கர்நாடகாவில் வகுப்பின்போது இஸ்லாமிய மாணவரை தீவிரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள மணிப்பால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (எம்.ஐ.டி), நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அந்நிறுவனத்தின் பேராசிரியர் ஒருவர் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, மாணவர் ஒருவரைப் பார்த்து அவரதுப் பெயரைக் கேட்டதாகத் தெரிகிறது. உடனடியாக அந்த மாணவர் தனதுப் பெயரை சொன்னதும், “நீங்கள் கசாப் போல இருக்கிறீர்கள்!..” என்று பேராசிரியர் சொன்னதாகக் கூறப்படுகிறது. (26/11 மும்பை தாக்குதலுக்குப் பிறகு உயிருடன் பிடிபட்ட ஒரே பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப் கடந்த 2012-ல் தூக்கிலிடப்பட்டார்).

இதனைத் தொடர்ந்து அந்த மாணவர், ஒரு பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு தனது மதத்தை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டி விவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் மாணவரை, பேராசிரியர் சமாதானப்படுத்த முயன்றதுடன், மாணவனைத் தன் மகன் போன்றவரென்றும், இதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த மாணவர், “26/11 தாக்குதல் ஒன்றும் வேடிக்கையான விஷயம் இல்லை. இந்த நாட்டில் இஸ்லாமியராக இருந்து இதையெல்லாம் தினமும் எதிர்கொள்வது வேடிக்கையானதாக இல்லை சார். என் மதத்தைப் பற்றி நீங்கள் கேலி செய்ய முடியாது, அதுவும் கேலிக்குரியது. இது வேடிக்கையாக இல்லை சார், இது இல்லை” என அந்த மாணவர் தொடர்ந்து கூச்சலிட்டார்.


“நீயும் என் மகனைப் போலவே இருக்கிறாய்…” என்று அந்த மாணவரை தொடர்ந்து பேராசிரியர் சமாதானப்படுத்த முயன்றார். இதையடுத்து அந்த மாணவர், “உங்கள் மகனிடம் இப்படித்தான் நீங்கள் பேசுவீர்களா?, பயங்கரவாதி என்ற பெயரைச் சொல்லி அழைப்பீர்களா?” என்று மாணவர் கொந்தளிப்புடன் கேள்விகளை பேராசிரியரிடம் எழுப்பினார்.

அதற்குப் பேராசிரியர் “இல்லை” என்று கூறியதும், மாணவர், “அப்படியானால் எப்படி இவ்வளவு பேர் முன்னிலையில் என்னை அப்படி நீங்கள் அழைக்க முடியும்?, நீங்கள் ஒரு தொழில் செய்கிறீர்கள், நீங்கள் கற்பிக்கும் தொழிலை செய்கிறீர்கள். மன்னிப்பு என்ற ஒன்று, நீங்கள் இங்கே எப்படி நினைக்கிறீர்கள் அல்லது எப்படி சித்தரிக்கிறீர்கள் என்பதை மாற்றாது” என்று பேசுகிறார்.

இதனையடுத்து அந்தப் பேராசிரியர் மெதுவாக மன்னிப்பு கேட்கிறார். பேராசிரியருக்கும், மாணவருக்கும் நடந்த இந்த உரையாடலை மற்ற மாணவர்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, அந்த பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டு, விசாரணை நடத்த கல்வி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், “இந்த சம்பவம் குறித்து நிறுவனம் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளது, மேலும் சம்பந்தப்பட்ட பேராசிரியர் விசாரணை முடியும் வரை வகுப்புகள் எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வகையான நடத்தையை நிறுவனம் மன்னிக்கவில்லை என்பதை அனைவரும் அறிய விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில், வளாகத்தில் பரந்த பன்முகத்தன்மையைக் கொண்டிருப்பதில் பெருமைப்படுவதாகவும், அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்தும் அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்த உறுதிப்பூண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


அத்துடன் இதுகுறித்து பேசிய மணிப்பால் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு இயக்குநர் எஸ்.பி.கர், “சர்வ தர்மம் (அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை) மற்றும் வசுதைவ குடும்பம் (ஒரே உலகம், ஒன்று) ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒரு நிறுவனம் என்பதால் இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் கண்டிக்கிறோம். இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேவையானதை செய்து வருகிறோம். மாணவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு, கல்லூரியில் இருந்து பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் சாதாரண அமர்வுகளில் ஒன்றின் போது நடந்ததால் எங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. மேலும் இந்தப் பிரச்சினை முதலில் எங்கிருந்து துவங்கியது என்று கண்டுபிடிப்பது என்பது சவாலானது. எனவே, நாங்களாகவே முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். உண்மையில் யாரும் இல்லாததால் மாணவர் மிகவும் கவலையாக இருக்கிறார். இந்த வீடியோவை யார் பதிவு செய்தார்கள் என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது.

நிறுவனம் திறம்பட இயங்க வேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்தோம். விசாரணை நடந்து கொண்டிருப்பதால் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மட்டுமே குறிப்பிட்ட பதில்களை வழங்க முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.