கர்நாடகாவிலுள்ள மணிப்பால் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (எம்.ஐ.டி), வகுப்பில் முஸ்லிம் மாணவனை பேராசிரியரொருவர் `தீவிரவாதி’ என்று கூறிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு, பேசுபொருளாகியிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், முதலில் பேராசிரியர் முஸ்லிம் மாணவனை `தீவிரவாதி’ என்றழைத்ததாகச் சொல்லப்படுகிறது. பின்னர் இந்த விவகாரத்தின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவனிடம் அந்தப் பேராசிரியர், மாணவனை தன் மகன் போன்றவரென்றும், இதனை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

மணிப்பால் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் – கர்நாடகா

அதைத் தொடர்ந்து பேராசிரியரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய மாணவன், “26/11 வேடிக்கையானது அல்ல. இந்த நாட்டில் முஸ்லிமாக இருந்து ஒவ்வொரு நாளும் இதை எதிர்கொள்வது வேடிக்கையானது அல்ல. உங்கள் மகனிடம் இப்படிப் பேசுவீர்களா… அவரை தீவிரவாதி என்ற பெயரால் நீங்கள் அழைப்பீர்களா? இதுவொரு வகுப்பறை, ஒரு பேராசிரியராக நீங்கள் கற்பிக்கிறீர்கள். நீங்கள் என்னை அப்படி அழைக்க முடியாது” எனப் பேசுகிறார்.

இந்த வீடியோ வைரலாக, இணையவாசிகள் பலரும் பேராசிரியருக்கெதிராக கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அதையடுத்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த கல்வி நிறுவனம், சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறது.

மணிப்பால் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் அறிக்கை

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய மணிப்பால் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு இயக்குநர் எஸ்.பி.கர், “இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் கண்டிக்கிறோம். இந்தப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேவையானதைச் செய்து வருகிறோம். அதோடு மாணவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதுடன், பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம், சாதாரண வகுப்பு ஒன்றின்போது நடந்ததால் எங்களுக்குத் தெரியாது. எனவே, தாமாக முன்வந்து நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.