சேலம், அஸ்தம்பட்டி அருகே உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக இருந்து வருபவர் சங்கர். இவர் சேலம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிறுவனத்தில் 20-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் உள்பட 30 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாநகர் சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ படித்த இளம்பெண் ஒருவர், கடந்த 9 மாதம் காலமாக அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் இருந்து பணியிலிருந்து விலகி, மற்றொரு நிறுவனத்தில் இணைந்துள்ளார். இதனால் அந்த பெண்ணிற்கு தர வேண்டிய ஊதியத்தை தராமல் இழுக்கடித்து வந்துள்ளார் சங்கர் எனக் கூறப்படுகிறது.

சங்கர்

இதனையடுத்து அந்த பெண் ஊழியர் சங்கரை செல்போனில் தொடர்புக்கொண்டு என்னுடைய சம்பளத்தை வழங்கும்படி கேட்டுள்ளார். அப்போது, கட்டுமான நிறுவன உரிமையாளர் சங்கர், `சம்பளம் வேண்டும் என்றால் நேரில் சந்திக்கலாம்’ என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு அந்தப் பெண், `நான் அலுவலகம் வருகிறேன் சார்’ என்று சொல்கிறார். அதற்கு, `அங்கு வேண்டாம்; வெளியே சந்திக்கலாம்’ என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, `நான் காரில் வருகிறேன். வா, ஒன்றாக ஏற்காடு சென்று உணவருந்திவிட்டு, அரைமணி நேரம் பேசிவிட்டு உன்னுடைய சம்பளத்தை வாங்கி செல்’ என்று பேசும் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக மாவட்ட சமுக நலத்துறையினர் இதில் சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி ரஞ்சிதா தேவியிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து விசாரித்ததில் அவர் அளித்த வாக்குமூலங்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சங்கரை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். மேலும் என்னுடைய தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.” என்றார்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சங்கரிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட பெண் 9 மாத காலமாக எனது நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருடைய அப்பா தான் எனது நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன் நான் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்ததால், சம்பந்தப்பட்ட பெண் என்னுடைய அனுமதி இல்லாமல், எனது லெட்டர் பேடில் அனுபவ சான்றிதழ் தயார் செய்து வேறொரு நிறுவனத்திற்கு மாற பார்த்துள்ளார். இது தெரிந்து நான் அவரின் அப்பாவை அழைத்து வந்து என்னை பார்க்க சொல்லியிருந்தேன். எனது அலுவலகத்தை பொறுத்தவரையில் எனது வாட்ஸ்அப் எப்போதும் அலுவலக கம்பியூட்டர்களில் ஒபனில் தான் இருக்கும். மேலும் இதனை அலுவலகத்தில் உள்ளவர்கள் அலுவலக பயன்பாட்டிற்காக பயன்படுத்துவது உண்டு. மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணை ஏற்காடு அழைத்ததற்கு காரணம், எனக்கு ஏற்காட்டிலும் அலுவலகம் செயல்பட்டுவருகிறது. என்மீது தவறான குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்” என்றார்.

மேலும் இதுதொடர்பாக அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பால்ராஜ் பேசியபோது, “சம்பந்தப்பட்ட பெண் தரப்பில் இருந்து யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. கடந்த 2 நாள்களுக்கு முன் அந்த கட்டுமான நிறுவனத்தின் மூலம் தான் புகார் ஒன்று வந்துள்ளது. அதுதொடர்பாக விசாரித்து வருகின்றோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.