தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதற்கு தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி.தங்கபாலு, எம்.பிக்கள் திருநாவுக்கரசர், விஜய் வசந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் ஒற்றுமை யாத்திரை முன்னிட்டு ஒவ்வொரு எம்.எல்.ஏ தொகுதிகளில் 100 கொடிகள் ஏற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக தலைவர்கள் வந்திறங்கியதும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட காங்கிரஸார் 6-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் வாகனங்களில் அங்கு வந்து சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டனர்.

சத்தியமூர்த்தி பவன் – காங்கிரஸ்

அவர்கள் அனைவரும் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் என்று கூறினர். பின்னர் அவர்கள் அனைவரும் திடீரென கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்டு, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரையும், அவரால் நியமிக்கப்பட்ட 3 வட்டார தலைவர்களையும் உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

இதனால் சத்தியமூர்த்திபவனில் திடீரென பரபரப்பு நிலவியது. அவர்கள் தலைவர்களை அங்கிருந்து நகர விடாமல் தொடர்ந்து கோஷம் எழுப்பியவாறே இருந்தனர். மாவட்ட தலைவரை உடனடியாக மாற்றினால் தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கே.எஸ்.அழகிரியிடம் கூறினர். அவர் பிரச்னை குறித்து முறையாக விசாரிக்கப்படும் என கூறி அவர்களை சமாதானப்படுத்தினார்.

கே.எஸ்.அழகிரி

எனினும், அவர்கள் தொடர்ந்து பிரச்னை செய்ததால் பரபரப்பு நிலவியது. பிறகு கே.எஸ்.அழகிரி அலுவலகத்திற்குள் சென்று விட்டார். அவரின் ஆதரவாளர்கள், ரூபி மனோகரன் ஆதரவாளர்களை உள்ளே விடாமல் கேட்டை மூடினர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு கருதி போலீஸார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே, ஆலோசனைக் கூட்டதை முடித்து விட்டு கிளம்பிய கே.எஸ்.அழகிரியை அவர்கள் மீண்டும் முற்றுகையிட்டனர்.

அவரை கட்சியின் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் உள்ளிட்டோர் பத்திரமாக வெளியே அழைத்துச் சென்று அனுப்பி வைத்தனர். அப்போது ரஞ்சன் குமார் ஆதரவாளர்களுக்கும், ரூபி மனோகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு கைகலப்பு ஏற்பட்டு மோதலில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொண்டனர். இதில், களக்காடு நகராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோஷ்வா மற்றும் கட்சியினர் டேனியல், ராபர்ட் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

முற்றுகை போராட்டம்

இதனால் சத்தியமூர்த்தி பவனே களேபரமாக காட்சி அளித்தது. பின்னர் உடனடியாக, போலீஸார் மோதலில் ஈடுபட்டவர்களை விலக்கி விட்டனர். சிறிது நேரத்தில் அனைவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதையடுத்து ஒருவழியாக மாலை சுமார் 3.30 மணி முதல் இரவு சுமார் 9 மணி வரை நடந்த களேபரம் முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து பேட்டியளித்த ரூபி மனோகரன் ஆதரவாளர் ஜோஸ்வா, “நியாயமான கோரிக்கைக்காக போராட்டம் நடத்தினோம். குண்டர்கள் எங்களை தாக்கினார்கள். எங்களுடைய கோரிக்கை நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை நீக்க வேண்டும் என்பதுதான்” என்றார்.

காங்கிரஸ்

தொடர்ந்து பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமார், “கட்சிக்கு சம்பந்தம் இல்லாத பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் காங்கிரஸ் அலுவலகம் வந்து கலவரத்தில் ஈடுபட்டனர். சமூக விரோதிகள் தான் கலவரத்திற்கு காரணம். நாங்கள் அவர்களை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.