சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சர் பூபேஸ் பாகல் செயல்படுத்தும் சிறப்பான விவசாய திட்டங்களுக்காக   தமிழக விவசாயிகள் 3 பெண்கள் உள்பட 14 பேர் அவரை நேரில் சந்தித்து பாராட்டி வந்துள்ளனர்.

முதல்வர் பூபேஸ் பாகல்

இக்குழுவில் பங்கேற்ற தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதனிடம் பேசினோம்.

“அந்த மாநிலத்தில் நெல் உற்பத்தியாளர்களின் நலன் கருதி, அந்த மாநில முதல்வர், இந்திய உணவுக்கழகம் அளிக்கின்ற நெல்லிற்கான குறைந்தபட்ச ஆதார விலையைவிட, குவிண்டால் ஒன்றிற்கு ,மாநில அரசின் கூடுதல் ஆதரவு விலை ரூ. 500 ஊக்கத்தொகையாக தருகிறார். குவிண்டாலிற்கு  ரூ.2,660 வழங்கப்பட்டு வருவதை அறிந்து, நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்.

நெல் கொள்முதலில் அத்துமீறல்கள் கிடையாது…

ராய்ப்பூர் மாவட்டம், ‘மந்திர்ஹாசாட்’ கிராமத்திலுள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நெல் கொள்முதல் பணிகளையும், நெல்லை விற்க வந்த உழவர்களையும் நேரில் பார்த்து, அவர்களின் அனுபவங்களையும் கேட்டறிந்தோம்.

அக்கொள்முதல் நிலையங்களில், தமிழ்நாட்டைப் போல் குவிண்டாலிற்கு ரூ.125/- கட்டாய லஞ்சம் வாங்கும் பகல் கொள்ளை நடைமுறை கிடையாது எனவும், நெல்லிற்கான குறைந்தபட்ச ஆதார விலையினை, அன்றைய தினமே, அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள், தொடர்புடைய உழவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருவதையும், கொள்முதலில்  சாக்கு பற்றாக்குறை எக்காலத்திலும் கிடையாது என்றும்,கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் மிக பாதுகாப்பான, உயரமான, நடைமேடை தளங்களில் அடுக்கப்பட்டு தேவையான தார்பாய்கள் கொண்டு பாதுகாக்கப்பட்டு வருவதை கண்டு பிரமித்துப் போனோம்.

நெல் கொள்முதலில் அரசியல்வாதிகள், இடைத்தரகர்களின் அத்துமீறல்கள் அறவே கிடையாது என அம்மாநில உழவர்கள் தெரிவித்தனர்.

சுவாமிமலை சுந்தர.விமல்நாதன்

நெல்லிற்கு கூடுதல் ஊக்கத்தொகை!

அதனைத் தொடர்ந்து அம்மாநில வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.  அம்மாநிலம் நிகழாண்டு கரும்பிற்கான கொள்முதல் விலையாக, டன் ஒன்றுக்கு ரூ 4,040, கரும்பு அரைக்கப்பட்டதிலிருந்து 14 தினங்களுக்குள் வழங்கப்படுதையும், அம்மாநில வேளாண்துறை மற்றும் உழவர் நல அமைச்சர் ரவேந்திர சௌபே தெரிவித்தார். மேலும் அவர், ‘நெல்லிற்கு அம்மாநிலம் அளித்துவரும் கூடுதல் ஊக்கத்தொகையினால், நெல் உற்பத்தி கடந்த காலங்களில் 62 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து,  நிகழாண்டில் ஒரு கோடியே பத்து லட்சம் டன்னிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நடப்பு டிசம்பர் ஜனவரியில் கொள்முதல் சாதனையை நிச்சயமாக படைப்போம்’ எனவும் எங்களிடமும் அம்மாநில உழவர்களிடம் உற்சாகத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்தினார்.

அம்மாநில அரசு நெல், கரும்பு உழவர்களை மட்டுமல்லாது காய்கறி, மலர்கள், சிறுதானியங்கள், எண்ணை வித்துக்கள் உள்ளிட்ட அனைத்து வகை சாகுபடியாளர்களையும் ஊக்குவித்து முன்னேற்றி அவர்களது வாழ்வில் விடியலை ஏற்படுத்திட சிறப்பு திட்டமாக “முதல்வரின் உழவர்கள் வெகுமதி திட்டம்  முதல்வர் விவசாய நியாய நிதித்திட்டத்தின் கீழ் அனைத்துவகை பயிருக்கும், ஆண்டிற்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ 10 ஆயிரம் இடுபொருளிற்கான நிதியினை உழவர்களின் வங்கி கணக்கிற்கு இலவசமாக அனுப்புகின்றனர்.

விவசாயி

இதில் சிறு, குறு, பெரிய விவசாயி என்ற பாரபட்சம் கிடையாது. அம்மாநில அரசு உழவர்கள் நலனில் அதிக அக்கறையுடன் சுமார் ரூ1 லட்சத்து 50 ஆயிரம் கோடியை பல திட்டங்களுக்கு வழங்கி வரலாற்று பதிவு செய்துள்ளது. இவ்வாறு விவசாயத்தை மேம்படுத்துவதற்கு அம்மாநில அரசு செய்துவரும் முயற்சிகளை கேட்டறிந்து வந்துள்ளோம். வேளாண்துறை அமைச்சர் விதை மணிகளை எங்களுக்கு நினைவுப்பொருளாக வழங்கினார்” என்றார். 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.