தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரைச் சேர்ந்தவர் அப்துல்காதர். இவருக்கு ரகுமத்துல்லா, கலீல்ரகுமான் என இரு மகன்கள் இருக்கின்றனர்.  இவர்கள் இருவரும் சமையல் தொழில் செய்து வருகின்றனர். அதே ஊரைச் சேர்ந்த ஹமீது என்பவரும்  சமையல் தொழிலாளி. கடந்த 2012-ம் ஆண்டு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சமையல் வேலைக்கு வருவதாகக்கூறி ரகுமத்துல்லா, கலீல்ரகுமான் ஆகியோரிடம் ஹமீது ரூ.2,000-ஐ அட்வான்ஸ் தொகையாக வாங்கினார்.

திருச்செந்தூர் நீதிமன்றம்

ஆனால், சொன்னபடி வேலைக்கு  செல்லவில்லையாம். இது தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி ஆத்தூரில் வைத்து ரகுமத்துல்லா, கலீல்ரகுமான் ஆகிய இருவரும் ஹமீதுவிடம்  சமையல் வேலைக்கு முன்பணமாகக் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திரும்பக் கேட்டனர். அப்போது  அவர்களுக்குள் வாக்குவாதம்  ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த ஹமீது, பீர்பாட்டிலை உடைத்து  ரகுமத்துல்லாவின் தலை, வயிற்றில் குத்தியிருக்கிறார்.

இதனைத் தடுக்க வந்த கலீல்ரகுமானை கழுத்தில் குத்தியிருக்கிறார்.  மேலும் ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனால் அண்ணன், தம்பி இருவரும் படுகாயமடைந்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஹமீதுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்செந்தூர்  நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணைக்குப் பிறகு நீதிபதி வஷித்குமார்,  “குற்றம் சாட்டப்பட்ட ஹமீது கொலை முயற்சி செய்ததாக  20 ஆண்டுகளும், கொலை மிரட்டல் விடுத்ததாக  5 ஆண்டுகளும் என 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததுடன், ரூ.12,000  அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

திருச்செந்தூர் நீதிமன்றம்

இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும், அபராதத்  தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை  அனுபவிக்க வேண்டும்” எனவும் உத்தரவிட்டார்.  கொலை முயற்சி செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.