மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக ஐ.டி-விங் மாநில தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், “அமைச்சர் செந்தில் பாலாஜி அவர் துறையில் செய்யும் ஊழல் குறித்து, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ, தமிழக தணிக்கை அதிகாரி என நான்கு பேருக்குப் புகார் அனுப்பி இருந்தேன். புகாரை ஏற்று லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து எனது பதிலை பெறுவதற்காக 10.11.2021 அன்று வர சொல்லி இருந்தார்கள். என்னிடம் இருக்கும் தகவல்கள், ஆதாரங்கள் அனைத்தும் இ-மெயில் மூலமாகவும், எழுத்துப் பூர்வமாகவும் கொடுத்திருக்கிறேன்.

எங்களின் முக்கிய குற்றச்சாட்டு, தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் நடக்கும் ஊழல் குறித்து. ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் குறைந்தபட்சம் ஐந்திலிருந்து, பத்து சதவீதம் நிர்ணைக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ரூ.130 கோடி விற்பனை ஆகிறது என்றால் பத்து சதவீதம் முறைகேடாக விற்பனை செய்யும் போது அந்த தொகை எவ்வளவு என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் 80% பார்கள் முறைகேடாகத்தான் இயங்கி வருகிறது. அப்படி இயங்கும் பார்களை ‘கரூர் கம்பெனி’ என்று ஒரு குரூப் கட்டுப்படுத்துகிறது.

செந்தில்பாலாஜி

லைசன்ஸ் வாங்கிய பார்களின் உரிமையாளர்கள் மாதம் மாதம் டிடி-யில் பணம் கட்டுவார்கள். அந்த டிடி தொகையில் 33% நகர்ப் புறங்களிலும், 25% கிராமப்புறங்களிலும் இல்லீகலாக கரூர் கம்பெனிக்கு செலுத்துகிறோம் என்கிறார்கள். இது போல் இவர்களுக்குள்ளாகவே சட்டதிட்டங்கள் வகுத்து வசூல் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் இரவும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் டாஸ்மாக் அதிகாரிகள் மூலமாக சேல்ஸ் டீட்டல்ஸ் அனைத்தும் ஒரு தனியார் கம்பெனிக்கு பகிரப்படுகிறது. அதன் அடிப்படையில், ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏஜென்டுகள் போய் 5,000 பார்களில் பணம் கலெக்‌ஷன் செய்கிறார்கள். சட்டப்படி பார்களில் மதுபானம் விற்க கூடாது என்று இருக்கும் போது 24 மணி நேரமும் பார்கள் மூலமாக இல்லீகலாக மதுபானம் சப்ளை செய்யப் படுகிறது. டாஸ்மாக்கில் வாங்கி வந்து இங்குப் பயன்படுத்தலாமே தவிர பார்களில் விற்க கூடாது. ஆனால், பார்களில்தான் இல்லீகலாக ஸ்டாக் வாங்கி 50% சேல்ஸ் நடக்கிறது.

இவ்வாறு நடக்கும் முறைகேடுகளால் ஒரு நாளைக்கு ரூ.50 கோடி வரை இல்லீகலாக இந்த துறையில் பணம் எடுக்கப்படுகிறது. இது மிகப்பெரும் ஊழல். அரசின் ஒரு துறையில் தனியார் நிறுவனம் ஒன்று நுழைந்து இருப்பது அமைச்சரின் ஆதரவு இல்லாமல் நடக்காது. அதோடு தமிழகத்தில் இருக்கும் கிட்டத்தட்டப் பத்தாயிரம் கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள், டாஸ்மாக் அதிகாரிகள், ரெவென்யூ அதிகாரிகள், போலீஸ் என எல்லோருக்கும் தெரிந்துதான் இந்த ஊழல் நடக்கிறது. இவ்வளவு இல்லீகலாக மதுபானம் விற்று அடுத்துவரும் சமூகத்தைக் கெடுத்து, அப்படி என்ன சம்பாதிக்க வேண்டும். இதனால்தான் இந்த விஷயத்தைத் தமிழ்நாடு பா.ஜ.க தீவிரமாக எடுத்திருக்கிறோம். சமுதாய மாற்றத்திற்கான இந்த விஷயத்தில் எப்போதும் பா.ஜ.க பின்வாங்கப் போவதில்லை.

பார்

ஒரு டீ கடை இரவு 11 மணிக்குமேல் திறந்திருந்தால் உடனடியாக மூட சொல்கிறீர்கள். இல்லீகலாக 24 மணி நேரமும் பாரில் ரூ.10-க்கு பொருள் வாங்கி ரூ.200-க்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதை போலீஸ் கேட்க முடியாதா… எனவே அதிகாரிகள்தான் திருந்த வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள். இந்த சிஸ்டத்தில் இருக்கும் அதிகாரிகள் இன்று வேண்டுமானால் சந்தோஷமாக இருக்கலாம். நாளை உங்கள் குழந்தைகளும் இதில் திக்கு தெரியாமல் நிற்பார்கள் என்பதற்காகத்தான் போராடுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.