தலைநகரை உலுக்கிய கொலைச் சம்பவம்!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சமீபத்தில் இளம்பெண் ஒருவர், அவருடன் லிவ் இன் உறவு முறையில் இருந்த காதலனால் 35 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மும்பையைச் சேர்ந்த இளைஞர் அஃப்தப் அமீன் பூனாவாலா. இவர் மும்பையில் மல்டிலெவல் கால் சென்டரில் பணியாற்றிய ஷ்ரத்தா(27) என்பவரை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ஷ்ரத்தாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி டெல்லியின் மெஹ்ரவல்லியில் உள்ள சத்தர்பூர் பஹாடி பகுதியில் குடியேறி லிவ் – இன் முறையில் வசித்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் அஃப்தப்பிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, ஷ்ரத்தா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த மே 18-ம் தேதி ஷ்ரத்தாவை, அஃப்தப் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியுள்ளார். இறுதியில் நீண்ட நாட்களாக ஷ்ரத்தாவை தொடர்புகொள்ள முடியாததால் எழுந்த சந்தேகத்தால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் அஃப்தப் வசமாக சிக்கிக் கொண்டார். விசாரணையில் ‘டெக்ஸ்டர்’ உள்ளிட்ட பல க்ரைம் த்ரில்லர் படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றை பார்த்து எந்தவித பிசிறில்லாமல் சம்பவத்தை அஃப்தப் செய்து முடித்திருக்கும் தகவல் வெளியாகி கேட்போரை திகைக்க வைத்தது.

image

நமக்கு ஏன் லிவ் இன் வாழ்க்கை? – மத்திய அமைச்சர் கேள்வி

இச்சம்பவம் குறித்து மத்திய இணை அமைச்சர் கவுசல் கிஷோர் கூறிய கருத்து, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கொலை வழக்கு குறித்து பேசிய அமைச்சர் கிஷோர், “நன்கு படித்த பெண்களுக்குதான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. தங்கள் எதிர்காலத்தின் முடிவை அவர்கள் தன்னிச்சையாக எடுக்கிறார்கள். அவர்கள் ஏன் லிவ் இன் வாழ்க்கையில் இருக்க வேண்டும். பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடி திருமணம் செய்து வாழ வேண்டும். இதுபோன்ற லிவ் இன் உறவில் வாழ்வதை அவர்கள் செய்யக் கூடாது” என தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் கருத்து பாதிக்கப்பட்ட பெண்களை குறை சொல்வதாக இருப்பதாக பலரும் குற்றம் சாட்டத் தொடங்கினர். சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “பெண்கள் முன்னேற்றத்தில் பிரதமர் உண்மையிலேயே அக்கறை கொண்டவர் என்றால், இந்த மத்திய அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

image

இந்த கொலை வழக்கு சம்பவம் ஒரு புறமிருக்க, உண்மையிலேயே லிவ் இன் போன்ற உறவு முறைகளால்தான் சமூகம் சீர்கெடுகிறதா? இந்திய சமூகத்தில் நிலவும் உறவுமுறை சிக்கல்கள் என்ன? என்பது குறித்தும் தற்போது காண வேண்டியது அவசியமாகிறது.

இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை பெண்ணோ, ஆணோ யாராக இருப்பினும், திருமணம் செய்து உறவில் நீடிக்க வேண்டும். இல்லையேல் அந்த உறவு அபத்தம் எனும் பார்வை பெரும்பாலானோரிடத்தில் காணப்படுகிறது. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளும் உறவு முறை மட்டுமே இங்கே புனிதப்படுத்தப்படுவதும், இதர உறவுகள் கொச்சைப்படுத்தப்படுவதும் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. பெற்றோர் சம்மதத்துடன் நடைபெறும் திருமண வாழ்க்கை கசந்து வெளியேறுவோரும் விமர்சனங்களில் இருந்து தப்புவதில்லை.

உறவுமுறைகளுக்கெல்லாம் ஆதிப்புள்ளி ‘காதல்’ . ‘காதலுக்கு காரணம் இருக்க முடியாது; காரணம் இருந்தால் அது காதலாக இருக்க முடியாது’ எனும் புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் ஷேக்‌ஷ்பியரின் கவிதையைக் மேற்கோள் காட்டியே உறவுமுறைகள் குறித்து நாம் குறிப்பிட தொடங்க முடியும். பெற்றோர் சம்மத திருமணத்துக்கு பின்னரோ, லிவ் இன் உறவோ எதுவாக இருப்பினும் அதில் ‘காதல்’ நிலைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த உறவு ‘உப்பில்லா பண்டம்’ போல சப்பெனவே இருக்கும் என்பதே நிதர்சனம். இல்லாவிட்டால் முடிவில் எஞ்சுவது ‘உறவு முறிவு’தான்.

image

பிற நாடுகளில் காதலையே டேட்டிங், ரிலேஷன்ஷிப், மூவிங் டுகெதர், திருமணம் என பல கட்டங்களாக பிரித்து வைத்திருக்கின்றனர். பிற வகை உறவுகளிலும் கேசுவல் செக்ஸ், பிளைண்ட் டேட், செக்ஸ் மேட் என பலவகைகள் உண்டு. இவற்றையெல்லாம் கடைபிடிக்கும் இளைஞர்களைக் கண்டவுடனே, கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பம் உடைந்துவிட்டதாக இந்திய சமூகத்தினர் பதறுகின்றனர். தன்னிச்சையாக முடிவெடுப்பது மட்டுமே குற்றங்களுக்கு வித்து என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

அதேசமயம் நடப்பாண்டின் ஏப்ரலில் பெண் ஒருவரின் பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பான மனு மீதான விசாரணையின் போது, மத்திய பிரதேச உயர்நீதிமன்ற இந்தூர் கிளை நீதிபதி சுபோத் அபியங்கர் கூறியதாக செய்தி ஒன்று வெளியானது.

அதில், “அண்மைக் காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் உறவுகளால் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கவனத்தில் கொள்ளும்போது, லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்பை தடை செய்யலாம் என்பதை இந்த நீதிமன்றம் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த உறவு முறை இந்திய சமூகத்தின் நெறிமுறைகளை மூழ்கடித்து, காம நடத்தையை ஊக்குவிக்கிறது. மேலும் பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது. பிரிவு 21 வாழ்வதற்கான உரிமை, தனிப்பட்ட சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் இந்த உறவு முறை பாலியல் குற்றங்களை அதிகரிக்க செய்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதியின் கருத்தை கருப்பொருளாக கொண்டு அப்போதே இணையத்தில் விவாதங்கள் சூடுபிடித்தன.

இருப்பினும் கடந்த டிசம்பர் 8, 2021-ம் ஆண்டு பிபிசியில் வெளியிடப்பட்ட தகவலில், 2018-ம் ஆண்டு 1.6 லட்சம் ஜோடிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி 93% இந்தியர்கள் பெற்றோர் நிச்சயித்து திருமணம் செய்துள்ளனர். வெறும் 3% பேர் மட்டுமே காதல் திருமணம் செய்துள்ளனர். காதலித்து வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டவர்கள் வெறும் 2% மட்டுமே. அப்படியிருக்கையில் காதலித்து லிவ் இன் உறவு முறையில் இருப்பவர்களால் மட்டுமே குற்றங்கள், குடும்ப வன்முறைகள் நடைபெறுவதாக இன்றளவும் கூறப்படுகிறது.

image

உதாரணத்துக்கு உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரீத்தி – உபேந்திரா தம்பதியின் வழக்கை மேற்கோள் காட்டலாம். கடந்த 2021-ம் ஆண்டு, டிசம்பரில் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த மே மாதம் பிரீத்தியை, உபேந்திரா கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். விசாரணையில் திருமணத்திற்கு முன்னதாக உபேந்திரா வேறு ஒரு பெண்ணை காதலித்ததும், அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரீத்தியை திருமணம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே தனது காதலை நிரூபிக்கும் விதமாக, பிரீத்தியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வாறு ஈர்ப்பில்லாத ஒருவரை சமூக நெறிமுறைகளின் பேரில் திருமணம் செய்து நிகழ்த்தப்படும் குற்றங்கள் கண்டுகொள்ளப்படுவதுமில்லை.

இந்நிலையில் நடப்பாண்டின் ஆகஸ்ட் 29-ம் தேதி, மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்டது தொடர்பாக பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், “குடும்ப உறவுகள் என்பது எப்போதும் பாரம்பரிய கட்டமைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் என அவசியமில்லை. லிவ் இன், தன்பாலின உறவாளர்கள் இணைந்து நடத்துவதும் குடும்ப அமைப்புதான். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பதால், அப்பெண் தனது ஒரே உயிர்வழி வாரிசை பராமரிக்க மகப்பேறு விடுப்பு பெறுவதற்கு தடை விதிக்க முடியாது” என கூறப்பட்டது. இந்த தீர்ப்பு கடந்த 2018-ம் ஆண்டு வழங்கப்பட்ட தன்பாலின ஈர்ப்பு கிரிமினல் குற்றமாகாது எனும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

image

ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பிடித்திருந்தால் மட்டும், அந்த உறவை தொடர்வதற்கான அனுமதியை அளிக்க இந்திய சமூக கலாச்சார மரபு மறுக்கிறது. பிற நாடுகளில் இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘லிவ் இன்’ உள்ளிட்ட வாழ்வியல் நடைமுறைகளை விவாதித்து, அதற்கேற்றார்போல் இன்றைய தலைமுறையினரை தயார்படுத்துதலே சரியாக இருக்கும். அதனை விடுத்து அவற்றை மறுப்பதுவே குற்றங்களுக்கு மேலும் வழிவகுக்கும். குற்றங்கள் நிகழ்வதற்கு படித்த, படிக்காத பெண்கள் என வேறுபாடு கிடையாது.

அத்துடன் இன்றைய இணைய உலகில் குற்றங்களை மேற்கொள்ள தூண்டும் விஷயங்களும், அவற்றை மறைக்கும் வழிமுறைகளும் கொட்டிக் கிடக்கின்றன. அதற்கு ‘டெக்ஸ்டர்’ பார்த்து தடயங்களை மறைத்த அஃப்தப்பின் வழக்கே சாட்சி. இளைஞர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை அளிக்க முறையான நடவடிக்கைகளை அரசு தரப்பில் மேற்கொள்வதே குற்றங்களை வெகுவாக குறைக்கும். இல்லையேல் குற்றங்கள் நிகழ்வதும் தொடர்கதைதான்!

– ராஜேஸ் கண்ணன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.