லவ் & ஹேட் ரிலேஷன்ஷிப்பிற்கு சரியான உதாரணமாக அசிம் – ஏடிகே நட்பைச் சொல்லலாம். அசிம் ஸ்ட்ராங்கான பிளேயர் என்பதால் அவரின் நட்பு வேண்டும் என்கிற உள்ளார்ந்த விருப்பம் ஏடிகேவிற்குள் இருக்கிறது. ஆனால் குத்தலான கமென்ட்கள், அதீத தன்னம்பிக்கை, தன்னை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொள்ளுதல் போன்ற காரணங்களால் அசிமை வெறுக்கிறார். இந்தக் கோபத்தை ஏடிகேவால் மறைக்கவும் முடிவதில்லை. உணர்ச்சிவசப்பட்டு விட்டு பிறகு மன்னிப்பு கேட்கிறார். இரட்டை மனநிலையைக் கொண்ட ஒரு நட்பு.

முகத்தை பாவம் மாதிரி வைத்துக் கொண்டு ஜனனி அடிக்கும் கமெண்ட்டுகள் ரணக்கொடூரமாக இருக்கின்றன. இந்த எபிசோடில் ஷிவின் குறித்து ஜனனி சொன்ன ஒரு கமென்ட் நாராசமாக இருந்தது. (அப்பாவி போல் இருக்கும் இந்த நபர்தான்…)

பிக் பாஸ் 6 நாள் 67

நாள் 67-ல் நடந்தது என்ன?

Top 3 Finalists பற்றி ஜனனி சொல்லும் போது மணி (அன்பான தலைவர்), அமுதவாணன் (டாஸ்க்கில் முனைப்பு) ஆகிய இருவரையும் சுட்டிக் காட்டினார். நாமினேஷன் ஃப்ரீ வாய்ப்பின் பக்கத்தில் சென்றிருப்பவர்களாக தனலஷ்மி, ஜனனி, ஷிவின் மற்றும் ஏடிகேவை அறிவித்தார் பிக் பாஸ். ‘சுயநலமா யோசிச்சாதான் இங்க விளையாட முடியும்’ என்று மணிக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார் தனலஷ்மி. (பார்றா!)

“என் லைஃப்லயே நான் பல விஷயங்களை டேக் இட் ஈஸியாத்தான் எடுத்துப்பேன். இங்கயும் அப்படித்தான். இதுதான் என் இயல்பு. இதை என்னால மாத்திக்க முடியாது. மாத்திக்கவும் மாட்டேன்” என்று மணியிடம் மைனா சொல்லிக் கொண்டிருந்தார். ‘மைனா எப்பவும் காமெடியா இருக்கக்கூடாது’ என்று மற்றவர்கள் சொல்கிற விமர்சனத்திற்கான பதில் இது. மைனா சொல்வது உண்மையென்றால் அப்படி இருப்பதுதான் அழகு. அதுதான் நேர்மையும் கூட.

‘விக்ரம் வேதா’ படத்தின் தீம் மியூசிக்கோடு நாள் 67 விடிந்தது. ‘கட்டதுரை இன்னிக்கு களத்துல இறங்குவான். எத்தனை தலை உருளப் போகுதோ’ என்பது மாதிரி “அசிமால இன்னிக்கு எத்தனை பேர் பாரசிட்டமால் போடப் போறாங்களோ?!” என்று சொல்லி மைனாவும் ஜனனியும் பாவனையாக நடுங்க, அதைத் தனக்கான கிரெடிட்டாக எடுத்துக் கொண்டு வீரப்பா சிரிப்பு சிரித்தார் அசிம். “நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். அது உங்களுக்கே தெரியும்” என்று தனலஷ்மி அசால்ட்டாகச் சொன்னதால், அந்தச் சிரிப்பின் சதவிகிதம் சற்று குறைந்திருக்கலாம்.

பிக் பாஸ் 6 நாள் 67

ஜனனியின் ராஜகுரு அமுதவாணன் என்பது நிரூபணமாகிறது. அவர்கள் வழக்கமான ஸ்பாட்டில் அமர்ந்து காபி அருந்தும் போது உபதேசங்களாக அள்ளி விட்டுக் கொண்டிருந்தார் அமுதவாணன். லக்ஸரி பட்ஜெட்டில் அமுதவாணனுக்கான அறிவுக்கேள்விகள் வந்தன. ‘மிகப் பெரிய நிலவாழ் உயிரினம்’ என்பதற்கு ‘யானை’ என்பது உள்ளிட்ட இரண்டு கேள்விகளுக்கு மட்டும் சரியான பதில்களைச் சொன்னார். ‘நீந்தத் தெரியாத விலங்கு எது?’ என்பதற்கு பலரும் தவறான பதிலைச் சொன்னார்கள். (ஒட்டகச் சிவிங்கி போன்ற விலங்குகளுக்கு நீந்தத் தெரியாதாம்.) அடுத்து வந்த ரச்சிதா இரண்டு கேள்விகளுக்கு மட்டுமே சரியான பதில்களைச் சொல்ல முடிந்ததால், 80 மதிப்பெண்ணில் பாஸ் ஆன மாணவி மாதிரி கண்கலங்கினார். (இந்த விஷயத்தில்தான் மாணவர்களை உதாரணமாக எடுத்துக்கணும். ஜீரோ மதிப்பெண் வாங்கினால் கூட காலரை உயர்த்திக் கொண்டு கெத்தாகச் சிரித்துக் கொண்டு வெளியே வருவார்கள்!).

‘நான் வருவேன்னு எதிர்பார்க்கலைல்ல…’ – தேய்ந்த வசனம்

சொர்க்கம் – நரகம் டாஸ்க் ஆரம்பித்தது. கதிரவன் இருக்கும் கூண்டின் அருகிலேயே நின்று ஷிவின் கண்காணித்ததால் “ஷிவின் கதிரவனை பக்கத்துலயே நின்னு சைட் அடிச்சிட்டு இருக்காங்க” என்று குறும்பாக கமென்ட் அடித்தார் அசிம். ஒரு சமயத்தில் அசிம் உட்பட எல்லோருமே கூண்டிலிருந்து தப்பித்துக் குறுக்குப் பாதையில் பாய்ந்தார்கள். ஒரே சமயத்தில் மொத்தமாக வந்ததால் சொர்க்கவாசிகள் அவர்களைத் தடுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். ஒரே தள்ளுமுள்ளு, இழுபறி நடந்தது. அடித்துப் பிடித்து உள்ளே நுழைந்த மணிகண்டன், ‘எதிர்பார்க்கலைல்ல…’ என்கிற வழக்கமான கோட் வேர்டை கத்த “யப்பா சாமிகளா… நாங்க நிச்சயம் எதிர்பார்க்கறோம்… இந்த தேய்ந்து போன வசனத்தை நிறுத்துங்க” என்று நாம்தான் கதற வேண்டியிருந்தது.

இந்தத் தள்ளுமுள்ளு காரணமாக ஏடிகே தோள்பட்டையில் அடிபட்டு வலியால் முனகினார். “நீ முதல்லயே கதிரவனைக் கட்டிப் போட்டிருக்கலாம். அப்பத்தான் மத்துவங்களுக்குப் பயம் வந்திருக்கும்” என்று ஷிவினை ஆட்சேபித்தார் ஜனனி. “நாம நரகவாசியா இருக்கும் போது கட்ட வந்தா சமர்த்தா இருந்தோம். இவங்க பாய்ஞ்சு ஓடறாங்களே… ஒட்டு மொத்தமா வந்துட்டாங்க… என்ன பண்றது?!” என்று ஷிவின் விளக்கம் அளித்தார். நரகவாசிகள் ஹோல்சேலில் உள்ளே பாய்ந்தது பற்றிப் புகார் வர “அப்படித்தான் கேம் ஆடியாகணும்… வேற வழியில்ல” என்றார் அசிம்.

பிக் பாஸ் 6 நாள் 67

ஆட்களை மாற்ற வேண்டிய நேரம். சொர்க்க வாசிகளிடையே விவாதம் நடைபெற்றது. ஜனனியும் ஏடிகேவும் வெளியில் செல்ல மறுத்தார்கள். கதிரவனைக் கட்டிப் போடாதது குறித்து ஷிவின் மீது புகார் சொன்னார் ஜனனி. ஆனால் ஜனனி வெளியே போக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. “கேரக்டர் பார்த்துத்தான் ஆரம்பத்துல எங்களை ஏஞ்சலா தேர்ந்தெடுத்தாங்க” என்று ஷிவின் சொன்னது நிச்சயம் தவறான கருத்து. அவர் ஆட்டத்தையொட்டி சொல்லியிருக்கலாம். ஆனால் பொதுவாகவே மற்றவர்களுக்கு அந்த நற்குணங்கள் இல்லை என்பது போன்ற அர்த்தமும் இதில் வருகிறது. இதனால் மனம் புண்பட்ட ஜனனி “நான் வெளியே போறேன். நாமினேஷன்ல வருவேன்னு நம்பிக்கையிருக்கு. எனக்கு அந்த கேரக்டர் இல்லைன்னு கேமரா கிட்ட சொல்லு” என்று அடிபட்ட முகத்துடன் சொன்னார். ஷிவின் சொன்ன அபிப்ராயங்களால் காயமடைந்த ஜனனி, இது பற்றி அமுதவாணனிடம் ரகசியமாகப் புலம்பிக் கொண்டிருந்தார்.

ரச்சிதாவுக்கு எதிராக கூட்டுச்சதி நடைபெறுகிறதா?

மைனாவும் ரச்சிதாவும் சைக்கிள் ஓட்டி முடித்தார்கள். ஆனால் ரச்சிதாவிற்கு தண்டனையும் மைனாவுக்குக் கூண்டு திரும்புதலும் முடிவு செய்யப்பட்டது. மைனாவை விடவும் ரச்சிதா அதிக பிழைகள் செய்தார் என்பது சொர்க்க வாசிகள் சொன்ன காரணம். “எனக்கு சைக்கிள்ல ஏர்றதுக்கு முன்னாடியே இந்த ரிசல்ட் வரும்ன்னு தெரியும்” என்று சர்காஸ்டிக்கான குரலில் சொன்னார் ரச்சிதா. தான் நாமினேஷன் ஃப்ரீ சலுகையைப் பெறுவதில் பலருக்கு விருப்பமில்லை என்பது ரச்சிதாவிற்குத் தெரிந்திருக்கிறது.

“நீங்க ஏன் வெளில வர மாட்டேன்றீங்க… உள்ளேயே உக்காந்து பார்த்தா சைக்கிள் ஓட்றது எப்படித் தெரியும்?” என்று ஷிவினை ஆட்சேபித்தார் அசிம். சொர்க்கவாசிகள் குறுக்குப் பாதையை வழிமறித்து அங்கேயே அமர்ந்திருப்பதால் ஆட்டம் தடைப்படுகிறது என்பது அசிமின் பார்வை. இது தொடர்பாக அசிமிற்கும் ஷிவினிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொண்டை நரம்புகள் புடைக்கக் கத்தினார் ஷிவின். ‘எங்களுக்கும் கருத்துரிமை இருக்கு” என்று விக்ரமனும் இந்தச் சண்டையில் இணைந்தார். ரச்சிதாவின் மீது ஒட்டப்பட்டிருந்த டேப்பைக் கழற்றிய அசிம் “இதைக் கழற்றக்கூடாதுன்னு விதிப் புத்தகத்தில் இல்லை” என்று விதண்டாவாதம் பேசினார். “நீ கழட்டக்கூடாதுடா” என்று சொன்ன மணியின் ஆட்சேபத்தையும் அவர் கேட்கவில்லை.

பிக் பாஸ் 6 நாள் 67

ஷிவின் பற்றி, ஜனனி அடித்த வில்லங்கமான கமென்ட்

நரகவாசிகள் மறுபடியும் ஒட்டுமொத்தமாக முற்றுகையிட்டு உள்ளே செல்ல முயன்றார்கள். மறுபடியும் தள்ளுமுள்ளு. இந்த முறை அமுதவாணன் வெற்றிகரமாக வீட்டிற்குள் சென்றுவிட்டார். “அமுது… உள்ள போ… உள்ள போ” என்று ஜனனி பின்னால் நின்று உற்சாகமாகக் கத்தியது சர்ச்சையாயிற்று.

“நீ உள்ள போகணும்னு நெனச்சா கூட ஓகே… ஆனா அமுதவாணன் போகணும்னு நெனச்சது ஃபேவரிட்டஸம்” என்று ஜனனியின் மீது குற்றச்சாட்டு வைத்தார் ஷிவின். இது அபத்தமான புகார் என்பது ஷிவினிற்கே தெரியும். ஏனெனில் தனது அணியில் ஒருவர் முன்னேறும் போது, இன்னொருவர் உற்சாகப்படுத்துவது இயல்பான விஷயம். இருந்தாலும் இந்த விதண்டாவாதத்தை ஏன் ஷிவின் செய்கிறார்? ‘கதிரவனை ஷிவின் வேண்டுமென்றே தப்பிக்க விட்டார்’ என்று ஜனனி முன்னர் சொன்னதற்கான பதிலடி இது. இந்தக் காரணத்தை ஷிவின் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். ஆக அமுதவாணன் – ஜனனி, கதிரவன் – ஷவின், ஃபேவரிட்டஸம் என்கிற பழிவாங்கும் வரலாறு இதன் பின்னால் ஒளிந்திருக்கிறது.

“யார் அடுத்த கட்டத்திற்கு போகணும்ன்றதை நாங்கதான் முடிவு பண்ணுவோம்” என்று ஷிவின் சொல்ல, ‘தப்பு… தப்பு… தப்பு… அதெல்லாம் நீ சொல்லக்கூடாது’ என்று ‘கில்லி’ பிரகாஷ்ராஜ் போல அசிமுக்குக் கோபம் வந்துவிட்டது. “நீங்க ஒண்ணும் பிக் பாஸ் இல்ல” என்று அசிம் கத்த, “அது என்னோட கேம். அதைப் பத்தி நீங்கப் பேசக்கூடாது” என்று நரம்புகள் புடைக்க ஷிவினும் கத்த சூழல் ரணகளமாக மாறியது. இந்தக் களேபரத்தின் இடையில் “இவ என்ன கதிரை லவ் பண்றாளா?” என்று ஜனனி எகத்தாளமாகக் கேட்டது நிச்சயம் முறையானதல்ல. தனிப்பட்ட கோப தாபங்கள் ஒருவரை எந்த அளவிற்குக் கொண்டு செல்லும் என்பதற்கான உதாரணம் இது. ஜனனியின் பக்கத்திலிருந்த மணி, ‘அப்படியெல்லாம் பேசக்கூடாது’ என்று சொல்லாமல் நமட்டுச்சிரிப்பு சிரித்தார்.

அமுதவாணன் உள்ளே சென்றுவிட்டதால், சொர்க்க வாசிகளில் ஒருவர் வெளியேற வேண்டும். “மணி எல்லோருக்கும் நல்லவரா இருக்கார். தன் இயல்பை வெளிப்படுத்தலை” என்று ஷிவின் மணியை நோக்கிக் கைகாட்ட, “அதுதான் என் கேரக்டர். வந்த சண்டையை நான் விட்டதில்லை” என்று விளக்கம் சொன்னார் மணி. போகானந்தா மோடில் இருந்து இன்னமும் வெளியே வராத ஏடிகே, ஆங்கிலத்தில் பேசி ஷிவினை நோக்கிக் கைகாட்ட, திடீர் ட்விஸ்ட்டாக தனலஷ்மி ஏடிகேவை சுட்டிக் காட்டினார். “ஓகே. நான் போறேன்… மெஜாரிட்டியா என் போ் வந்திருக்கு” என்று பெருந்தன்மையாக வெளியேறினார் ஷிவின். “ஷிவின் பேசறது ரொம்ப அராஜகமாக இருக்கு” என்று மணி, அமுதவாணன், ஏடிகே உள்ளிட்டோர் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பிக் பாஸ் 6 நாள் 67

ஆட்டத்தில் உஷ்ணத்தைக் கூட்டிய பிக் பாஸ்

இந்த டாஸ்க்கில் மேலும் சில சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்தார் பிக் பாஸ். Shortcut 3.0 – அதாவது ‘யார் இடம் மாறலாம்?’ என்பதை அந்த அணி முடிவு செய்யாமல், எதிர் அணி முடிவு செய்யும். இந்த ட்விஸ்ட் மக்களுக்குப் பிடித்திருந்தது. ‘இப்பத்தான் கேம் ஸ்டார்ட் ஆகுது’ என்று உற்சாகமானார் விக்ரமன்.

‘சொர்க்கத்திலிருந்து யாரை வெளியே இழுத்துப் போடலாம்?’ என்று நரகவாசிகள் ஆலோசனை நடத்தினார்கள். ஏடிகேவின் பெயர் பெரும்பான்மையாக வந்தது. அமுதவாணனின் பெயரைச் சொன்னார் அசிம். இதே போல் சொர்க்க வாசிகள் கூடி கதிரவனை உள்ளே எடுத்துக் கொள்வதாகச் சொன்னார்கள். ஆச்சா…

ஆனால் பிக் பாஸ் சும்மா இல்லை. இப்படிச் சுமுகமாக முடிந்தால் எப்படி கன்டென்ட் தேற்றுவது என்று அவர் யோசித்தார். எனவே “காரணங்களைச் சொல்லுங்கள். கலகம் பிறக்கட்டும்” என்று அவர் அறிவித்தது, கச்சிதமாக வேலை செய்தது. ‘ஏடிகே ஏன் தேர்வு செய்யப்பட்டார்?’ என்பதற்கான காரணங்களை அசிமும் விக்ரமனும் சொன்னதில் பயங்கர சொதப்பல் ஏற்பட்டது. “நிறைய விஷயங்களை பர்சனலா எடுத்துக்கறாரு… Emotional stability இல்ல. உடல்பலம் இல்லை” என்கிற காரணங்கள் கூறப்பட்டன. இதை ‘Mental stability’ என்று விக்ரமன் வாய் தவறுதலாக முதலில் சொல்லி விட, ஷிவின் சிரித்துவிட்டார்.

இந்தப் புகார்களால் எரிச்சல் அடைந்த ஏடிகேவிற்கு ஷிவினின் சிரிப்பு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆகிவிட்டது. எனவே “யாரு சிரிச்சாலும் அசிங்கமா கேட்டுருவேன்” என்று உக்கிரமானார். “இங்க எமோஷனல் பிரச்னை எல்லோருக்குமே இருக்கு” என்று ஏடிகே சொல்வது சரிதான். ‘அசிங்கமா கேட்ருவேன்’ என்று ஏடிகே சொன்னது அசிமின் கோபத்தைக் கிளப்பியது. எனவே இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட “சீன் கிரியேட் பண்ணாத… போ… போ…” என்று சைகைகளால் வெறுப்பேற்றினார் ஏடிகே. அவர் எளிதில் உணர்ச்சிப்படுபவர் என்பதை அடுத்த நொடியில் அவரே நிரூபித்ததுதான் இதில் வேடிக்கை.

பிக் பாஸ் 6 நாள் 67

மிகையாக உணர்ச்சிவசப்பட்ட ஏடிகே – மேலும் சீண்டிய அசிம்

ஏடிகேவிடம் உள்ள ஒரு நல்ல வழக்கம் என்னவெனில் உணர்ச்சிவசப்பட்டுக் கத்திவிட்டால், சற்று நிதானத்திற்கு வந்தவுடன் மன்னிப்பு கேட்டு விடுவார். எனவே இந்தச் சமயத்திலும் தான் விட்ட வார்த்தைக்குப் பொதுவில் மன்னிப்பு கோரினார். “அணி எடுத்த முடிவுன்னு சொல்லியிருக்கணும். தனிப்பட்ட பெயர்களை ஏன் சொன்னீங்க?” என்று விக்ரமனை மற்றவர்கள் கடிந்து கொண்டதால் அவரும் மன்னிப்பு கேட்டார்.

இதில் என்ன வேடிக்கை என்றால் ஏடிகேவிற்கு எதிராக மற்றவர்கள்தான் கருத்துச் சொன்னார்கள். ஆனால் சண்டை என்னமோ அசிமிற்கும் ஏடிகேவிற்கும் இடையில்தான் நடைபெற்றது. தன் நண்பன் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறானே என்று அசிமும் பெருந்தன்மையாக விட்டுத்தரத் தயாராக இல்லை. “போடா டேய்… குழந்தை’ என்று சீண்டி சண்டையை மேலும் வளர்த்தார். “எனக்கும் உடல்பலம் இல்லாம இல்ல. நான் ஒண்ணும் மயங்கி விழல” என்று ஏடிகேவும் கிடைத்த இடைவெளியில் அசிமை மறைமுகமாகக் குத்தினார்.

ஒருவழியாக இதன் சூடு அடங்கியது. தன்னிரக்கத்துடனும் சுயபச்சாதாபத்துடனும் விக்ரமனிடம் ஏடிகே அளித்த சுயவாக்குமூலம் இருக்கிறதே?! அந்தக் காட்சிதான் இந்த நாளின் ஹைலைட் எனலாம். “எனக்கு நடிக்கத் தெரியாது. முன்கோபத்துல பேசிடுவேன். உயிரைக் கொடுத்து விளையாடினாலும் கடைசில கெட்ட பேர் வருது. இது உடல் பலத்தை நம்பியாடும் ஆட்டமா? தோள்ல அடிபட்டாலும் கூட விளையாடினேன். இந்த இடத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டு வந்திருக்கேன்” என்றெல்லாம் புலம்பிய ஏடிகேவிற்கு சரியான ஆலோசனையைத் தந்தார் விக்ரமன்.

பிக் பாஸ் 6 நாள் 67

“நாமள்லாம் காட்டுமரம் மாதிரி. சாதாரண இடத்துல இருந்து மேல வந்திருக்கோம். நாமதான் ஸ்ட்ராங்க்” என்று விக்ரமன் ஆறுதல் சொல்ல “நான் ஒரு எமோஷனல் ஃபூல். இந்தக் கோபத்தாலதான் என் பையனை இழந்துட்டேன்” என்று கண்கலங்கிய ஏடிகேவை அரவணைத்து விக்ரமன் ஆறுதல் சொன்ன காட்சி சிறப்பு.

சொர்க்கமும் நரகமும் வேறு எங்கோ மேலே இல்லை. அது நம்மிடம்தான் இருக்கிறது. நாம் நடந்து கொள்ளும் விதத்தில்தான் ஒரு சூழல் சொர்க்கமாகவோ, நரகமாகவோ மாறுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.