“தமிழக முதலமைச்சர் அவர்களே, விவசாயிகள் கண்ணீர் வடிப்பதை வேடிக்கை பார்க்காதீர்கள்” எனக் கூறியுள்ளார் பி.ஆர்.பாண்டியன்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன், ”மயிலாடுதுறை மாவட்டம் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் விளைநிலங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு 100% முற்றிலும் அழிந்துவிட்டது. மறு உற்பத்திக்கு வாய்ப்பில்லை. இது தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு மனசாட்சி இல்லாமல் நடந்து வருகிறது. இது வேதனை அளிக்கிறது. தினந்தோறும் போராட்ட களமாக இங்கு நிலைமை மாறிவிட்டது. மாவட்ட நிர்வாகம் முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது.

image

தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. எந்த அறிவிப்பும் கொடுக்காமல் மௌனம் காத்து வருவது வேதனையை அளிக்கிறது. விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார்கள். இதற்கு பாதிக்கப்பட்ட தாலுகாக்களை மட்டும் பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து 100% இழப்பீடு வழங்கவும் பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு முழு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து போராடி வருகிறோம்; வலியுறுத்தி வருகிறோம். மாவட்ட ஆட்சியரை சந்தித்து பலமுறை பேசியிருக்கிறோம். பல கட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். தமிழக முதலமைச்சர் இதுவரை வாய் திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருவது வேதனை அளிக்கிறது.

தினந்தோறும் சாலைகள் முடக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் முழுவதுமான போக்குவரத்து முடக்கப்படுகிறது. குறிப்பாக இ.சி.ஆர். சாலை முடக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக முதலமைச்சரோ சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களோ பாதிப்பு குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள். மத்திய அரசிடம் பாதிப்பு குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளதா? மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றால் அதற்கு மாநில அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது? பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்க நிதி இல்லை என சொல்லப்படுகிறது. ஆனால் நபார்டு திட்டத்தின் மூலம் வேளாண் வளர்ச்சி வங்கி மூலம் வழங்கப்படும் நிதி முழுவதுமாக சாலை போட்டு கொள்ளை அடிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

image

விளைநிலங்கள் அபகரிக்கப்படுகிறது. விவசாயிகள் வீதியில் நின்று கண்ணீர் வடித்து கதறுகிறார்கள். முதலமைச்சர் வாய் திறக்க மறுப்பதால் தற்போது மூன்று மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம். இந்த சாலை மறியலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கருணை காட்டுங்கள். முதலமைச்சர் அவர்களே விவசாயிகள் கண்ணீர் வடிப்பதை வேடிக்கை பார்க்காதீர்கள். விவசாயிகள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்று சொல்லி, உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளாதீர்கள். விவசாயிகள் வேதனையோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு நீதி வழங்குங்கள்” எனக் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.