விமானம் மற்றும் ரயிலில் பயணிப்பவர்கள் அங்கு வழங்கப்படும் உணவு மற்றும் சேவைகளைப்பற்றி குறைசொல்லாமல் இருப்பதில்லை. அவற்றில் பல அதிர்ச்சிகரமானதாகவும், மோசமானதாகவும் இருப்பதுண்டு. சமீபத்தில் அது போன்றதொரு மோசமான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் பிரபல ஏர்-லைனில் பயணித்த ஒரு பெண் பயணி. அவரது உணவில் கிடந்த ‘பல்’லின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

காடா என்ற பெண் BA107 – பிரிட்டிஷ் விமானத்தில் லண்டனிலிருந்து துபாய் வரை அக்டோபர் 25ஆம் தேதி பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட உணவில் பல் ஒன்று இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், “பிரிட்டிஸ் ஏர்வேஸ், எங்கள் உணவில் கண்டுபிடித்த இந்த பல் குறித்து உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறோம். (எங்களுடைய அனைத்து பற்களும் இருக்கிறது: இது எங்களுடையது அல்ல). இது மிகவும் பயத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் கால் சென்டரிலுள்ள யாரையும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

காடாவின் இந்த பதிவுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் இதுகுறித்து தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர். சிலர் இதை ப்ராங்க் செய்திருப்பதாக நினைக்கின்றனர்.

“நான் இன்னும் ஆழமாக இதனை பார்க்கமுடியுமா? நான் ஒரு பல் நிபுணர். நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், ”இது ஒரு விளையாட்டு என நான் நினைக்கிறேன். பொதுவாக கற்கள், கரப்பான்பூச்சி, பூச்சிகள், சிறு உயிரினங்கள், தலைமுடி போன்றவை உணவில் காணப்படுவதுண்டு. ஆனால் எப்படி உணவில் பல் வந்தது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.


”இதுகுறித்து விமான குழுவினரிடம் தெரிவித்தீர்களா? அவர்கள் பல்லை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றிருப்பார்கள். இதனை நீங்கள் செய்திருக்காவிட்டால், நிர்வாகத்தால் எதுவும் செய்யமுடியாது” என்று மற்றொரு பயணி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக ஏர்லைன் காடாவின் பதிவிற்கு பதிலளித்திருக்கிறது. ”ஹாய் இருக்கிறீர்களா? இதைப் பார்த்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம்! எங்கள் வாடிக்கையாளர் சேவைக்குழு உங்களை தொடர்புக்கொள்ள கேபின் குழுவினரிடம் உங்களுடைய விவரங்களை கொடுத்தீர்களா? பாதுகாப்பு கருதி, உங்களுடைய விவரங்கள தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது. அதன்பிறகு இந்த பிரச்னையை சரிசெய்ய ஏர்லைன் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்தது என்ற விவரங்கள் ஏதும் இல்லை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.