கத்தார் உலகக்கோப்பையின் நாக் அவுட் சுற்று தொடங்கிவிட்டது. முதல் நாளிலேயே அர்ஜெண்டினா அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதியிருந்தன. இந்தப் போட்டியில் 2-1 என வென்று அர்ஜெண்டினா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. அர்ஜெண்டினாவின் வெற்றியில் அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர வீரரான மெஸ்ஸியின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது.

Messi

முதல் பாதியிலேயே அர்ஜெண்டினா முன்னிலையை பெற்றது. அந்த முன்னிலையை பெற்றுக் கொடுத்ததே மெஸ்ஸிதான். 35 வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் தற்காப்பு வளையத்தை உடைத்தெறிந்து ஆஸ்திரேலிய கீப்பர் ரியானை லாவகமாக ஏமாற்றி எளிதாக கோல் அடித்திருந்தார் மெஸ்ஸி. இந்த ஒரு கோல் மட்டுமில்லை, கோல் இல்லையென்றாலும் இரண்டாம் பாதியிலும் மெஸ்ஸியின் ஆட்டம் இன்னும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருந்தது. லாங் ட்ரிபிள்களை செய்து ஆஸ்திரேலிய டிஃபண்டர்களை திணறடித்து கோலை நோக்கி அட்டாக் செய்து கொண்டே இருந்தார். அற்புதமான அசிஸ்ட்களையும் செய்திருந்தார். அதில் சில கோலாக மாறியிருக்க வேண்டும். மார்ட்டினஷே இரண்டு முறை மெஸ்ஸியிடமிருந்து அசிஸ்ட்டை வாங்கி சரியாக ஃபினிஷ் செய்ய முடியாமல் கோட்டைவிட்டார். அதெல்லாம் சரியாக நிகழ்ந்திருந்தால் இது முழுக்க முழுக்க மெஸ்ஸியின் ஆட்டமாகவே மாறியிருக்கும். இப்போதும் ஒன்றும் குறையில்லை. இந்த ஆட்டத்திலும் மெஸ்ஸி பல சாதனைகளை உடைத்திருக்கிறார். சில தரமான சம்பவங்களை நிகழ்த்தியிருக்கிறார். அவை இங்கே..

*ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மெஸ்ஸி ஆடிய போட்டிதான் அவரது 1000 வது போட்டி. க்ளப் மற்றும் சர்வதேசம் என இரண்டிலுமே ஒரு வீரர் இத்தனை நீண்ட கரியரைக் கொண்டிருப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால், மெஸ்ஸி இந்த 1000 வது போட்டி என்கிற நம்பர் விளையாட்டுக்குள் எல்லாம் சிக்க விரும்பவில்லை. ‘இதுதான் 1000 வது போட்டி என்பதே இன்றுதான் எனக்கு தெரியும். இந்தத் தருணத்தில் அனுபவித்து வாழ முற்படுகிறேன் அவ்வளவே. அர்ஜெண்டினா அடுத்தச்சுற்றுக்கு சென்றதுதான் பெரும் மகிழ்ச்சி’ என நேற்றைய போட்டிக்குப் பிறகு மெஸ்ஸி பேசியிருந்தார்.

Messi

*ஆயிரமாவது போட்டியில் ஆடிய மெஸ்ஸி நேற்றைய போட்டியையும் சேர்த்து மொத்தம் 789 கோல்களை அடித்திருக்கிறார்.

இதில், 672 கோல்கள் பார்சிலோனா அணிக்காக அடிக்கப்பட்டது. அர்ஜெண்டினா அணிக்காக 94 கோல்களை அடித்திருக்கிறார்.

*அர்ஜெண்டினாவின் கால்பந்து கடவுளான மரடோனா உலகக்கோப்பை ஆட்டங்களில் 8 கோல்களை அடித்திருக்கிறார். மெஸ்ஸி இந்த சாதனையையும் நேற்று முறியடித்தார். ஆஸ்திரேலியாவிற்கு நேற்று மெஸ்ஸி அடித்த கோல், உலகக்கோப்பைகளில் அவர் அடித்த 9 வது கோலாகும். அர்ஜெண்டினா சார்பில் கேப்ரியல் பட்டிஸ்டூதா உலகக்கோப்பைகளில் 10 கோல்களை அடித்திருக்கிறார். அந்த சாதனையை மெஸ்ஸி முறியடிப்பதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது.

*ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மெஸ்ஸி நேற்று அடித்த கோல்தான், உலகக்கோப்பையின் நாக் அவுட்களில் அவர் அடித்த முதல் கோல். 2006 லிருந்து தொடர்ச்சியாக உலகக்கோப்பையில் ஆடி வருகிறார். இதற்கு முன் ஆடிய 4 உலகக்கோப்பைகளிலும் மெஸ்சி நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்ததே இல்லை.

Messi

*நேற்று நடந்த போட்டிக்கு முன்பாக, ஆஸ்திரேலிய டிஃபண்டர் டெஜனிக் ‘மெஸ்ஸியுடன் ஆடுவதெல்லாம் பெருமையில்லை. அவரும் ஒரு சாதாரண மனிதர்தான்.’ என பேசியிருந்தார். இந்தப் போட்டியில் மெஸ்ஸி தனது செயல்பாடுகள் மூலம் ஆஸ்திரேலிய வீரரின் இந்த ஸ்டேட்மெண்ட்டுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

35 வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த அந்த கோல் 5 டிஃபண்டர்களின் தற்காப்பு வளையத்தைக் கடந்து அட்டகாசமாக அடிக்கப்பட்டது.

இரண்டாம் பாதியில் மெஸ்ஸி மிட் ஃபீல்டிலிருந்து பந்தை ட்ரிபிள் செய்து வந்தபோதெல்லாம் ஆஸ்திரேலிய வீரர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. மெஸ்ஸி உருவாக்கிய கோல் சான்ஸூகளுமே பல டிஃபண்டர்கள் சூழ்ந்திருக்க அவர்களின் வியூகங்களையெல்லாம் முறியடித்தே உருவாக்கப்பட்டது. மெஸ்ஸி ஏன் சாதாரண வீரர் இல்லை என்பது நேற்று ஆஸ்திரேலிய அணிக்குப் புரிந்திருக்கும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.