“தைரியம் இருந்தால் ஆளுநர் மாளிகைக்குள் புகுந்து என்னை சாலையில் தாக்குங்கள் என்று கேரளாவை ஆளும்” என கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கடுமையாக பேசியுள்ளார் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான்.

ஒரு மாநிலத்தின் ஆளுநர் இப்படி பேசும் அளவுக்கு கேரளாவில் என்ன நடக்கிறது என்று பலரும் விழிப்பிதுங்கி நிற்கின்றனர். கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு விஷயங்களில் உரசல்கள் இருந்து வந்தன. அந்த உரசல்கள் இப்போது சற்றே தீவிரமாகி கொழுந்துவிட்டு எரியும் விவகாரமாக மாறி வருகிறது. இப்போது 11 துணைவேந்தர்கள் நியமனத்தில் யு.ஜி.சி விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை எனக் கூறி அவர்களைப் பதவி விலக வேண்டும் என ஆளுநர் அண்மையில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

image

இதே ஆளுநர் கடந்த மாதத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசியபோது பஞ்சாபை ஓவர்டேக் செய்து கேரளா நாட்டின் போதைப் பொருள் தலைநகராக மாறுவதாகவும், மாநிலத்தின் முக்கிய வருவாயாக லாட்டரி மற்றும் மதுபானம் இருப்பதைப் பார்த்து வெட்கப்படுவதாகவும் ஆளும் அரசை கடுமையாக சாடினார். இதுபோன்ற விவகாரங்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்க பரிவார் அமைப்புகளின் மையங்களாக மாற்ற ஆளுநர் முயல்வதாகக் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த மோதல்கள் நாளுக்கு நாள் கடுமையாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, கட்சியின் மாநிலச் செயலாளரும், பொலிட்பீரோ உறுப்பினருமான எம்.வி.கோவிந்தன் பேசியபோது “நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் ராஜ்பவன் நடைபயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தொடங்கி வைக்கிறார். ராஜ்பவன் நோக்கி நடைபயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக கல்வித் துறையைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பார்கள்” என தெரிவித்தார்.

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ஆரிப் முகமது கான் “நவம்பர் 15 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்த வேண்டாம். நான், ஆளுநர் மாளிகையில் இருக்கும் போது போராட்டம் நடத்துங்கள். நான் அங்கு வருகிறேன். அப்போது பொது விவாதம் நடத்துவோம். பல்கலைக்கழக துணை வேந்தர்கள் தங்கள் கடமையைச் செய்ய விடாமல் தடுக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் சட்டம் – ஒழுங்கு பிரச்னையை உருவாக்குகிறார்கள். மோசமான விளைவுகளை சந்திப்பீர்கள் என சிலர் என்னை மிரட்டுகின்றனர். நான் அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். தைரியம் இருந்தால் ஆளுநர் மாளிகைக்குள் புகுந்து என்னை சாலையில் வைத்து தாக்குங்கள்” என்று பகிரங்கமாக பேசியுள்ளது மோதலை இன்னும் தீவிரமாக்கியிருக்கிறது.

மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில் ஒரு சில குறிப்பிட்ட ஊடகங்களுக்கு பேட்டியளிக்க மாட்டேன் என்று சொன்ன ஆளுநர், அந்த ஊடகங்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற சொன்னார். இந்த செயலுக்கு இப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. “ஊடக சுதந்திரம் மறுக்கப்படும் இடத்தில் ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. கேரள ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு முரணான செயல்களைச் செய்து, பிரபலமாக இருக்கவும் செய்திகளை உருவாக்கவும் முயற்சிக்கிறார். ஊடகங்களுக்கு தடை விதித்த கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மன்னிப்பு கேட்க வேண்டும். இழந்த உரிமைகளை மீட்டெடுக்க பத்திரிகையாளர்கள் சங்கம் போராட்டம் நடத்த வேண்டும்” என்று அம்மாநில எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன் பேசியுள்ளார்.

image

கேரளாவில் நடக்கும் ஆளுநர் மற்றும் ஆளும் அரசுக்கு இடையிலான மோதலில் காங்கிரஸ் பெரிதும் ஆர்வம் காட்டாமல் அமைதி காக்கிறது. ஆனால் பாஜக ஆளுநருக்கு ஆதரவாக இருக்கிறது. இந்நிலையில் ஒட்டுமொத்த கேரளாவும் நவம்பர் 15 ஆம் தேதி என்ன நடக்கும் என ஒட்டுமொத்த கேரளாவும் எதிர்நோக்கியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.