தமிழ்நாடு கேபிள் டி.வி நிறுவனத்தின் சேவை ஒரு வாரமாக முடங்கி, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் மீண்டு இருக்கிறது. இந்த முடக்கத்துக்கு, `தனியார் நிறுவனத்துக்கு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை’ என்ற குற்றச்சாட்டு குறித்து தமிழக ஐ.டி துறையின் வட்டாரத்தில் விசாரித்தோம்…

“தமிழ்நாட்டில் மொத்தம் 1.13 கோடி கேபிள் இணைப்புகள் உள்ளன. இதில் அதிகபட்சமாக டி.சி.சி.எல் 28 லட்சமும், அரசு கேபிள் 24 லட்சம் என 33 கேபிள் நிறுவனங்கள் பங்கிட்டுக் கொள்கின்றன. அதன்படி, அரசு கேபிள் டிவி மூலமாக பொதுமக்களுக்கு சேவை வழங்குவதற்காக தூத்துக்குடியைச் சேர்ந்த வி.எஸ்.ராஜன் என்பவரின் மந்த்ரா என்று நிறுவனத்திடமிருந்து 37 லட்சத்து 40 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் 614 கோடி மதிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு டெண்டர் அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டது.

தமிழக அரசு கேபிள்

இந்த செட்டாப் பாக்ஸ்களை அதே நிறுவனம்தான் பராமரித்தும் வந்தன. இதற்காக, அரசு பணம் வழங்குகிறது. ஆனால், ஒப்பந்தத்தின் அடிப்படையில் பராமரிப்புக்கான நிதியை அரசு கடந்த 2 ஆண்டுகளாக விடுவிக்கவில்லை. அதேபோல, 3 ஆண்டுகளில் கொடுக்கப்படவேண்டிய செட்டாப் பாக்ஸ்களுக்கான நிதியை 7 ஆண்டுகள் தவணையாக கொடுப்பதாக கூறியும், தவணையை துறை உயர் அதிகாரிகள் விடுவிக்கவில்லை.

இதனால், டெண்டர் விதிகளின்படி விநியோகம் செய்த பாக்ஸ்களுக்கு வட்டியுடன் பணம் தர வேண்டும். அத்துடன் பராமரிப்புக்கான செலவையும் சேர்த்து 200 கோடி ரூபாய்யை உரிய தேதிக்குள் தருவதாக உறுதி அளிக்க வேண்டும் என்று நிறுவனத்தின் சார்பில் அரசு உயர் அதிகாரிகளுக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு உறுதி அளிக்காமல் மந்த்ரா நிறுவனம் சேவைகளை வழங்குவதில் காலதாமதமாக செய்வதாக கூறி 56 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கிடையே செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்ய ராஜன் வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால், மும்பையில் உள்ள அவரது வீட்டில் வங்கி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிவிட்டனர். ஏற்கனவே, பணம் எதுவும் பெறாமல் 2 ஆண்டுகளாக பராமரிப்பு செய்து வந்துள்ளது.

அரசு கேபிள் டி.வி

இதனால், ஆத்திரத்தில் தனது கட்டுப்பாட்டில் உள்ள 21 லட்சம் செட்டாப் பாக்ஸ்களுக்கான சேவையை ராஜன் நிறுத்தி இருக்கிறார்” என்றனர் விரிவாக…

இதனிடையே, தமிழக அரசு கேபிள் டிவி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவின் கீழ் ராஜன் மீது வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையீட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு 90 நாளில் உரிய பணத்தை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 900-க்கும் அதிகமான உள்ளூர் சேனல்கள் இருக்கின்றன. இவற்றை ஒளிபரப்ப மாதம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதன்படி ஆண்டுக்கு சுமார் 200 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. அதேபோல, கேபிள் இணைப்புக்கு 70 முதல் 100 ரூபாய் வரை கட்டணம் செய்யப்படுகிறது.

இதன்மூலம் மாதம் 40 கோடி ரூபாய் வருமானம் இருக்கிறது. அதுபோல ஆபரேட்டர்கள் செலுத்தும் மாத சந்தாவில் FTA எனும் இலவச பேக்கேஜ் 30 ரூபாய் என 36 லட்சம் இணைப்புகள் என்று கணக்கிட்டு பார்த்தால் மாதம் ஒன்றுக்கு சுமார் 8 கோடி ரூபாய் கிடைக்கிறது. அதன்படி, அரசுக்கு நல்ல வருமானத்தை ஈட்டும் துறையாகவே அரசு கேபிள் இருந்திருக்கிறது.

அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தில் 36 லட்சம் இணைப்பு இருந்தது. செட்டாப் பாக்ஸ் இலவசமாக தந்த அரசு அவை பழுதானால் சரி சர்வீஸ் மையங்களை உருவாக்கவே இல்லை. இந்த மெத்தன போக்கை புதிதாக பொறுப்பேற்ற தி.மு.க அரசும் கண்டுகொள்ளாததால் இணைப்புகளின் எண்ணிக்கை 21 லட்சமாக சரிந்து வீழ்ந்து கிடக்கிறது. இந்நிலையில், இணைப்பு சேவையை வழங்கும் நிறுவனத்துக்கும் உரிய தொகையை வழங்காமல் இருப்பது அபத்தத்தின் உச்சம். இதுபோன்ற அலட்சியத்தால் அரசு கேபிள் டி.வி மீட்க முடியாத அகல பாதாளத்தில் விழ்ந்து விடும் என எச்சரிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.