கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி செல்லும் சாலையில், கன்னியாகுமரி டு காஷ்மீர் சாலையில் இருக்கிறது, மலைக்கோவிலூர். இந்தப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக, மனநலம் பாதித்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் முதியவர் ஒருவர் சுற்றி திரிந்து கொண்டு இருந்தார். தன்னிலை உணராமல், உடம்பில் உடையின்றி எதையோ சதா பிதற்றியபடி அங்கும் இங்கும் அலைந்தபடி இருந்தார். இதனையறிந்த, அந்தப் பகுதியைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் சிலர், அவருக்கு உண்ண உணவு கொடுத்ததால், அப்பகுதியில் உள்ள சென்ட்டர் மீடியன் பகுதியில் அரளி செடியின் மத்தியில் அந்த முதியவர் வசிக்கத் தொடங்கினார். இந்நிலையில், கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சிலர் நாகம்பள்ளி பிரிவு சாலை ஓரத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்க குடிசை அமைத்து, அவருக்கு இருப்பிடம் செய்து கொடுத்தனர்.

முதியவரை மீட்ட அதிகாரிகள்

மேலும், இதனைப் பயன்படுத்தி, உடல் முழுவதும் விபூதியை பூசி, அவரை, ‘அரளி சித்தர்’, ‘பிஸ்கட் சித்தர்’, ‘இளநீர் சித்தர்’ என்று பல பெயர்களை வைத்து அழைத்தனர். அதோடு, சிலர் உண்டியல் வைத்து பணம் வசூலித்தும், கூகுள் பே மூலம் பக்தர்களிடம் பணம் பரிமாற்றம் செய்தும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்தது. அந்த முதியவரை பார்க்க, தமிழகத்தில் பல இடங்களிலிருந்து பக்தர்கள் படையெடுக்க ஆரம்பித்தனர்.

அதோடு, அந்த இடத்தில் இளநீர் கடை, பிஸ்கட் கடை, பூஜை பொருள்கள் சம்பந்தப்பட்ட கடைகள் என்று ‘திடீர் கடைகளும்’ முளைக்கத் தொடங்கின. ஆனால், ஏற்கெனவே மனநலம் பாதித்த அந்த முதியவரை சித்தர் என்று சொல்லி, அவரை இந்த நிலைக்கு கொண்டுவந்தவர்கள் கொடுமைபடுத்துவதாகவும், அவரை மீட்டு அவருக்கு தேவையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோர்களுக்கு தொடர்ந்து புகார் கொடுத்து வந்தனர். மேலும், அவர் உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், அவரை மீட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் தொடர் புகார் அளித்தனர்.

முதியவரை மீட்ட அதிகாரிகள்

இந்த நிலையில்தான், கரூர் மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் கவிதா, வட்டாட்சியர் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் சந்தோஷ் குமார் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். நிர்வாணமாக இருந்த அவருக்கு வேட்டி ஒன்றைக் கட்டியதோடு, உடல்நலம் பாதித்த நிலையில் இருந்த ‘அரளி சித்தர்’ என்று அழைக்கப்படும் முதியவரான சுப்பிரமணியை மீட்டு, மருத்துவ சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தி, பொதுமக்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.