“வலது புறம் கால் ஊன்றியவள் நான் நிற்பதை பார்த்து இடது புறம் சாய்ந்து; என் உயிரை காப்பாற்றி விட்டு, என்னை அனாதையாக்கி விட்டு சென்று விட்டாள் என் லெட்சுமி” என கண்ணீருடன் தெரிவிக்கின்றார் உயிரிழந்த லெட்சுமி யானையின் பாகன். உயிரிழந்த லட்சுமி யானை குறித்து உருக்கமான கோரிக்கையையும் அவர் வைத்துள்ளார்.

புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. 32 வயதான லட்சுமி யானையின் உயிரிழப்பு புதுச்சேரி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்திய நிலையில், லட்சுமி யானையின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மணக்குள விநாயகர் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு பின்னர் வனத்துறை அருகே இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு புதைக்கப்பட்டது. இறுதி அஞ்சலியின்போது பொதுமக்கள் திரளாக கூடியிருந்து லட்சுமி யானைக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர்.

image

பாகனும் அங்குஸ்தனும் இல்லாத யானை காட்டு விலங்குதான், ஆனால் வீட்டு பிள்ளையாக 26 ஆண்டு காலம் வளர்த்து வந்த யானை லெட்சுமி, தன்னை விட்டு பிரிந்த சோகத்தில் அதன் பாகன் சக்திவேல் ஆழ்ந்துள்ளார். யானை லெட்சுமி அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று பால் ஊற்றி சடங்குகள் செய்து விட்டு வந்த பாகன் சக்திவேல் யானை பாதுகாக்கும் கொட்டைகைக்குள்ளே யானை இல்லாத காட்சியை கண்டுக்கொண்டே சோகத்துடனும், கண்ணீருடனும் காட்சி தருவது பரிதாபமாக இருக்கின்றது.

image

தனது பிள்ளை போல வளர்த்து வந்த லெட்சுமி யானை தன்னை விட்டு பிரிந்து சென்றது குறித்து அதன் பாகன் சக்திவேல் புதியதலைமுறைக்கு அளித்த பிரத்தியேகபேட்டியில், ”என்னை விட்டு சென்று விட்டாள் லெட்சுமி” என்று நா தழுக்க பேச்சை துவங்கிய அவர், ”கடந்த 26 ஆண்டுகளில் அவளிடம் பார்க்காத கோபத்தை அன்று தான் பார்த்தேன். முதல் நாள் சரியாக சாப்பிடவில்லை மருத்துவரிடம் காண்பித்தேன், நடைபயிற்சி செய்தால் சாப்பிடும் என்றார் மருத்துவர். அதன்படி நேற்று காலை லெட்சுமியை நடத்தி அழைத்து சென்றேன். மீண்டும் கொட்டகைக்கு கொண்டு வர முயற்சித்தபோது கோயிலுக்கு செல்லும் பாதையில் நடந்தபோது திடீரென கோபமடைந்தது. அந்த கோபத்தை என்னிடம் காட்டாமல் அருகில் இருந்த காரின் மீது மோதி வலது காலை ஊன்றியவல் நான் நிற்பதை அறிந்து இடது பக்கம் விழுந்து என் உயிரை காப்பாற்றி அவள் உயிரை விட்டுவிட்டாள்” என கதறி அழுதார்.

image

எனக்கு ஒரே ஒரு கோரிக்கை தான் இருக்கிறது, பெண் யானைக்கு தந்தம் இருப்பது மிக மிக அரிது. ஆனால் லெட்சுமிக்கு ஒரு அடிக்கு மேல் தந்தம் இருந்தது. அந்த தந்தத்தை பிரேத பரிசோதனையின்போது அறுத்து எடுத்துள்ளதாக அறிகின்றேன். அதை பதப்படுத்தி மணக்குள விநாயகர் சன்னதியிலேயே வைக்க வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்த அவர், இனி லெட்சுமி இல்லாமல் நான் எப்படி வாழப்போகின்றேன் என்று தெரியவில்லை என அழுது புலம்பியது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.