நம் வாசகர் ஒருவர் uravugal@vikatan.com வழியே, “எனக்கு TPHA பரிசோதனை செய்யும்போதெல்லாம்  தொடர்ந்து பாசிட்டிவ்வாகவே வந்து கொண்டிருக்கிறது. இதனால், பின்னாளில் எனக்கு எய்ட்ஸ் வருமா?” என்று கேட்டிருந்தார். அவருடைய கேள்விக்கு பதில் அளிக்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி. 

“TPHA என்பது ஒருவகை ரத்தப் பரிசோதனை. அதன் விரிவாக்கம். Treponema pallidum haemagglutination test (TPHA). சிஃபிலிஸ் (SYPHILIS) என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒருவகையான பால்வினை நோய்.  இந்த நோய் உடலில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காகச் செய்யப்படும் ரத்தப் பரிசோதனைதான் TPHA.  சிஃபிலிஸ் பால்வினை நோய், பாலுறவின் மூலமே ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். 

மூத்த பாலியல் நிபுணர் நாராயண ரெட்டி

இந்த ரத்தப் பரிசோதனையில் ஒருமுறை பாசிட்டிவ் என்று வந்துவிட்டால், கடைசி வரை பாசிட்டிவ்வாகத்தான் இருக்கும். மருந்து, மாத்திரை எடுப்பதால் இது நெகட்டிவ் ஆகாது. ஏனென்றால்,  சிஃபிலிஸ் என்கிற பால்வினை நோயை உருவாக்கும் கிருமியை எதிர்த்துப் போரிடுவதற்காக உடம்பில் தயாராகும் ஆன்டிபாடிதான் TPHA. இதைத்தான் அதற்கான ரத்தப் பரிசோதனையின் பெயராகவும் வைத்திருக்கிறார்கள். ஒருமுறை இந்த ஆன்டிபாடி உடலில் உருவாகிவிட்டால்,  சுலபத்தில் போகாது. 

TPHA ஆன்டிபாடி உங்கள் உடலில் இருப்பதால், சிஃபிலிஸ் பால்வினை நோய் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து, நீங்கள் எந்த ஸ்டேஜில் இருக்கிறீகள் என்பதை கண்டறிந்து, அதற்கேற்றபடி சிகிச்சை எடுக்க ஆரம்பியுங்கள். முதல் ஸ்டேஜில்தான் இருக்கிறீர்கள் என்றால், இதை முழுமையாக சரி செய்துவிடலாம்.  இரண்டாவது ஸ்டேஜில் இருக்கிறீர்கள் என்றால், நீண்டகால சிகிச்சையின் மூலம் சரி செய்துவிடலாம். சிலர் முழுமையாக சிகிச்சை எடுக்காமல் இருந்துவிட்டால், உடம்புக்குள் பிரச்னை இருந்து கொண்டே இருக்கும்.  ஆனால், அதை உடம்பு வெளிப்படுத்துவதற்கு பல வருடங்கள் எடுத்துக் கொள்ளும். சிஃபிலிஸ் பால்வினை நோய் வந்து 15 வருடங்களான நிலைதான் மூன்றாவது ஸ்டேஜ். இந்த ஸ்டேஜில்தான் பயப்பட வேண்டும். ஏனென்றால், இந்தக் காலகட்டத்தில்தான் மூளை, இதயம் போன்ற முக்கியமான உறுப்புகளில் பிரச்னை வர ஆரம்பிக்கும். இதற்கும் மருந்து, மாத்திரைகள் இருக்கின்றன.  

Sex education

தொடர்ந்து TPHA பாசிட்டிவ் என்று வந்துகொண்டே இருந்தாலும், நீங்கள் பயப்படுவதுபோல ஹெச்.ஐ.வி வராது.  சிஃபிலிஸ் ஏற்படுத்துகிற கிருமி வேறு; ஹெச்.ஐ.வி ஏற்படுத்துகிற வைரஸ் வேறு. ஆனால், இரண்டுமே பாலுறவின் மூலமே ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. அரிதிலும் அரிதாக, ரத்தம் ஏற்றுவதன் மூலம் வரலாம்.  உங்களுக்கு பயமாக இருந்தால், ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்து பாருங்கள்.

நான் ஒழுக்கம் குறித்து பாடம் எடுக்க விரும்பவில்லை; அதற்கு எனக்கு உரிமையும் இல்லை. ஆனால், ஒரு மருத்துவராகச் சொல்கிறேன், பால்வினை நோய்கள் வரும் வழிகளைத் தவிர்த்திருந்தால் நீங்கள் நிம்மதியாக இருந்திருக்கலாம்” என்றார் டாக்டர் நாராயண ரெட்டி. 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.