சென்னை வடபழனி, ஒட்டகபாளையம், ஜவகர்லால் நேரு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி வேலுமணி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தன்னிடம் வடபழனி போலீஸார் 50,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பரபரப்பான புகாரைக் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “நான் புத்தூர் கட்டு போர்ன் அன்ட் ஜாயின்ட் சென்டர் பிரைவேட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். எங்கள் நிறுவனத்தின் மீது கடந்த ஜூலை 2022-ம் தேதி கார்த்திக் என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதுதொடர்பாக அப்போதைய இன்ஸ்பெக்டர் என்னிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் பணி மாறுதலில் சென்றுவிட்டார்.

புத்தூர் கட்டு வைத்தியர் கொடுத்த புகார் மனு

இதையடுத்து வடபழனி காவல் நிலையத்துக்கு இன்ஸ்பெக்டராக வந்த ஆனந்தபாபு என்பவர் கடந்த 12.7.2022-ம் தேதி என்னை விசாரித்தார். அதுதொடர்பாக கடந்த 14.7.2022-ம் தேதி சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனரிடம் புகாரளித்தேன். அதனால் என் புகாரை வடபழனி உதவி கமிஷனர் விசாரித்தார். இந்தச் சூழலில் கடந்த 2.8.2022-ம் தேதி போலீஸார் என் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்தேன். அதை தெரிந்து கொண்ட சம்பந்தப்பட்ட போலீஸார், என்னை பல வகையில் மிரட்டி வந்தனர். இந்தச் சமயத்தில்தான் கடந்த 12.10.2022-ம் தேதி இன்ஸ்பெக்டரின் டிரைவர் எனக்கூறி கொண்டு காவலர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்தார்.

பின்னர் அவர், தன்னுடைய போனை என்னிடம் கொடுத்து இன்ஸ்பெக்டர் பேசுவதாகத் தெரிவித்தார். அப்போது எதிர்முனையில் பேசியவர், கார்த்திக் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காமலிருக்க பத்து லட்சம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டினார். உடனே நான், சட்டத்துக்கு விரோதமாக செயல்படவில்லை என்று கூறினேன். அதற்கு எதிர்முனையில் பேசியவர், வந்திருக்கும் காவலரிடம் 50,000 ரூபாய் கொடுக்கும்படி தெரிவித்தார். அதற்கு நான் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்ததோடு நாளைக்கு கொடுக்கிறேன் என தெரிவித்தேன்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

இதையடுத்து 13.10.2022-ம் தேதி இன்ஸ்பெக்டரின் டிரைவர் திருமலை, என்பவரும் அவருடன் சீருடை அணியாமல் மப்டியில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் வந்தனர். அவர்கள் 50,000 ரூபாயை லஞ்சமாக மிரட்டி வாங்கிக் கொண்டு சென்றனர். அதன்பிறகு மீதமுள்ள ரூபாயை கேட்டு போலீஸார் மிரட்டினர். எனவே லஞ்சமாக பணத்தை பெற்றவர்கள் மீதும் அதற்கு காரணமான இன்ஸ்பெக்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். புகார் மனுவோடு சி.சி.டி.வி பதிவு ஒன்றையும் வைத்தியர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தார். அதில் மப்டியில் வரும் இருவர் பணம் வாங்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் கமிஷனர் அலுவலக உயரதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

இதுகுறித்து வைத்தியர் சிவசாமி வேலுமணியின் வழக்கறிஞர் சர்ஜத் நைனா முகமது கூறுகையில், “வைத்தியர் மீது கொடுக்கப்பட்ட புகாரில் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் ஏன் போலீஸார் லஞ்சமாக பணத்தை வாங்கினார்கள். மேலும் வைத்தியரை போலி வைத்தியர் எனவும் பொய்யான தகவலைப் போலீஸார் பரப்பிவருகிறார்கள். சிவசாமி வேலுமணியின் மருத்துவமனைக்கு மப்டியில் வரும் போலீஸார், பணத்தை வாங்கிச் செல்லும் வீடியோ பதிவு எங்களிடம் உள்ளது. இந்தப் புகாரில் போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்றார்.

வழக்கறிஞர் நைனா முகமது

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபுவிடம் கேட்டதற்கு, “என் மீது கொடுத்த புகாரில் துளியளவும் உண்மையில்லை. வைத்தியர் சிவசாமி வேலுமணி மீது காவல் நிலையத்தில் வந்த புகார் விசாரணையில் இருக்கிறது. அதில் மேல் நடவடிக்கை எடுக்காமலிருக்க இப்படியொரு குற்றச்சாட்டை என் மீது சுமத்துகிறார்கள். அதே நேரத்தில் காவலர் திருமணி, இன்னொரு காவலர் அங்குச் சென்று பணம் வாங்குவதைப்போன்ற வீடியோ குறித்து போலீஸார் விசாரிக்கட்டும். அப்போது உண்மை வெளிவரும். மேலும் புகாரில் டிரைவரின் போனில் நான் பேசியதாக குற்றம் சுமத்தயிருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்களை ஏன் கொடுக்கவில்லை” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.