‘டெக்னிக்கல் டெக்ஸ்டைல்’ என்ற மாபெரும் ஜவுளித் துறை கருத்தரங்கத்தை சி.ஐ.ஐ, தமிழக ஜவுளித் துறை இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. நவம்பர் 25, 26 இரண்டு நாட்கள் நடக்கு இந்தக் கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் கலந்துகொண்டார்.

கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதற்கான முயற்சியாக ஜவுளித் துறையை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். சென்னையில் ஜவுளி நகரம் அமைக்கும் வகையில் சிறு, சிறு ஜவுளிப் பூங்காங்கள் அமைக்க உள்ளதாகவும் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின்

அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது… ”தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் சர்வதேச அளவிலான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. அதில் தொழில் துறை முன்னணியில் இருக்கிறது. தொழில் துறையில் சர்வதேச தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை உறுதி செய்துவருகிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் நிறுவனங்களைத் தொடங்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் துணி நூல் துறையின் சார்பில் முதன்முறையாக ஜவுளித் தொழில் தொடர்பான சர்வதேசக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தரங்கின் இலக்கு தமிழகம் இந்திய மாநிலங்களோடு மட்டும் போட்டி போடாமல் சர்வதேச நாடுகளுக்கு இணையாக போட்டியிடும் அளவுக்கு முன்னேற்றம் அடைவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மையமாக வைத்து கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஜவுளித் துறையைப் பொறுத்தவரை, நமது மாநிலம் அன்னிய முதலீட்டினை ஈர்ப்பதிலும், ஏற்றுமதியிலும் மூன்றாவது பெரிய இடத்தினை வகிக்கிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகப்படியான நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் விதமாக ஜவுளித் தொழில் இருக்கிறது.

இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதி வருவாயில் தமிழ்நாடு 12% பங்களிப்பை வழங்குகிறது. தமிழ்நாட்டில் 1,861 நூற்பாலைகள் உள்ளன. இது இந்திய நாட்டின் பங்கில் 55% ஆகும். மேலும், இந்தியாவிலுள்ள விசைத்தறிகளில் 23% விசைத்தறிகள் தமிழ்நாட்டில் உள்ளன.

Textile Industry

தமிழ்நாட்டில் சுமார் 31 லட்சம் தொழிலாளர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பினை வழங்கிவருகிறது. எனவேதான், நாம் இத்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இத்துறையின் திறனை மேலும் மேம்படுத்தி பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன.

முதல் கட்டமாகவே ஜவுளித் துறை என தனித்துறை உருவாக்கப்பட்டது. தற்போது ரூ.2.50 கோடி அரசு மானியத்துடன் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டம், குமாரலிங்கபுரம் கிராமத்தில் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் மாபெரும் ஜவுளிப்பூங்கா அமைத்திட சிப்காட் நிறுவனம் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் பிரத்யேகமான ஜவுளி நகரம் (Textile City) அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜவுளித் துறையின் கீழ் இயங்கும் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா ரூ. 2500/- வீதம் ஊதிய உயர்வு வழங்கிடுவதற்கான அரசாணை வெளியிடப்பட உள்ளது.

textile

மாமல்லபுரத்தில் கைத்தறி அருங்காட்சியகம் (Handloom Museum) ரூ.30 கோடி செலவில் அமைத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணை உட்கட்டமைப்புடன் கூடிய வடிவமைப்பு நிலையம் (Design and Incubation Centre)ரூ.10 கோடி செலவில் நிறுவிடவும் இவ்வரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மூன்று கூட்டுறவு நூற்பாலைகளில் 11 கிலோ வாட் உயர் மின்னழுத்த மின் பாதைகள் நிறுவிடவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜவுளித் துறை சார்ந்த முன்னெடுப்புகளை ஆக்கபூர்வமாகச் செயல்படுத்த புதிய புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கையினை உருவாக்கிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய இயந்திரங்களை கொள்முதல் செய்து நவீனப்படுத்திட ரூ.29.34 கோடி செலவில் செயல்திட்டம் வகுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” இவ்வாறு அவர் பேசினார்.

இந்த டெக்னிக்கல் டெக்ஸ்டைல் கருத்தரங்கில் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தக் கருத்தரங்கில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, மத்திய அரசின் ஜவுளித்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சக்சேனா, கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையர் வள்ளலார் ஐஏஎஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.