சிறு குறு விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்ட `பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி’ (Pradhan Mantri Kisan Samman Nidhi) திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 67% சரிந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திட்டம் அமலான கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும் பங்கு குறைந்திருப்பது பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியிருக்கிறது.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி

தேர்தல் நேர வாக்குறுதி:

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவந்த நிலையில், பிரதமர் மோடியால் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட திட்டம்தான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி. இந்த திட்டத்தின்மூலம், இந்தியா முழுவதும் உள்ள சிறு, குறு ஏழை விவசாயிகளின் சாகுபடிக்குத் தேவையான இடுபொருட்களை வாங்குவதற்காக ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 5 ஏக்கருக்கு குறைவாக வைத்திருக்கும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மூன்று தவணைகளாக தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 மானியம் மத்திய அரசால் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரதான் மந்திரி கிசான் திட்டம் குறித்து சமூக செயற்பாட்டாளர் கண்ணையா குமார் (Kanhaiya Kumar) தாக்கல் செய்த ஆர்.டி.ஐ மனுவுக்கு மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் அளித்திருக்கும் பதில் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், விவசாயிகள் மத்தியில் பெரும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி

67 சதவிகிதமாக சரிந்த பயனாளிகளின் எண்ணிக்கை:

மத்திய வேளாண் அமைச்சகம் அளித்த தரவுகளின் படி, பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின்கீழ் முதல் தவணையாக மானியம் பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், சமீபத்திய 11-வது தவணையில் மானியம் பெற்றவர்கள் எண்ணிக்கை 67% சரிந்திருக்கிறது. குறிப்பாக, இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 2019-ல் விவசாயப் பயனாளிகள் எண்ணிக்கை 11.84 கோடியாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் வழங்கப்பட்ட 11-வது தவணையில் விவசாயப் பயனாளிகள் எண்ணிக்கை 3.87 கோடியாக சரிந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி

மாநில வாரியாக சரிந்த எண்ணிக்கை:

ஒவ்வொரு தவணையிலும் அதிகரித்திருக்க வேண்டிய பயனாளிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்திருக்கிறது. குறிப்பாக, ஆறாவது தவணைக்கு பிறகு இந்த எண்ணிக்கை வேகமாக சரிவை நோக்கி சென்றிருக்கிறது. அதாவது, 6-வது தவணையின்போது மானியம் பெற்ற விவசாயிகள் எண்ணிக்கை 9.87 கோடியாகவும், 7-வது தவணையின்போது 9.30 கோடியாகவும், 8-வது தவணையின்போது 8.59 கோடியாகவும், 9-வது தவணையின்போது 7.66 கோடியாகவும் குறைந்திருக்கிறது. மிக முக்கியமாக, 10-வது தவணையின்போது 6.34 கோடியாக இருந்த விவசாயப் பயனாளிகள் எண்ணிக்கை 11-ஆவது தவணையின்போது 3.87 கோடி என பாதியாகக் குறைந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த எண்ணிக்கை பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களிலும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

குறிப்பாக, பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேசத்தில் பயனாளிகள் எண்ணிக்கை 88.63 லட்சத்திலிருந்து வெறும் 12 ஆயிரமாக, அதாவது 99.90% குறைந்திருக்கிறது. தற்போது தேர்தலை சந்திக்கவுள்ள குஜராத்தில் 63.13 லட்சமாக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை, 28.41 லட்சமாகவும், ஹரியானாவில் 19.73 லட்சமாக இருந்த பயனாணிகளின் எண்ணிக்கை 11.59 லட்சமாகக் குறைந்திருக்கிறது. இதேபோல, சத்தீஸ்கரில் 94.7%, ஆந்திராவில் 49.4%, மஹாராஷ்டிராவில் 65.9%, பீகாரில் 91.80% என தொடர்ந்து வீழ்ச்சியடைந்திருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதல் தவணையில் 46.80 லட்சமாக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை 11-வது தவணையில் 23.04 லட்சமாக குறைந்திருக்கிறது.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி

விவசாயிகள் வேதனை:

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வேதனை தெரிவித்திருக்கும் அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அசோக் தாவ்லே, “விவசாயப் பயனாளிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. 2022-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, மூன்றில் இரண்டு பங்கு விவசாயிகள் மானியம் பெறவில்லை, பயனடையவில்லை! இப்படித் தொடர்ந்து விவசாயப் பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு உருப்படியான ஒரு காரணத்தையும் மத்திய வேளாண்மை அமைச்சகம் தெரிவிக்கவில்லை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பிரதான் மந்திரி கிசான் திட்டத்தை படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்வதாகத் தோன்றுகிறது. விவசாயிகளின் உண்மையான பிரச்னையை மூடிமறைக்க மத்திய அரசு மாயாஜாலம் செய்கிறது” எனத் தெரிவித்தார்.

சந்தேகம் கிளப்பும் அன்புமணி:

இந்தநிலையில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “பிரதான் மந்திரி கிசான் திட்டப் பயனாளிகள் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம் பற்றி மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்த வேண்டும்!” எனக் கோரிக்கை வைத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விவசாயிகளுக்கான மானியத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை குறைந்திருப்பதை ஒப்புக்கொண்டிருக்கும் மத்திய அரசின் வேளாண் அமைச்சகம் அதற்கான காரணம் என்ன? என்பதை தெரிவிக்கவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய சமூகம் என்றால் அது விவசாயிகள் தான். அவர்களின் முன்னேற்றத்திற்காக கொண்டு வரப்பட்ட திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.

பிரதமர் மோடி

நடப்பாண்டில் இந்த வீழ்ச்சி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கை எப்போது குறையத் தொடங்கியதோ, அப்போதே அதற்கான காரணங்கள் என்ன? என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்து அதை சரி செய்திருக்க வேண்டும். ஆனால், இரு ஆண்டுகளாக வீழ்ச்சி தொடரும் நிலையில் அதற்கான காரணங்களை கண்டறிய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அரசுகளும் தங்களின் பங்கிற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது சோகம்.

அன்புமணி

விவசாயிகளின் வாழ்வாதாரம் ஈடு இணையற்ற அளவில் அதிகரித்து அதன் காரணமாக அவர்கள் மானியம் வாங்குவதை நிறுத்திக் கொண்டிருந்தால் அது மகிழ்ச்சி தான். ஆனால், உழவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு நலன் பயக்கும் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை குறைவதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. எனவே, மூலதன மானியத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம் பற்றி மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் தெரியவரும் காரணங்களை சரி செய்து தகுதியுள்ள அனைத்து உழவர்களுக்கும் மூலதன மானியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.