மாண்டஸ் புயல், புதுவை – ஸ்ரீஹரிகோட்டா இடையே நேற்று இரவு கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்பு தெரிவித்திருந்த நிலையில், மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலையில் கரையை கடந்திருக்கிறது. இந்த புயல் காரணமாக நேற்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் காற்றுடன் கூடிய மழைப்பொழிவு இருந்தது.

இந்த நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் நேரு, மேயர் பிரியா ஆகியோர் வட சென்னையின் காசிமேடு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், “தென்காசி, மதுரை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்றுதான் திரும்பினேன். உடனே கட்டுப்பாட்டு அறைக்கு சென்று புயல், மழை தொடர்பான விவரங்களை கேட்டறிந்தேன். மேலும், உடனே பாதிக்கப்படும் பகுதியாக குறிப்பிட்ட பகுதிகளின் கலெக்டர்களிடம் காணொளி வாயிலாக, என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை விசாரித்தேன். குறிப்பாக மாமல்லபுரம் பகுதி கலெக்டரிடம் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை அழைத்து பேசினேன்.

தென் சென்னை பகுதிக்கு சென்று மீனவர்களை சந்தித்து நிவாரணப் பொருள்களை வழங்கிவிட்டு, வட சென்னை காசிமேடு பகுதிக்கு வந்திருக்கிறேன். தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. மரம் விழுந்ததைக் கூட இரவு முழுவதும் அரசு பணியாளர்கள் அகற்றியிருக்கிறார்கள். அதனால், போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இரவு பகல் பாராமல், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள், காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் என பல்வேறு துறை சார்ந்தவர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். இதற்காக நன்றி தெரிவித்திருக்கிறேன். விரைவில், சேதங்கள் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும். தேவையேற்பட்டால், மத்திய அரசிடம் நிவாரணம் கோரப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.