.
அகநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் கும்மி பற்றிய குறிப்புகள் உள்ளன. திரைப்படம், ரேடியோ, தொலைக்காட்சிகளின் வருகையாலும், மேற்கத்திய இசையான பேண்டு வாத்தியம், இன்னிசைக் கச்சேரி போன்றவற்றாலும் வள்ளி கும்மி மீது மக்களுக்கு நாட்டம் குறையத் தொடங்கியது.

அழிந்து வந்த கும்மி ஆட்டக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் வள்ளி கும்மியாட்டக் கலை பயிற்சியை ஒரு சில ஆசிரியர்கள் இலவசமாக அளித்து வருவது பாராட்டுக்குரியது.

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நினைவுப்பரிசு.

கேரளாவில் செண்டைமேளக்கலையை வளர்க்கும் வகையில், அதனை கற்றுத் தரும் பயிற்சி ஆசிரியர்களுக்கு, அந்த மாநில அரசு உதவித்தொகையினை வழங்கி ஊக்குவிக்கிறது. அதேபோல, தமிழக அரசும் நம்முடைய மாநிலத்தில் பயிற்சி ஆசிரியர்களுக்கு உதவித்தொகை வழங்கி, இதுபோன்ற கலையை காப்பாற்ற வேண்டும்.

கும்மி ஆட்டத்தை உலகறியச் செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமை. சென்னை, டெல்லியில் நடைபெறும் குடியரசு, சுதந்திர தின நிகழ்ச்சிகளில் வள்ளி கும்மியாட்டத்தையும் பங்கேற்கச் செய்யும் வகையில் என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வேன்” என்றார்.

நிகழ்ச்சியில் சக்தி மசாலா நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பி.சி. துரைசாமி, பட்டக்காரர் பாலசுப்ரமணியம், கொங்கு வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர்  சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.