உலகமே கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்டது. புத்தாண்டு 2023 பிறக்கப்போகிறது. இதையொட்டி என்ன சமைத்து அசத்தலாம் என்று யோசிக்கிறீர்களா? புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் என்றாலே குக்கீஸ், கேக் வகைகள் இல்லாமலா? இந்த வாரம் சுவையான கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ் வகைகளை பார்ப்போம்…

கருப்பட்டி முட்டை புடிங்

தேவையானவை:

கருப்பட்டி – 100 கிராம்

தண்ணீர் – 5 டேபிள்ஸ்பூன்

முட்டை – 2 (90 -100 கிராம் இருக்க வேண்டும்)

வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்

வெண்ணெய்/எண்ணெய் – தேவைக்கேற்ப

கருப்பட்டி முட்டை புடிங்

செய்முறை:

கருப்பட்டியை நன்றாகப் பொடித்துத் தூளாக்கவும். அடுப்பில் வாணலி வைத்து பொடித்த கருப்பட்டி, 5 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். அதிக நேரம் அடுப்பில் வைக்க வேண்டாம். கரைந்ததும் வடிகட்டி ஆறவிடவும். முட்டையை லேசாக அடித்து (நுரை வரும்வரை அடிக்கக் கூடாது), ஆறிய கருப்பட்டிப் பாகு, எசன்ஸ் சேர்த்து லேசாகக் கலக்கவும். மோல்டு அல்லது டம்ளரில் சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் (வாசனையில்லா எண்ணெய்) தடவி, முட்டை – கருப்பட்டிக் கலவையை அதில் ஊற்றவும். வாய்ப்பகுதியை ஃபாயில் பேப்பரால் மூடவும் (இல்லையென்றால் வேகவைக்கும்போது தண்ணீர் உள்ளே சென்றுவிடும்).

அடுப்பில் ஒரு பான் வைத்து தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இந்த மோல்டு/டம்ளரை தண்ணீரில் மூழ்கிவிடாதபடி உள்ளே வைக்கவும். மூடி போட்டு 30 நிமிடங்கள் வேகவிடவும். வெந்துவிட்டதா என்று பதம் பார்க்க, கத்தியை கலவையின் நடுவே விட்டுப் பார்க்கவும். ஒட்டாமல் வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம். இல்லை என்றால் சிறிது நேரம் வேகவிடவும். வெந்ததும் வெளியே எடுத்து கட் செய்து பரிமாறவும். ஜெல்லிபோல இருக்கும் இந்த புடிங்.

எக்லெஸ் டூட்டி ஃப்ரூட்டி குக்கீஸ்

தேவையானவை:

மைதா மாவு – 50 கிராம்

சர்க்கரை – 30 கிராம்

கஸ்ட்டர்டுபவுடர் – 10 கிராம்

பேக்கிங் பவுடர் – ஒரு சிட்டிகை

பால் – 3 டீஸ்பூன்

உருக்கிய வெண்ணெய் – 2 டீஸ்பூன்

டூட்டி ஃப்ரூட்டி – ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

எக்லெஸ் டூட்டி ஃப்ரூட்டி குக்கீஸ்

செய்முறை:

பேக்கிங் அவனை 175 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்களுக்கு ப்ரீஹீட் செய்யவும். மைதா மாவு, சர்க்கரை, கஸ்ட்டர்டு பவுடர், பால், உப்பு, பேக்கிங் பவுடர், டூட்டி ஃப்ரூட்டி, உருக்கிய வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு, மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, வடை போன்று தட்டவும். பேக்கிங் டிரேயில் பட்டர் பேப்பர் விரித்து, தட்டியவற்றை வைக்கவும். இதனை பேக்கிங் ‘அவன்’ நடுவில் வைத்து 20 நிமிடங்கள் (அ) ஓரங்கள் பிரவுன் ஆகும்வரை பேக் செய்யவும். பின்னர் அவனில் இருந்து எடுத்து, ஆறியதும் காற்றுப்புகாத டப்பாக்களில் சேமித்து வைத்துச் சுவைக்கவும்.

குறிப்பு:

பேக் செய்ததும் குக்கீஸ் மிருதுவாக இருக்கும். குளிரக் குளிர கடினமாகிவிடும். ஒருவேளை அதற்குப் பிறகும் மிருதுவாக இருந்தால், மீண்டும் சில நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.

கேரள ப்ளம் கேக் (Non – alcoholic )

அரை கிலோ கேக் செய்யத் தேவையானவை:

மைதா மாவு – 150 கிராம்

சர்க்கரை – 150 கிராம்

முட்டை – 2

எண்ணெய்/உருக்கிய வெண்ணெய் – 50 மில்லி

வெனிலா எசன்ஸ் – ஒரு டீஸ்பூன்

உப்பு – கால் டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்

ஏலக்காய் – 4

பட்டை – 2 இஞ்ச் நீளத்துண்டு

கிராம்பு – 6

டூட்டி ஃப்ரூட்டி – 4 டேபிள்ஸ்பூன்

கிஸ்மிஸ் (உலர் திராட்சை) – 4 டேபிள்ஸ்பூன்

முந்திரி – 1 டேபிள்ஸ்பூன்

பாதாம் – 1 டேபிள்ஸ்பூன்

ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜூஸ் – அரை கப்

கேரமல் செய்ய:

சர்க்கரை – கால் கப்

தண்ணீர் – 2 டேபிள்ஸ்பூன் கப்

கேரள ப்ளம் கேக்

செய்முறை

ஊறவைக்க:

பாதாம், முந்திரி, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) இவற்றை அரை கப் ஆப்பிள் (அ) ஆரஞ்சு ஜூஸில் 24 மணி நேரம் ஊறவிடவும்.

கேரமல் செய்ய:

அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து மிதமான தீயில், சர்க்கரையைச் சேர்த்துக் கருகவிடவும். முழுவதும் கருகி நிறம் டார்க் பிரவுனாக மாறும்போது தள்ளி நின்றுகொண்டு (மேலே தெறிக்கும் என்பதால்), கொஞ்சம் தண்ணீர் சர்க்கரையில் சேர்க்கவும் தீயை அதிகமாக வைத்து நன்றாகக் கரையவிடவும். இப்போது சர்க்கரை கரைந்து கறுப்பு கலர் தண்ணீர் போன்று இருக்கும். கருகிய வாசம் வரும். இதுதான் பிளம் கேக் செய்யத் தேவையான கேரமல். இதனை ஆறவைக்கவும்.

கேக் செய்முறை:

கேக் பானில் (6-8 இன்ச்) லேசாக வெண்ணெய் (அ) எண்ணெய் தடவவும். இதில், ஒரு டேபிள்ஸ்பூன் மைதா மாவு தூவி, பானின் எல்லா பக்கங்களிலும் ஒட்டுமாறு தட்டி வைக்கவும். ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பை மிக்ஸியில் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும். ஊறிய பருப்பு வகைகள், கிஸ்மிஸ் (உலர் திராட்சை), டூட்டி ஃப்ரூட்டி அனைத்தையும் ஒரு பவுலில் எடுத்து ஒன்றாகக் கலந்து, 2 டேபிள்ஸ்பூன் மைதா மாவில் புரட்டி வைக்கவும். ஊறியதில் மீதமிருக்கும் ஜூஸை தனியாக எடுத்து வைக்கவும்.ஒரு பவுலில் மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடரைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மற்றொரு பவுலில் உருக்கிய வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும். இத்துடன், சர்க்கரை, முட்டை சேர்த்து நன்றாக நுரைத்துப் பொங்கும்வரை அடித்துக் கலக்கவும் (எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடித்தால், கேக் மிகவும் சாஃப்ட் ஆக வரும்). இதனுடன் ஆறிய கேரமல் சாஸ், வெனிலா எசன்ஸ், பொடித்த ஏலக்காய், கிராம்பு, பட்டைத்தூள் சேர்த்து சிறிது நேரம் அடிக்கவும். இத்துடன் மாவுக் கலவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து முட்டை அடிக்கும் விஸ்க் (whisk) அல்லது ஃபோர்க்கினால் மெதுவாகக் கலக்கவும் (இப்போது எலக்ட்ரிக் பீட்டர் பயன்படுத்த வேண்டாம்). பதம் இட்லி மாவைவிட கெட்டியாக இருக்க வேண்டும்.

இதில், மாவில் புரட்டி வைத்திருக்கும் டூட்டி ஃப்ரூட்டி, நட்ஸ் மற்றும் உலர் திராட்சை(கிஸ்மிஸ்), எடுத்து வைத்த ஜூஸ் சேர்த்து லேசாகக் கிளறவும். இதனை வெண்ணெய்/எண்ணெய் தடவி, மாவு தட்டி வைத்திருக்கும் பானில் ஊற்றி சமன் செய்யவும். பிறகு குக்கர் அல்லது பேக்கிங் அவனில் வைத்து பேக் செய்யவும்.

குக்கரில் பேக் செய்யும் முறை:

குக்கரை அடுப்பில் வைத்து உள்ளே ஒரு தட்டை வைக்கவும். குக்கர் மூடியை, தலைகீழாக மூடவும். பத்து நிமிடத்தில் குக்கர் நன்றாகச் சூடானதும், உள்ளே எந்த நீர்த் துளிகளும் இல்லை என்ற நிலையில், ரெடி செய்த கேக் பேனை, குக்கரின் உள்ளே உள்ள பிளேட்டின் மேல் வைக்கவும். மறுபடியும் மூடியைத் தலைகீழாக வைத்து மிதமான தீயில் 45 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு, மூடியை எடுத்துவிட்டு, டூத் பிக்கால் கேக் வெந்துவிட்டதா என்று குத்திப்பார்க்கவும். டூத் பிக்கில் மாவு ஒட்டினால், கூடுதலாக 10 நிமிடங்கள் தலைகீழாக மூடிபோட்டு வேகவிடவும். வெந்ததும் எடுத்து ஆறவிடவும். பிறகு, பேனில் இருந்து கேக்கை வெளியே எடுத்து துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்பு: குக்கரில் நீர் சேர்க்கத் தேவையில்லை. இது பேக் செய்வது, நீரில் வேகவைப்பது அல்ல.

அவனில் பேக் செய்யும் முறை:

பேக்கிங் அவனை 10 நிமிடங்கள் ப்ரீஹீட் செய்யவும். 175°C அல்லது 180 °Cல் டெம்பரேச்சர் செட் செய்யவும். அவனின் உள்ளே இருக்கும் இரண்டு ராட்களையும் ஃப்ரீ ஹீட்டின் போது ஆன் செய்ய வேண்டும். பிறகு நடுவில் உள்ள டிரேவில் ரெடி செய்து வைத்த கேக் பேனை வைத்து, 40-50 நிமிடங்கள் பேக் செய்யவும் (கேக் பேனின் அளவைப் பொறுத்து நேரம் மாறுபடும்).

பிஸ்தா பாயசம்

தேவையானவை:

பிஸ்தா(உப்பில்லாதது) – 100 கிராம்

துருவிய பிஸ்தா – ஒரு டீஸ்பூன்

ரவை – 3 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை – 10 டேபிள்ஸ்பூன்

பால் – அரை லிட்டர்

கன்டெண்ஸ்ட் மில்க் – 2 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

பிஸ்தா எசன்ஸ் – அரை டீஸ்பூன்

பச்சை ஃபுட் கலர் – 1 சிட்டிகை (விரும்பினால்)

நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

பிஸ்தா பாயசம்

செய்முறை:

50 கிராம் பிஸ்தாவுடன் சிறிது பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். மீதமுள்ள பிஸ்தாவை சிறுதுண்டுகளாக நறுக்கவும். அடுப்பில் வாணலி வைத்து நெய் சேர்த்து, நறுக்கிய பிஸ்தாவைச் சேர்த்து வதக்கவும் (லேசாக வறுத்தால் போதும்). இதில் ரவையைச் சேர்த்து 30 நொடிகள் வதக்கவும்.

பின்னர் பால், அரைத்து வைத்துள்ள பாதாம் பேஸ்ட் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை சேர்த்து, ரவை நன்றாக வேகும் வரை மிதமான தீயில் வேகவிடவும். வெந்ததும் கன்டெண்ஸ்டு மில்க், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பாயசம் கெட்டியானதும் எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து இறக்கவும். நறுக்கிய பிஸ்தா தூவிப் பரிமாறவும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.