கெங்கவல்லி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்து விட்டதாக பெற்றோர்கள் புகாரளித்தனர். குழந்தைக்கு சங்கடையில் பால் கொடுத்ததால் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பச்சமலை, எடப்பாடி, வலசக்கல்பட்டி, கடம்பூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் என ஏராளமானோர் சிகிச்சைக்காக வருவது வழக்கம். இதனிடையே கடந்த திங்கட்கிழமை எடப்பாடி மலை கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் இன கூலித் தொழிலாளி நவநீதன் என்பவர், தனது மனைவி சரிதாவை இரண்டாவது பிரசவத்திற்காக கூடமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளார்.

அன்று இரவே சரிதாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் மூன்றாவது நாள் குழந்தைக்கு மருத்துவர்கள் அம்மை (தடுப்பூசி) போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நான்காவது நாளான இன்று காலை குழந்தைக்கு சங்கடையில் பால் கொடுத்ததாகவும், இதில் குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் (மருத்துவர்கள் தரப்பில்) கூறப்படுகிறது.

image

இதையறிந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாகக்கூறி சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லுங்கள் என கூறியுள்ளனர். சந்தேகமடைந்த பெற்றோர்கள் குழந்தையை பார்த்துள்ளனர். அப்போது குழந்தை இறந்து சிறிது நேரத்திலே உடல் முழுவதும் அங்காங்கே நிறம் மாறியிருக்கிறது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அளித்த தவறான சிகிச்சையால்தான் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி கெங்கவல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

image

உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் குழந்தை இறப்பில் சந்தேகம் இருந்தால் குழந்தையை சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பரிசோதிக்கலாம் என அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். எந்த விபரமும் அறியாத பயந்து போன மலைவாழ் மக்கள் பச்சிளம் குழந்தையை பிரேத பரிசோதனை செய்ய மறுத்து, இறந்துபோன குழந்தையை மருத்துவமனையில் இருந்து வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.