எலான் மஸ்க் ட்விட்டரைக் கைப்பற்றியது முதல் அதிரடி அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் ப்ளு டிக் சந்தா முறை பரபரப்பைக் கிளப்பியது. இதைத் தொடர்ந்து தற்போது ‘கோல்டு’, ‘கிரே’ கலர்களில் வெரிஃபை டிக்கை அறிமுகப்படுத்தியுள்ளது ட்விட்டர். இதில் ‘கோல்டு டிக்’ தனியார் நிறுவனங்களுக்கும், ‘கிரே டிக்’ அரசின் அதிகாரபூர்வ கணக்குகளுக்கும், ‘ப்ளு டிக்’ ட்விட்டர் பயனாளர்கள் மற்றும் பிரபலங்களுக்கும் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கோல்டு, ப்ளு, கிரே கலர்களில் வெரிஃபைட் டிக்குகள்

இந்தப் புதிய அப்டேட் வந்தது முதல் பல முன்னணி நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகள் கோல்டு டிக்குகளைப் பெற்று வருகின்றன. ‘கிரே டிக்’ வெரிஃபிகேஷன்கள் அரசின் அதிகாரப் பூர்வ கணக்குகளின் சரிபார்ப்பிற்குப் பின் சற்று தாமதமாக வரும் என்று கூறப்படுகிறது. ப்ளு டிக்கைப் பொறுத்தவரை, ட்விட்டர் பயனர்கள் மற்றும் பிரபலங்கள் எனத் தனிநபர்கள் அனைவரும் தங்களின் போன் நம்பரைக் கொண்டு வெரிஃபை செய்து மாதம் 8 டாலர் கட்டணமாகச் செலுத்தி ப்ளு டிக்கைப் பெற்றுக்கொள்ளலாம். ட்வீட்டை எடிட் செய்துகொள்ளும் வசதி, 1080p வீடியோ பதிவேற்றங்கள், ரீடர் பயன்முறை போன்ற சிறப்பம்சங்கள் ப்ளு டிக் சந்தாதாரர்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்படுகின்றன. இதேபோல கோல்டு மற்றும் கிரே டிக் பயன்பாட்டாளர்களுக்கும் பல்வேறு தனிச்சிறப்பம்சங்களை ட்விட்டர் அறிமுகப்படுத்தவுள்ளது. மேலும் இதற்கான சந்தா கட்டணங்களும் கூடுதலாக இருக்கும் என்று தெரிகிறது.

கோல்டு, கிரே, ப்ளு கலர்களில் வெரிஃபைட் டிக்குகளைக் கொண்டுவருவது ட்விட்டர் கணக்குகளை தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், அரசு கணக்குகள் என எளிதில் அடையாளம் கண்டு வகைப்படுத்துவதற்கான நடைமுறை. இதில் இருக்கும் சூட்சமம் என்னவென்றால் தனியார் நிறுவனங்கள், செய்தி ஊடகங்கள் போன்றவை பெரும்பாலும் தங்களின் விளம்பரங்களுக்காகவும், செய்திகளைப் பகிரவும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டி வருகின்றன. எனவே இவற்றை வகைப்படுத்துவதன் மூலம் ‘கோல்டு டிக்’ வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களையும், செய்திகளையும் பதிவிடுவதற்குச் சிறப்புக் கட்டணமும் கூடுதல் சந்தாவும் வசூலிக்கப்படலாம்.

எலான் மஸ்க்

மேலும், அனைவருக்கும் வெரிஃபட் டிக் வழங்குவதன் மூலம் போலி கணக்குகளை எளிதில் முடக்கிவிடலாம். ஆனால் அதேசமயம் ட்விட்டர் பயனர்கள் அனைவரும் குறைந்தபட்ச மாதச் சந்தா செலுத்தி ட்விட்டரைப் பயன்படுத்தும் கட்டாயம் ஏற்படும். சந்தா செலுத்தாவர்களின் ட்விட்டர் கணக்குகளின் வசதிகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு அவர்களும் சந்தா செலுத்தும் நிலைக்குத் தள்ளப்படலாம்.

எலான் மஸ்கின் இந்த அதிரடி நடவடிக்கைகள் ட்விட்டர் நிறுவனத்திற்கும் பெரும் லாபத்தை ஈட்டித் தரும் என்றாலும் மற்றொருபுறம் ட்விட்டர் தன் பயனர்களை இழந்து சரிவைச் சந்திக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்தப் புதிய வெரிஃபைட் டிக்குகள் பற்றிய உங்கள் கருத்தினை கமென்ட்டில் பதிவிடவும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.