திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலையில்  கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளக்கவி ஊராட்சிக்கு உள்பட்ட சின்னூர் பழங்குடி கிராமம்  உள்ளது. எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத சூழலிலும், இங்கு வசிக்கும் மாணவி மகாலட்சுமி ப்ளஸ் டூ முடித்த பின்னர் பி.எஸ்சி நர்ஸிங் படிக்க விரும்பியுள்ளார். கவுன்சலிங்கில், அவருக்குத் தனியார் கல்லூரி கிடைக்க, கட்டணம் செலுத்த முடியாத நிலையில் படிப்பை கைவிட்டுள்ளார். இது குறித்து விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதையறிந்த திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி, மாணவியின் கல்விக்கான செலவை ஏற்றுள்ளது.

மாணவியை நேரில் சந்திக்கச் சென்ற வங்கி அலுவலர்கள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி வளர்ச்சி பிரிவு உதவி பொது மோலாளர் லதா, “மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ராமகிருஷ்ணன், இணை பதிவாளர் காந்திநாதன், பொதுமோலாளர் விநாயக மூர்த்தி ஆகியோர், விகடனில் வந்த செய்தியை பார்த்து மாணவிக்கு உதவ முடிவெடுத்தனர். முதலில் மாணவியின் பெற்றோரிடம் பேசியபோது, `கல்விக் கடன் உதவி வேண்டாம். திருப்பிச் செலுத்தக்கூடிய சூழல் இல்லை’ எனத் தெரிவித்தனர். இதையடுத்து வங்கி அலுவலர்கள், ஊழியர்களிடம் பணம் வசூலித்து உதவ திட்டமிட்டோம். பிறகு உயர் அதிகாரிகள், வங்கியின் நிதியில் இருந்து கல்விக் கட்டணத்தை செலுத்தலாம் என ஆலோசனை தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில், கிளை ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்களுடன் சின்னூர் பகுதிக்கு மாணவியை நேரில் சந்திக்க சென்றோம். சோத்துப்பாறை அணையில் இருந்து கல்லாறு வரை சென்றுவிட்டோம். அங்கிருந்து 7 கிலோ மீட்டர் காடு வழியாக மலை ஏற வேண்டும். இடையே ஓடைகளை கடப்பது சிரமம் என்பதை அறிந்தோம். மேலும் மாணவியின் பெற்றோர்களும் எங்களை கல்லாறு பகுதியில் இருக்க அறிவுறுத்தினர். அங்கு காத்திருந்து மாணவி மற்றும் பெற்றோரை அழைத்துக் கொண்டு திண்டுக்கல் வங்கி அலுவலகத்துக்கு வந்தோம்.

உதவி

மாணவியின் ஆவணங்களை பெற்று, வத்தலகுண்டு கிளையில் வங்கி கணக்கைத் தொடங்கி, அதில் முதற்கட்டமாக 70 ஆயிரம் ரூபாய் வரவு வைத்துள்ளோம். மேலும் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், 25 ஆயிரம் ரூபாயும், மாணவி கல்லூரியில் சேரும்போது 80 ஆயிரம் ரூபாயும் வரவு வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்’’ என்றார். 

சின்னூர் மாணவி மகாலட்சுமிக்கு மட்டுமல்லாது, அங்குள்ள பல மாணவர்களுக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. 

மாணவி மகாலட்சுமி நர்ஸிங் கவுன்சலிங்கில் கலந்து கொண்டபோது அவருக்கு தேனி என்.ஆர்.டி., கல்லூரி கிடைத்ததாகத் தெரிவித்திருந்தார். என்.ஆர்.டி கல்வி குழுமத் தலைவர் டாக்டர் தியாகராஜனிடம் பேசினோம். “கடந்த அக்டோபர் 10-ம் தேதி மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. அதற்கு இணையான ஏ.என்.எம் போன்ற படிப்புகள் உள்ளன.

மகாலட்சுமி

மாணவி விரும்பினால் அந்தப் படிப்பில் இணைந்து கொள்ளலாம். இந்தப் படிப்பை முடித்தால் அரசு செவிலியராக அவர் ஊரிலேயே பணியாற்றலாம். கட்டணம் 2 லட்ச ரூபாயை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம். சீருடை, தங்கும் விடுதி, உணவுக்கான தொகை மட்டும் மாணவி செலுத்தினால் போதும்’’ என்றார். 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.