மத்திய பிரதேச மாநிலம் பீதுல் மாவட்டத்தில் உள்ள மந்தாவி என்ற கிராமத்தை சேர்ந்த தன்மே சாஹு என்ற 8 வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திறந்து வைக்கப்பட்டு இருந்த 400 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் 55 அடியில் சிக்கிக்கொண்டான். கடந்த 6-ம் தேதி போர்வெலில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி அன்று இரவு தொடங்கியது. கடந்த மூன்று நாள்களாக இரவு பகல் பாராது மீட்புப்பணிகள் நடந்து வந்தது. போர்வெலை சுற்றி குழி தோண்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது. மாவட்ட நிர்வாகம் மீட்புப்பணிகளை நேரடியாக கண்காணித்து வந்தது. மீட்புப்பணியில் தீயணைப்பு துறையினர் மட்டுமல்லாது, போலீஸார், ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர். போர்வெல் இருந்த பகுதி கடினமான பாறையை கொண்டதாக இருந்தது. குழி தோண்டும் போது அதிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வந்ததால் மீட்புப்பணிகளை விரைந்து மேற்கொள்ள முடியவில்லை.

தண்ணீரை வெளியேற்றிக்கொண்டே குழி தோண்டவேண்டியிருந்தது. அதோடு போர்வெலுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மாவட்ட பொறுப்பு அமைச்சர் இந்தீர் சிங் நேற்று மாலை வந்து மீட்புப்பணிகளை பார்வையிட்டுச் சென்றார். இன்று அதிகாலை மீட்புப்பணி முடிவுக்கு வந்தது. போர்வெல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் துரதிஷ்டவசமாக சிறுவன் இறந்துவிட்டான். 70 மணி நேரம் போராடியும் சிறுவனை உயிரோடு மீட்க முடியாமல் போனது மீட்பு குழுவினரை மட்டுமல்லாது கிராம மக்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. சிறுவன் விழுந்த போர்வெல் சமீபத்தில்தான் தோண்டப்பட்டு இருந்தது. அதனை மூடாமல் வைத்திருந்த அதன் உரிமையாளர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறுவனின் தாயார் ஜோதி சாஹு, “பண்ணையில் விளையாடிக்கொண்டிருந்த என் மகன், அருகே உள்ள வயலுக்குச் செல்லும்போது அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். நாங்கள் உடனே அங்கு சென்றோம். அவன் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான். அவன் குரலை நாங்கள் கேட்டோம். பின்னர் மாலை 6 மணியளவில் மீட்புப்பணி தொடங்கியது. ஆனால் இறுதியில் பிணமாக மீட்டிருக்கிறார்கள். ஒரு அரசியல்வாதி, அல்லது அதிகாரியின் குழந்தை விழுந்திருந்தாலும், இவ்வளவு நேரம் மீட்டிருப்பார்களா?” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்

மேலும், மீட்புக் குழுவினர்,” எங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் முயன்றோம். ஆனாலும், சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை. சிறுவனின் உடல் பெதுல் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.